மல்யுத்த சம்மேளன தலைவர் மீது பாலியல் புகார் - போராடும் வீரர்கள் பிரதமருக்குக் கோரிக்கை

மல்யுத்த சம்மேளன தலைவர் மீது பாலியல் புகார் - போராடும் வீரர்கள் பிரதமருக்குக் கோரிக்கை
Updated on
1 min read

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் தங்களின் கோரிக்கைகளை கேட்கவேண்டும் என இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருக்கு எதிராக போராடி வரும் மல்யுத்த வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகட், பஜ்ரங் புனியா, சக்ஷி மாலிக், ரவி தஹியா மற்றும் தீபக் புனியா உள்ளிட்ட வீரர்கள் இந்திய மல்யுத்த சம்மேளனம் மற்றும் அதன் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் புதன்கிழமை போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத்துக்கு நாடு முழுவதும் உள்ள மல்யுத்த வீரர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் அதன் பயிற்சியாளர்கள், இளம் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வருவதாக மல்யுத்த வீரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தவறான நிர்வாகம் காரணமாக கூட்டமைப்பை முழுமையாக மாற்றியமைக்க வேண்டும் என்றும், பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

போராட்டம் குறித்து இன்று பேசிய ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, "விளையாட்டு வீரர்கள் தங்கள் பயிற்சியை விட்டுவிட்டு இங்கு அமர்ந்திருப்பது எங்களுக்கு வருத்தமளிக்கிறது. எங்கள் போராட்டம் இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிராக மட்டுமே. எங்கள் கோரிக்கைகளை கேட்குமாறு பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரிடம் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். பிரிஜ் பூஷன் சரண் சிங் முன்வருவதற்கு நாங்கள் காத்திருக்கிறோம். நாங்கள் எங்கள் வாழ்க்கையை பணயம் வைத்து இங்கு இருக்கிறோம். இந்த போராட்டம் இளம் மல்யுத்த வீரர்களுக்கான மல்யுத்தத்தின் எதிர்காலமாக இருக்கும்" என்று கூறினார்.

பிரிஜ் பூஷன் சரண் சிங்
பிரிஜ் பூஷன் சரண் சிங்

மேலும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் நிதி முறைகேடுகள் புகார் குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷாவுக்கு மல்யுத்த வீரர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சில மல்யுத்த வீரர்கள் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூருடன் இன்று அதிகாலை வரை நீடித்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in