`போலீஸ் நடவடிக்கை அதிர்ச்சியளிக்கிறது'- மல்யுத்த வீராங்கனைகளுக்கு கும்ப்ளே ஆதரவு

 அனில் கும்ப்ளே
அனில் கும்ப்ளே

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருக்கு எதிராக போராடிவரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர் பிரிஜ் பூஷன். பாஜக எம்பியாக இருக்கும் இவரும், சில பயிற்சியாளர்களும் பாலியல் தொல்லை கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனைகள் புகார் அளித்தனர். ஆனால், அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, பிரிஜ் பூஷன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு விளையாட்டு வீரர்களும், அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

பாஜக நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின. பிரிஜ் பூஷன் உள்ளிட்டோர் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இதனிடையே, இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருக்கு எதிராக போராடிவரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே ஆதரவு தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றபோது மல்யுத்த வீராங்கனைகளை காவல்துறையினர் கையாண்ட விதம் குறித்து கேள்விப்பட்டபோது அதிர்ச்சி அடைந்ததாகவும், சரியான பேச்சுவார்த்தை மூலம் எந்த பிரச்சினையையும் தீர்க்க முடியும் என்றும் இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே, 45 நாட்களில் இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் மீறினால் இடைநீக்கம் எனவும் உலக மல்யுத்த கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in