திமுக அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை யார் விசாரிக்கலாம் என்பதை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
திமுக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, வளர்மதி உள்ளிட்டோர் தங்கள் மீதான பல்வேறு வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் மீதான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மீண்டும் விசாரித்து வருகிறார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். கடந்த வாரம் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்குகளை மறு விசாரணை செய்வதற்கு தலைமை நீதிபதியின் அனுமதியை பெற்றாரா என்பது குறித்து பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தாக்கல் செய்த பதிலில், “மறு விசாரணைக்கு அனுமதிக் கோரி, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதம் தலைமை நீதிபதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் தலைமை நீதிபதி அந்த கடிதத்தை பார்ப்பதற்கு முன்பாகவே நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் இந்த வழக்கை விசாரிக்க துவங்கிவிட்டார்" எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “வழக்குகளுக்கான நடைமுறையை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முறையாக பின்பற்றவில்லை” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள், “அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை யார் விசாரிப்பது என்பதை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியே முடிவு செய்யலாம். தலைமை நீதிபதி இந்த வழக்குகளை எந்த நீதிபதிக்கு வேண்டுமானாலும் மாற்றலாம்" என உத்தரவிட்டனர்.
இதையும் வாசிக்கலாமே...
ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம்... பிரதமர் பெயரில் போலி கடிதம் தயாரித்த இளம்பெண்!
'லால் சலாம்' படத்தை வெளியிட தடை!?
கட்சியைக் கைப்பற்ற சாட்டை துரைமுருகன் திட்டம்... என்ஐஏ சோதனையில் வெளியான அதிர்ச்சி!
நடிகர் விஜயால் இத்தனை கோடி நஷ்டமா?: தீயாய் பரவும் தகவல்!
நடிகை ஜெயலட்சுமிக்கு கொலைமிரட்டல்... போலீஸில் பரபரப்பு புகார்!