வைர மோதிரம், லேப்டாப், ஸ்மார்ட் போன், டிவி... வாக்காளர்களுக்கு குலுக்கல் பரிசுகளை வாரி வழங்க கலெக்டர் உத்தரவு

பரிசுகள்
பரிசுகள்

மக்களவைத் தேர்தலில் வாக்களர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில், அவர்களை அதிர்ஷ்ட பரிசு மழையில் நனைய வைக்க போபாலில் ஏற்பாடு செய்துள்ளனர்.

மிகப்பெரும் பொருட்செலவு, மனித உழைப்பு ஆகியவற்றின் மத்தியில், பிரதமர் உள்ளிட்ட அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் ’மக்களவைத் தேர்தல் 2024’ இன்று தொடங்கியுள்ளது. தமிழகம் உட்பட முதல்கட்ட வாக்குப்பதிவுக்கான மாநிலங்களில் மக்கள் திரளாக வாக்களித்து வருகின்றனர்.

மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலுக்காக, நாடு முழுவதுமே ஏற்பாடுகள் விமரிசையாக நடைபெற்று வருகின்றன. முழுமையான வாக்குப்பதிவு நடக்கும்போது மட்டுமே, இந்த தேர்தலின் நோக்கம் நிறைவேறுகிறது. எனவே நாட்டின் பல்வேறு இடங்களிலும் வாக்குப்பதிவினை அதிகரிக்கச் செய்வதற்காக சுவாரசியமான ஏற்பாடுகள் பலவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மக்களவைத் தேர்தல்
மக்களவைத் தேர்தல்

தமிழகத்தில் சில உணவகங்கள், தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றும் வாக்களர்களுக்கு சிறப்புத் தள்ளுபடி மற்றும் இலவச உணவு ரகங்களை வழங்குவதாக அறிவித்துள்ளன. தனியார் மட்டுமன்றி அரசு சார்பிலும், வாக்கு சதவீதத்தை உயர்த்துவதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

அவற்றில் ஒன்றாக மத்திய பிரதேசம் போபாலில், வாக்களிப்போரை குலுக்கல் முறையில் பிரம்மாண்ட பரிசு மழையில் நனையச் செய்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. புரவலர்கள், வணிக நிறுவனங்கள் உதவியுடன், போபால் மாவட்ட நிர்வாகமே குலுக்கல் பரிசுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி உச்சமாக வைர மோதிரத்தில் தொடங்கி, லேப் டாப், ஸ்மார்ட் போன், டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், பைக் உட்பட பல்வேறு பொருட்களை பரிசு மழையில் சேர்த்துள்ளனர்.

வாக்களித்து வருவோருக்கு குலுக்கல் சீட்டு வழங்கப்படும். வாக்குப்பதிவு முழுமையாக நிறைவடைந்ததும், அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பிரபலங்கள் முன்னிலையில் அதிர்ஷ்ட குலுக்கல் நடைபெறும். இந்த பரிசுகள் ஒவ்வொன்றையும், சமூக அக்கறையுடனான பலர் வழங்க முன்வந்துள்ளனர். அறிவிக்கப்பட்ட பரிசுகளுக்கு அப்பால் பல்வேறு வணிக நிறுவனங்களும், வாக்களித்து திரும்புவோருக்கு அதிரடித் தள்ளுபடி கூப்பன்களை வழங்குகின்றன.

வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு

இவற்றின் மூலம் வணிக நிறுவனங்களுக்கு இலவச விளம்பரம் கிடைப்பதோடு, தள்ளுபடி அறிவிப்புகளால் கூடுதல் விற்பனைக்கும் வாய்ப்பாகி உள்ளது. ’முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பு’ என்ற அரசு திட்டத்தின் கீழ் மாவட்ட கலெக்டரே குலுக்கல் போட்டிகளை முன்னின்று நடத்துவதால், வாக்காளர்கள் மத்தியில் அவற்றில் பங்கேற்க ஆர்வமும் கிளம்பி இருக்கிறது.

இதனையொட்டி தேர்தல் நாளான மே.7-க்காக இப்போது முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் அங்கே காத்துக்கிடக்கின்றனர். இந்த பரிசுகள் அறிவிப்பால் இம்முறை மாவட்டத்தில் வாக்கு சதவீதம் உச்சம் தொடும் எனவும், மாவட்ட தேர்தல் அதிகாரி கௌஷ்லேந்திர விக்ரம் சிங் உறுதி தெரிவித்திருக்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...


வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!

வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!

பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்... சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in