
இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை பாஜக எடுத்திருப்பதன் இடையே, பாலஸ்தீனத்துக்கு பகிரங்க ஆதரவை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இஸ்ரேல் நாட்டின் மீது காஸா பாலஸ்தீனர்களின் ஹமாஸ் போராளிகள் திடீர் தாக்குதலை சனிக்கிழமை காலை தொடங்கினர். ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை இஸ்ரேல் மீது ஏவியதோடு, நிலம் நீர் வான் என சகல உபாயங்களிலும் புகுந்து தாக்குதல் நடத்தினர். தங்கள் வசம் சிக்கிய இஸ்ரேல் நாட்டவரை காஸாவுக்கு கடத்திச் சென்று பணயக் கைதியாக இஸ்ரேலை மிரட்டி வருகின்றனர்.
இஸ்ரேல் மீதான பயங்கரவாத தாக்குதலை கண்டிப்பதாக காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்திருந்த சூழலில், இன்றைய தனது செயற்குழு கூட்டத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக தீர்மானம் இயற்றி உள்ளது. பாலஸ்தீன மக்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பதோடு, அவர்கள் தங்கள் நிலத்தில் கண்ணியத்தோடும் வாழ அனுமதிக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இஸ்ரேல் மீதான தாக்குதலை அடுத்து அந்நாட்டுக்கு பிரதமர் மோடி ஆதரவை அறிவித்ததோடு, பயங்கரவாதிகளின் அத்துமீறலுக்கு கண்டனமும் தெரிவித்தார். இதற்கு எதிர்த்திசையில் தற்போது தங்களது நிலைப்பாட்டினை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
தங்கள் வாழ்விடத்தையும், அதில் வாழ்வதற்கான உரிமைகளையும் இஸ்ரேலிடம் இழந்து தவித்துக்கொண்டிருக்கும் பாலஸ்தீனியர்களுக்காக பல்வேறு ஆயுதக் குழுக்கள் போராடி வருகின்றன. அவற்றில் காஸா பிராந்தியத்தை மையமாகக் கொண்ட ஹமாஸ் இயக்கமும் ஒன்று. ஹமாஸ் இயக்கத்தின் ராணுவக் குழு சார்பில் இஸ்ரேல் மீதான தாக்குதல் தொடங்கப்பட்டதில், ஹமாஸ் இயக்கத்தை பயங்கரவாதிகள் என்றே அமெரிக்கா முதல் இந்தியா வரை அடையாளப்படுத்தினர்.
இந்நிலையில் பாலஸ்தீனியர்களின் உரிமைக்காக ஆதரவு குரல் கொடுப்போரில் தற்போது காங்கிரஸ் கட்சியும் இணைந்திருக்கிறது. பாலஸ்தீனியர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதோடு, இஸ்ரேல் தேசத்தின் பாதுகாப்பையும் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீன ஆதரவு குழுவினர் இடையிலான போர் நிறுத்தத்தை கோரிய காங்கிரஸ் கட்சி, பேச்சுவார்த்தை மூலம் அப்பகுதியில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு வந்தாச்சு... டிசம்பர் 3-ல் வாக்கு எண்ணிக்கை!
புதிய மதுக்கடைகள் திறக்கவேண்டும்... முதல்வருக்கு அழுத்தம் கொடுக்கும் எம்எல்ஏக்கள்!
பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு திடீரென வெளியேறிய பவா செல்லதுரை... புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!
சென்னையில் சோகம்: பயிற்சியின் போது ஜிம் பயிற்சியாளர் மாரடைப்பால் மரணம்!