கால்கோள் முதல் திறப்பு விழா வரை; சர்ச்சைகளுடன் திறக்கும் புதிய நாடாளுமன்றக் கட்டிடம்!

புதிய நாடாளுமன்றக் கட்டிடம்
புதிய நாடாளுமன்றக் கட்டிடம்

பெரும் சர்ச்சைகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று (மே.28) திறந்து வைக்கிறார். தேசத்தின் வளர்ச்சி மற்றும் வரலாற்றில், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்புவிழா தவிர்க்க இயலாத வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.

அதேசமயம், அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நாடாளுமன்ற ஜனநாயக முறையின் தலைவராக நிர்ணயிக்கப்பட்டுள்ள குடியரசுத் தலைவரை தவிர்த்து, பிரதமர் மோடியை மட்டுமே முன்னிறுத்தி திறப்புவிழா காண்பதற்கு எதிராக பெரும் சர்ச்சையும் வெடித்திருக்கிறது. சர்ச்சைகளின் சங்கிலித் தொடரில் இது ஒரு கண்ணி மட்டுமே!

நூற்றாண்டை நெருங்கும் நாடாளுமன்றக் கட்டிடம்
நூற்றாண்டை நெருங்கும் நாடாளுமன்றக் கட்டிடம்

புதிய கட்டிடத்தின் தேவை

சுமார் நூறாண்டு பின்னணி கொண்ட தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் எழுப்பப்பட்டது. 1922-ல் திட்டமிடப்பட்டு 1927-ல் திறப்பு விழா கண்டது. சீரமைப்பு பணிகள், இணைப்பு கட்டிடங்கள் என நாடாளுமன்ற வளாகம், அவ்வப்போது தன்னை புதுப்பித்தும், விஸ்தரித்தும் வந்தது. ஆனபோதும், புதிய கட்டிடத்துக்கான தேவையும் நீண்ட காலமாக பரிசீலனையில் இருந்தது. இமயமலை சாரலின் நிலநடுக்க அபாய எல்லைக்குள் தலைநகர் டெல்லியும் அடக்கம் என்பதால், இயற்கை சீற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் புதிய கட்டுமானம் அவசியமானது.

இதற்கு அப்பால், அதிகரித்த மக்கள்தொகைக்கு ஏற்ப உயர்த்தப்பட வாய்ப்புள்ள எம்பி-க்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும், புதிய வளாகத்துக்கான ஆலோசனை மற்றும் முன்னேற்பாட்டுத் திட்டங்கள் காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே முளைத்தன. இவற்றோடு, காலனியாதிக்கத்தின் அடையாளமாக நீடிக்கும் பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தை மாற்றுவதற்கான பாஜக ஆட்சிக் காலத்தின் காரணமும் சேர்ந்து கொண்டது. பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு நாடாளுமன்றம் ஆளானபோது, உச்ச பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய வளாகம் அவசியம் என்றானது.

சென்ட்ரல் விஸ்டா உதயம்

மோடி பிரதமரானதும் பாஜக சார்பில் புதிய வரலாறு படைப்பதோடு, வரலாற்றுப் பக்கங்களின் களங்கம் என தாங்கள் அடையாளம் கண்டவற்றை களையவும் முடிவானது. அவற்றின் அங்கமாக புதிய நாடாளுமன்றத்துக்கான கட்டிடத்தை உள்ளடக்கிய ’சென்ட்ரல் விஸ்டா’வுக்கான திட்டம் உதயமானது. இதில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் மட்டுமன்றி பிரதமருக்கான இல்லம், எம்பி-க்களுக்கான குடியிருப்புகள், மத்திய செயலகம் உள்ளிட்ட பலவும் சேர்ந்தன. பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அவற்றுக்கான பணிகள் தொடங்கியது முதலே சர்ச்சைகளும் சேர்ந்தன.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கான கால்கோள் விழாவின்போதே, அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புறக்கணிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பின. அவற்றை புறந்தள்ளி மோடி கையால் அடிக்கல் நாட்டுவதற்கான சடங்குகள் முடிந்த கையோடு, கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நாடாளுமன்றமும் மோடி கையாலே திறக்கப்படும் என தெரிவித்திருந்தார்கள். இரண்டுக்குமான கால இடைவெளியில் கூடுதல் சர்ச்சைகள் முளைத்திருந்தன.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கான தொடக்க விழா
புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கான தொடக்க விழா

சர்ச்சைகளே அஸ்திவாரம்

புதிய நாடாளுமன்றத்துக்கான கட்டிடப்பணிகள் தொடங்கியபோது, கொரோனா அலை தேசத்தை புரட்டிப்போட்டிருந்தது. நாடெங்கும் முடங்கிக்கிடக்க, ஆயிரத்துக்கும் மேலான பணியாளர்களைக் கொண்டு கட்டிடப் பணிகளை தொடர்ந்தது விமர்சனத்துக்கு ஆளானது. அடுத்ததாக, அவசரகால மருத்துவ நெருக்கடிகளை எதிர்கொள்ள, கட்டுமான செலவிலிருந்து கணிசத்தை ஒதுக்கலாமே என்ற எதிர்க்கட்சிகளின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. கட்டுமானம் நெடுக பாஜகவின் சின்னம் மற்றும் சித்தாந்தத்தை பறைசாற்றும் சான்றுகள் பொறிக்கப்படுவதாக அடுத்த குற்றச்சாட்டு எழுந்தது.

புதிய தேசிய சின்னத்தின் முன்னே மோடி
புதிய தேசிய சின்னத்தின் முன்னே மோடி

முன்னதாக, பிரம்மாண்ட கட்டுமானப் பணி காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என சூழியல் ஆர்வலர்கள் சிலர் உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டியதும் தள்ளுபடியானது. தேசிய சின்னமான 4 சிங்க முகங்களின் தோற்றம், அச்சமூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டதாக அடுத்த சர்ச்சை ஓடியது. தேசிய சின்னத்துக்கு அவமதிப்பு நேர்ந்ததாகவும் புகார்கள் எழுந்தன. 75-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு திறப்பு விழாவுக்கு திட்டமிடப்பட்டிருந்த கட்டுமானப் பணிகள், கொரோனா காரணமாக இழுபறியானது.

இன்னமும் சொச்ச பணிகள் மிச்சமிருக்கும்போதே, இந்துத்துவத்தின் பெயரால் ஜனநாயகத்துக்கு புறம்பான சித்தாந்தங்களை முன்வைத்ததாக குற்றம்சாட்டப்படும் வீர சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழா திட்டமிடப்பட்டதும் எதிர்க்கட்சிகளை சீண்டியது. மேலும், தமிழர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் சோழர் காலச் செங்கோல் பின்னணியிலும் சர்ச்சைக்குப் பஞ்சமில்லை.

(செங்கோல் குறித்தான விரிவான வாசிப்புக்கு: அன்று நேரு.. இன்று மோடி; ஆட்சி செய்யும் ஆதீனச் செங்கோல்)

நாடாளுமன்றக் கட்டிடம் - சோழர் செங்கோல் - பிரதமர் மோடி
நாடாளுமன்றக் கட்டிடம் - சோழர் செங்கோல் - பிரதமர் மோடி

அரசியல் லாபங்களுக்கு அப்பால்

இவற்றின் உச்சமாக, புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கையால் நடைபெறாததோடு, விழாவுக்கு அவர் தவிர்க்கப்பட்டதும் பூதாகரமானது. திறப்பு விழாவில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா இடம்பெற, மாநிலங்களவைத் தலைவரான ஜக்தீப் தன்கரும் தவிர்க்கப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவரை புறக்கணித்துவிட்டு, துணை குடியரசுத் தலைவரான ஜக்தீப் தன்கரை அழைப்பது சர்ச்சையை அதிகரிக்கும் என்பதால் அதனை தவிர்த்திருக்கிறார்கள்.

தனது அரசியல் லாபங்களுக்காக, பட்டியலினத்தை சேர்ந்த ராம்நாத் கோவிந்தையும், பழங்குடியினத்தை சேர்ந்த திரௌபதி முர்முவையும் அடுத்தடுத்து குடியரசுத் தலைவராக்கிய பாஜக தலைமையிலான மத்திய அரசு, அவர்களின் சமூகப் பின்னணி காரணமாகவே, புதிய நாடாளுமன்றத்தின் அடிக்கல் நாட்டுதல் முதல் திறப்பு விழா வரை அவர்களைத் தவிர்க்கிறதா என்றும் எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடின.

வரலாறும், பெருமையும்

மூன்றாவது முறையும் மோடியே பிரதமர் வேட்பாளர் என பாஜக முழங்கி வரும் வேளையில், கர்நாடகத்தில் மோடியை முன்னிறுத்தி நடைபெற்ற தேர்தலில் மோசமான சறுக்கல் கண்டிருக்கிறார்கள். மீண்டும் மோடியின் பிம்பத்தை ஊதிப்பெருக்கி கட்டமைக்கும் திட்டங்கள் கூடுதலாய் உருவெடுத்து வருகின்றன. மோடிக்கான அடுத்த அலையை உருவாக்கும் நோக்கிலான அந்தத் திட்டங்களின் மத்தியில், இந்த திறப்பு விழாவுக்கான வாய்ப்பை மோடி தரப்பில் கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ளனர். அதன்படியே, தேச வரலாற்றிலும் அழுத்தமான இடத்தை சாதித்திருக்கிறார் பிரதமர் மோடி.

புதிய கட்டிடத்தில் மக்களவைக்கான இடம்
புதிய கட்டிடத்தில் மக்களவைக்கான இடம்

மோடிக்கான இந்த வரலாற்றுப் பெருமையெனும் வெளிச்சத்துக்குப் பின்னே, அதன் நிழலாய் குடியரசுத் தலைவர் புறக்கணிப்பும் தவிர்க்க இயலாது தங்கிப்போனது. தற்போது நடந்தேறி இருப்பது, பாஜகவினர் சப்பைக்கட்டுவது போல, இந்திரா காந்தி மற்றும் ராஜிவ் காந்தி காலத்தின் குடியரசுத் தலைவர் தவிர்ப்பு மற்றும் பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்களை புறக்கணிக்கும் முதல்வர்களின் போக்கு போன்றதல்ல. இன்னும் நூறாண்டுக்கு மோசமான முன்னுதாரணமாகவும் இது நீடிக்கக்கூடும்.

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழாவே இத்தனை சர்ச்சைகளுக்கு மத்தியில் எழுந்திருக்கும்போது, அதனுள்ளாக நாடாளுமன்ற செயல்பாடுகளை முன்வைத்து பாஜக நிறைவேற்றத் துடிக்கும் திட்டங்கள், தனி வரலாற்றைப் படைக்க இருக்கின்றன. அரசியலமைப்பு சட்டத் திருத்தங்கள் உட்பட எதிர்க்கட்சிகள் அஞ்சும் அந்தப் பட்டியலில் பலதும் சாத்தியமானால், அவற்றின் முன்பாக தற்போதைய சர்ச்சைகள் பொருட்டில்லாது போகவும் கூடும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in