அன்று நேரு... இன்று மோடி; ஆட்சி செய்யும் ஆதீனச் செங்கோல்!

செங்கோலுடன் நேரு
செங்கோலுடன் நேரு
Updated on
4 min read

மன்னராட்சியில் செங்கோல் என்பது அரசியலின் அதிகாரம். செங்கோல் சென்ற இடமெல்லாம் அரசனது ஆட்சிப் பகுதியாக இருந்தது. கோலோச்சுகிறார் என்ற வார்த்தையின் பின்னாலும் இருப்பதும் செங்கோல்தான். “கோல் உயர” என்று ஔவை வாழ்த்தியதும் செங்கோலைத்தான். கோபம் வந்தால், “உனது கோல் வீழ்க” என்று மன்னர்களை அறம் பாடுவதும் அக்கால வழக்கங்களில் ஒன்று.  அப்படி அரசியலின் மிக முக்கிய அடையாளமான, அதிகாரமான செங்கோல் தற்போது மீண்டும் ஒருமுறை இந்திய அரசியலில் மிக முக்கிய இடத்தை பெற்றிருக்கிறது.

செங்கோல்
செங்கோல்

செங்கோல் என்பது நியாயமான, நீதி  வழுவாத  ஆட்சிமுறையை  வழங்கவேண்டும் என்பதை அரசருக்கு வலியுறுத்தும் ஓர் அறக்கருவி.  இப்போது அரசர்களும் கிடையாது; செங்கோலும் கிடையாது. இருப்பினும் மாநகராட்சி மன்றங்களில் மேயர் பொறுப்புக்கு வருபவர்கள் செங்கோல் ஏந்தி பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ளும் வழக்கம் தமிழகத்தில் இன்றைக்கும் தொடர்கிறது. இந்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அறிவிப்பு செங்கோலை மீண்டும் இந்திய அரசியலுக்குள் அழைத்து வந்திருக்கிறது.  

தமிழ் மன்னர்களின் ஆட்சியில்  குறிப்பாக, சோழ மன்னர்கள்  ஆட்சியில் முக்கிய அங்கமாக விளங்கியது செங்கோல். மன்னன் செல்ல இயலாத இடத்துக்கு அவனது செங்கோல் செல்லும். அதுவே மன்னனாகவும் அங்கீகரிக்கப்படும். அதிகார  மாற்றத்தைக் குறிக்கும் வகையில் புதிய மன்னர்கள்  ஆட்சிப்  பொறுப்பேற்கும்போது  புதியவரிடம் செங்கோல்  ஒப்படைக்கப்படும்.  அந்த வழக்கப்படி  இப்போதும்,  அரசியல் கூட்டங்களில் தலைவர்களுக்கு  செங்கோல்  வழங்கப் படுவதுண்டு. பெயரளவுக்கு வழங்கப்படும் அப்படிப்பட்ட செங்கோல் நிகழ்வு தற்போது மிகுந்த அரச முக்கியவத்துடன் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட உள்ளது. 

புதிதாக திறக்கப்படும் நாடாளுமன்ற கட்டிடத்தில்,  ஆங்கிலேயர்களிடம் இருந்து  இந்தியர்களுக்கு அதிகாரம்  மாற்றப்பட்டதன் அடையாளமாக வழங்கப்பட்ட  செங்கோல்   நிறுவப்படும் என அறிவித்த மத்திய உள்துறை அமைச்சர்  அமித் ஷா, “இருபது ஆதீனகர்த்தர்கள் ஒன்றிணைந்து  செங்கோலை பிரதமர் மோடியிடம் வழங்குவார்கள்” என்றும் தெரிவித்தார்.

இந்த செங்கோல் குறித்து தற்போது பரவும், உலவும் செய்திகளில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறதோ அதே அளவுக்கு புனைவும் இருக்கிறது. இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டபோது அந்த செங்கோல் மவுன்ட்பேட்டனிடமிருந்து நேருவிடம் கொடுக்கப் பட்டதாகவும், அதுவே ஆட்சி அதிகாரம் கைமாறியதற்கான அடையாளமாகவும் இருந்தது என்று ஒரு தகவல் சொல்கிறார்கள். 

இந்தியாவுக்கு சுதந்திரம் அளிக்க ஆங்கிலேய அரசு முடிவு செய்த  நிலையில், மவுன்ட்பேட்டன் பிரபு, ஜவஜர்லால்  நேருவை  அழைத்து, “இந்தியா சுதந்திரம் பெற்றதை  எப்படி அடையாளப் படுத்துவது?”  என்று கேட்டதாகச் சொல்கிறார்கள்.

இதுபற்றி ராஜாஜியிடம் நேரு ஆலோசனை நடத்தியபோது, “தமிழ்நாட்டில் மன்னர்கள் ஆட்சி  மாற்றம் ஏற்படும்போது, ராஜ குருவாக  இருப்பவர் செங்கோலை புதிய மன்னருக்கு கொடுத்து ஆசிர்வதிப்பது வழக்கம்.  அதேபோல   நாமும் ஒரு குருவின் மூலம் செங்கோல்  பெற்று, ஆங்கிலேயர்களிடம் இருந்து  இந்தியர்கள் கைக்கு ஆட்சி மாறியதை  அடையாளப்படுத்தலாம்”  என்று ராஜாஜி  யோசனை தெரிவித்ததாகச் சொல்கிறார்கள். 

செங்கோல் நிறுவப்படவிருக்கும் இடம்
செங்கோல் நிறுவப்படவிருக்கும் இடம்

அந்த யோசனையை  நேருவும் ஏற்றுக்கொண்டதால் அப்போது திருவாவடுதுறை ஆதீன மடத்தின் 20-வது   குருமகா  சன்னிதானமாக இருந்த  ஸ்ரீ அம்பலவாண  தேசிகரை தொடர்பு கொண்ட ராஜாஜி,  இந்தியாவின் ஆட்சி மாற்றத்திற்கான   புண்ணியச் சடங்குகளை செய்துதருமாறு  கேட்டுக் கொண்டாராம்.

இருபதாவது குரு மகா சன்னிதானம்
இருபதாவது குரு மகா சன்னிதானம்

இதையடுத்து ஆதீனம் சார்பில் செங்கோல் ஒன்று தயார் செய்யப்பட்டது.  ஆதீனகர்த்தர் அப்போது காய்ச்சலில்  அவதிப்பட்டதால்,  தனக்குப்  பதிலாக ஆதீனத்தின் கட்டளை  தம்பிரான் சடைச்சாமி என்ற  ஸ்ரீமத்  குமாரசுவாமி தம்பிரானை ஓதுவார்கள், நாகஸ்வர வித்வான் சகிதம் டெல்லிக்கு  அனுப்பி வைத்தார். 

1947-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ம் தேதி இரவு  11.45  மணி  அளவில்,  சுதந்திரம்  பெறுவதற்கான  நிகழ்வு  டாக்டர் ராஜேந்திர  பிரசாத்  முன்னிலையில் நடந்தது.  ஜவஹர்லால் நேரு, ராஜாஜி,  சுதந்திர  போராட்ட தியாகிகள் உள்ளிட்ட  பலரும்  குழுமி இருந்த அந்த நேரத்தில், திருஞானசம்பந்தர் அருளிய  கோளறு  பதிகத்தின் 11  பாடல்களையும் ஓதுவார்கள் பாடினர்.  அதன் பின்னர், மவுன்ட்பேட்டன் பிரபுவிடம்  அந்தச் செங்கோலை, ஆதினத்தின்  தம்பிரான் சுவாமிகள் கொடுத்துப் பெற்றார். 

பிறகு, அதன் மீது புனித நீர் தெளித்து,  ஆட்சிப் பொறுப்பை  ஏற்கவிருந்த ஜவஹர்லால்  நேருவிடம்  வழங்கினார் தம்பிரான்.  அப்போது டி.என். ராஜரத்தினம் பிள்ளையின்  நாகஸ்வரம்   முழங்க, நேருவுக்கு திருநீறும், சந்தன மாலையும்  அணிவிக்கப்பட்டது. மேற்சொன்ன செய்தியில் இருக்கும் உண்மை என்ன... புனைவு என்ன என்பதையும் பார்க்கலாம்.

ஆதீன மடத்தில் உள்ள புகைப்படம் மற்றும் விவரங்கள்
ஆதீன மடத்தில் உள்ள புகைப்படம் மற்றும் விவரங்கள்

இந்திய ஒன்றியத்தின் அதிகாரம்  ஆங்கிலேயரிடமிருந்து  இந்தியர்களுக்கு கைமாறுவதன் அடையாளமாக செங்கோல்  மவுன்ட்பேட்டனிடம் கொடுத்து வாங்கப்பட்டு,  பின்னர்  நேருவிடம்  அளிக்கப்பட்டது  என்பதற்கான சரியான  ஆதாரங்கள் இல்லை. இப்படியொரு யோசனையை  நேருவுக்கு ராஜாஜி  வழங்கினார்   என்பதற்கான சான்றுகளும் இல்லை என்கிறார்கள்.

ஆனால், திருவாவடுதுறை ஆதீனகர்த்தரால் செங்கோல் வழங்கப் பட்டதும், அதை தம்பிரான் சுவாமிகள் டெல்லி கொண்டுசென்று நேருவிடம் ஒப்படைத்ததும் உண்மைதான். அதற்கு ஆதாரமாக, திருவாவடுதுறை  ஆதீன மடத்தில்,  ஜவஹர்லால்  நேருவிடம்,  தம்பிரான் சுவாமிகள்  செங்கோலை  ஒப்படைக்கும்  படம் உள்ளது.  அதுதான் தற்போது சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது.

இது நடந்தது ஆகஸ்ட் 14 ம் தேதி மாலை. செங்கோல் வழங்கப்பட்ட இடம் நேருவின் மாளிகை. இந்தத் தகவலை 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 25 ம் தேதி வெளியான அமெரிக்காவின் டைம் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் அறிய முடிகிறது. செங்கோல் நேருவுக்கு வழக்கப்பட்டது குறித்து அந்த இதழ் வெளியிட்டுள்ள செய்தியில், ‘தென்னிந்தியாவின்  தஞ்சாவூரிலுள்ள  ஒரு மடத்தின்  தலைவரான ஸ்ரீ அம்பலவாண  தேசிகரின்  இரண்டு தூதர்கள்  வந்திருந்தார்கள். இந்தியர்களின் உண்மையான  அரசின்  முதல்  தலைவரான  ஜவஹர்லால் நேரு,  பழங்கால இந்திய அரசர்களைப்போல  இந்து புனிதத்  துறவி களிடமிருந்து அதிகாரத்தின் சின்னத்தைப்  பெறவேண்டுமென  அம்பலவாண தேசிகர்  கருதினார்.

திருவாவடுதுறை ஆதின மடம்
திருவாவடுதுறை ஆதின மடம்

அந்தத் தூதர்களுடன் நாகஸ்வர வித்வான் ஒருவரும் வந்திருந்தார்.இவர்கள் ஒரு பழைய  ஃபோர்டு காரில்  ஆகஸ்ட் 14 ம்  தேதி  மாலை நேருவின் வீட்டுக்கு ஊர்வலமாக வந்தார்கள்.  அப்போது  அவர்களுக்கு  மான் ரோமத்தால்  செய்யப்பட்ட   விசிறியைக்  கொண்டு இருவர்  விசிறினார்கள். ஒரு  சன்னியாசி நேருவின் நேற்றியில் விபூதி  பூசினார். பிறகு அவர்கள், நேருவுக்கு  பீதாம்பரம் போர்த்தி,   செங்கோலை  அவரிடம்  வழங்கினார்கள். அன்று காலையில்  நடராஜருக்குப்   படைக்கப்பட்டு, விமானத்தில்  கொண்டுவரப்பட்ட  பிரசாதமும் நேருவுக்கு வழங்கப்பட்டது’ என விவரிக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் தெரியவரும் செய்தி என்னவென்றால், அம்பலவாண தேசிகரால் அனுப்பிவைக்கப்பட்ட  செங்கோலானது நேரடியாக  நேருவிடம்தான்  வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கான புகைப்படம் தான் திருவாவடுதுறை ஆதீனம் உள்ளிட்ட இடங்களில் இருக்கிறதே தவிர, மவுன்ட்பேட்டனிடம் அந்த செங்கோல் உள்ளவாறோ, அதை அவர் நேருவிடம் கொடுப்பது போன்றோ  புகைப்படங்கள் உள்ளிட்ட ஆதாரங்கள் எதுவும் இல்லை. 

கையில் செங்கோலுடன் நேரு, அருகில் திருவாவடுதுறை ஆதின தம்பிரான் சாமிகள்
கையில் செங்கோலுடன் நேரு, அருகில் திருவாவடுதுறை ஆதின தம்பிரான் சாமிகள்

1947 ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியான ‘தி இந்து’ ஆங்கில நாளிதழிலும், ’ஆகஸ்ட் 14-ம் தேதி,   வியாழக்கிழமை  நள்ளிரவு இந்திய  அரசமைப்பு அவையின்  வரலாற்றுச்  சிறப்புமிக்க  கூட்டம்  கூடியது. அதில் அரசமைப்பு   அவையின்  தலைவரான  டாக்டர் ராஜேந்திர பிரசாத்  உரையாற்றினார்.  அதன்பிறகு,  அவையின் உறுப்பினர்கள் தங்களது   சேவையை  நாட்டுக்கு  அர்ப்பணிக்கும்  தீர்மானம் கொண்டுவரப்பட்டது.  அந்தத் தீர்மானம் ஏக மனதாக  நிறைவேற்றப்பட்டது. 

அதற்குப் பிறகு, இந்திய  பெண்களின்  சார்பாக திருமதி  ஹன்சா மேத்தா, தேசியக் கொடியைக் கையளித்தார்.  இதையடுத்து, அவையானது வெள்ளிக்கிழமை  காலைக்கு ஒத்திவைக்கப்பட்டது’ என்று தான் குறிப்பிட்டுள்ளது. இதிலும்  மவுன்ட்பேட்டனிடமிருந்து நேரு செங்கோல் பெற்ற நிகழ்வு குறித்து  ஏதும் இடம்பெறவில்லை. 

இப்படி  எதிலுமே அதிகாரத்தை  எப்படி  கைமாற்றுவது என்பது  குறித்த  விவாதங்கள் நடந்ததாகக் குறிப்பிடவில்லை. அதிகாரம்  கைமாறும் நிகழ்வுகளைப்  பொறுத்தவரை,  யூனியன்  ஜாக் கொடியை இறக்குவது, இந்திய தேசியக் கொடியை  ஏற்றுவது  குறித்தே பல ஆவணங்களில்  விவரிக்கப்பட்டுள்ளது.

செங்கோல் விவகாரம் தொடர்பாக காட்டமாக கருத்துத் தெரிவித்திருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “தமிழகத்தில் அரசியல் செய்வதற்காக செங்கோல் விவகாரத்தை பாஜகவினர் கையிலெடுத்திருக்கிறார்கள். அதனால், தங்களின் நோக்கங்களுக்கு பொருந்தும் வகையில் உண்மைகளை இவர்கள் திரித்துக் கூறுகின்றனர். ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக இந்த செங்கோல் வழங்கப்பட்டதாக மவுன்ட்பேட்டன், ராஜாஜி, நேரு ஆகியோர் கூறியதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இந்தத் தகவல்கள் எல்லாம் சுத்தப் பொய். இவை சிலரின் மனதில் உருவாக்கப்பட்டு வாட்ஸ் அப்பில் உலவவிடப்பட்ட வதந்திகளே” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், ஆதீனம் அளித்த அந்த செங்கோல் சோழர்கள் காலத்தைச் சேர்ந்ததா என்பதுகுறித்தும் இப்போது சர்ச்சை சுற்றுகிறது. உண்மையில் அது  சோழர்கள் காலத்தையோ அல்லது வேறு எந்த மன்னர்கள் காலத்தையோ சேர்ந்தது இல்லை. சென்னையில் உள்ள உம்மிடி பங்காரு  செட்டியார் நகைக்  கடையில் ஆதினகர்த்தரால்  செய்து வாங்கப்பட்டது என்பது தான் நிஜம்.   

2018-ல்  நேருவிடம் செங்கோல்  வழங்கும் புகைப்படம் குறித்து வார இதழ்  ஒன்றில்  கட்டுரை  வெளியானது.  அதில்,  இந்தச்  செங்கோல்  சென்னையில் உள்ள உம்மிடி  பங்காரு   ஜுவல்லர்ஸ் கடையில் செய்யப்பட்டதாக ஆதினம்  சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இதைப் பார்த்த  உம்மிடி   பங்காரு  ஜுவல்லர்ஸை சேர்ந்தவர்கள்,  தற்போது இந்த செங்கோல்  எங்கே உள்ளது எனத் தேட ஆரம்பித்தார்கள். அந்தத் தேடலில், அது  அலகபாத்தில் உள்ள  அருங்காட்சியத்தில் இருப்பது தெரியவந்தது. 

’நேருவின் கைத்தடி’ என்று குறிப்பிடப்பட்டு அங்கே இந்தச் செங்கோல் காட்சிக்கு  வைக்கப்பட்டிருந்தது. அந்தச்   செங்கோலின் பின்னணியை அருங்காட்சியகத்துக்கு விளக்கிய  நகைக்கடை நிறுவனத்தார், அது தொடர்பான வீடியோ ஒன்றை   உருவாக்கி வாட்ஸ் அப்பில்  பகிர்ந்தனர். இந்த வீடியோ  வைரலானது.  இதைப் பார்த்தவர்கள் தகவலை பிரதமரின்   கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.  இதன் பிறகே செங்கோலை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கும் திட்டம் தயாராகி இருக்கிறது.

இந்த செங்கோல் குறித்து திருவாவடுதுறை  ஆதீனத்தின் 24-வது குருமகா சந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரியார், “ மடத்தின் வரலாறு  தெரிவித்துள்ளபடி 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் நாள்   நள்ளிரவில்,  மௌன்ட்பேட்டனிடம்  இருந்து  செங்கோலை, திருவாவடுதுறை ஆதீன கட்டளை  தம்பிரான்  சுவாமிகள் பெற்றார்.  பிறகு, செங்கோலுக்கு புனிதநீர் தெளித்தார்கள்.  ஓதுவார்மூர்த்திகள், 'வேயுறு  தோளி பங்கன்  விடமுண்ட  கண்டன்' என்று  தொடங்கும் தேவார  திருப்பதிகத்தை  முழுமையாகப்  பாடி  முடிக்கும்போது  செங்கோலை நேருவிடம் வழங்கினார்கள்.  

அந்த இந்திய  சுதந்திர  வரலாற்றை  தற்போது   மீண்டும்  புதிய பாராளுமன்றக்  கட்டிட  திறப்பு  விழாவின்  மூலம் நினைவுகூருவதில் நாமும்  பெருமிதம்  கொள்கிறோம்.  1947-ல் இந்தியா சுதந்திரம்  அடைந்ததை அடையாளப்படுத்தும்  விதமாக பிரதமர்   நேருவிடம் வழங்கப்பட்ட  செங்கோலை   தற்போது  புதிய  நாடாளுமன்றக் கட்டிடத்  திறப்பு  விழாவில் பிரதமர் மோடியிடம்  வழங்க உள்ளது மகிழ்ச்சி   அளிக்கிறது” என கருத்துத் தெரிவித்துள்ளார்.

புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சோழர்கால செங்கோல் கோலோச்சப் போவதாகப் பிரகடனம் செய்து பாஜக இதிலும் தமிழர்களை திசை திருப்பும் அரசியலைச் செய்கிறது என்ற விமர்சனங்களையும் சிலர் முன்வைக்கிறார்கள்.

செங்கோல் எங்கிருந்து யாரால் வழங்கப்பட்டது என்பது ஒருபுறமிருக்க, சோழர்களின் மாதிரி செங்கோல் என்று சொல்லித்தான் அதை பாராளுமன்றத்தில் அரியணை ஏற்றுகிறார்கள். அந்த வகையில் தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் பெருமைதானே!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in