யூஏஇ படைகளுக்கு வலு சேர்க்கப்போகும் அமெரிக்கப் போர் விமானங்கள்!

ஹவுதிகளுக்கு எதிரான போரில் வலு சேர்க்கும்
மாதிரிப் படம்
மாதிரிப் படம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (யூஏஇ) மீது ஹவுதி படையினர் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஏமனில் சவுதி அரேபியா தலைமையிலான படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியிருக்கின்றன. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வலு சேர்க்கும் வகையில் ஏவுகணை அழிப்பு சாதனம் கொண்ட போர்க்கப்பலையும், ஐந்தாவது தலைமுறை போர் விமானங்களையும் அனுப்புவதாக அமெரிக்கா கூறியிருக்கிறது.

இதுதொடர்பாக, நேற்று அபுதாபி பட்டத்து இளவரசர் அபு பின் ஜாயித் அல் நஹ்யானிடம் தொலைபேசியில் பேசிய அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் லாய்டு ஆஸ்டின், ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்படைக்குத் துணையாக யூஎஸ்எஸ் கோல் ( USS Cole) போர்க் கப்பல் அனுப்பப்படும் என உறுதியளித்திருக்கிறார். இந்தப் போர்க் கப்பல் ஏவுகணைகளை வழிமறித்துத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட சாதனங்களைக் கொண்டது. கூடுதலாக, எஃப்-22 ராப்டர் மற்றும் எஃப்-53 லைட்டிங் 2 வகை போர் விமானங்களை அனுப்பி ஹவுதிகள் மீதான தாக்குதலில் ஐக்கிய அரபு அமீரகத்துக்குக் கைகொடுக்கிறது அமெரிக்கா.

இதன் மூலம், நீண்டகால நட்பு நாடான ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அமெரிக்கா துணை நிற்கிறது என லாய்டு ஆஸ்டின் கூறியிருக்கிறார்.

குறிப்பாக, ஜனவரி 31-ல் ஹவுதி படையினர் ஐக்கிய அரபு அமீரகம் மீது மூன்றாவது முறையாக ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில், இந்த அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டிருக்கிறது. இந்த முறை ஹவுதிக்களின் ஏவுகணைகளை, அமெரிக்கத் தயாரிப்பான பேட்ரியாட் ஏவுகணைத் தடுப்பு சாதனத்தைக் கொண்டு இடைமறித்து அழித்திருக்கின்றன ஐக்கிய அரபு அமீரகப் படைகள்.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் ஏமனுக்கும் இடையில் நேரடியான நில எல்லைகள் இல்லை. சவுதி அரேபியாதான் ஏமனின் அண்டை நாடு. எனவே, சவுதி அரேபியா மீதுதான் ஹவுதிக்கள் பல முறை ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்திவந்தனர்.

இந்த சூழலில், ஜனவரி 17-ல் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள மூன்று பெட்ரோல் டேங்கர்கள் மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் ஹவுதிக்கள் நடத்திய தாக்குதலில் இரண்டு இந்தியர்கள், ஒரு பாகிஸ்தானியர் என மூவர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். அபுதாபி விமான நிலையத்தின் கட்டுமானப் பகுதி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, ஹவுதி கிளர்ச்சி அமைப்பினருக்கு பதிலடி கொடுக்கப்போவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்தது.

அபுதாபி தாக்குதல் நடந்த மறுநாளே சவுதி அரேபியா தலைமையிலான படையினர் ஏமன் தலைநகர் சனாவில் நடத்திய வான்வழித் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். எனினும், இந்தத் தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக ஹவுதி படையினர் கூறினர். இதன் தொடர்ச்சியாக ஏமனின் இரு நகரங்கள் மீது சவுதி படைகள் ஜனவரி 21-ல் நடத்திய தாக்குதலில், குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

தற்போது அமெரிக்காவின் அதிநவீனப் போர் விமானங்களும், போர்க் கப்பலும் ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்லவிருப்பதால், ஏமன் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது.

இவற்றையும் வாசியுங்கள்:

மாதிரிப் படம்
இது மனிதகுலத்துக்கு எதிரான போர்க்குற்றம்!
மாதிரிப் படம்
சலுகைகள்... அழுத்தங்கள்: தந்திரம் செய்ததா சவுதி?
மாதிரிப் படம்
ஹவுதிகளுக்குப் பதிலடி கொடுக்கப்படும்: ஐக்கிய அரபு அமீரகம் சூளுரை
மாதிரிப் படம்
இனியும் இழப்பதற்கு ஏதுமில்லை!- அமைதிக்கு ஏங்கும் ஏமன்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in