இது மனிதகுலத்துக்கு எதிரான போர்க்குற்றம்!

ஏமன் மீதான தாக்குதலுக்கு எதிராக எழும் கண்டனங்கள்
இது மனிதகுலத்துக்கு எதிரான போர்க்குற்றம்!

ஏமனின் இரு நகரங்கள் மீது சவுதி படைகள் நேற்று (ஜன.21) நடத்திய தாக்குதலில், குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு, ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ் கண்டனம் தெரிவித்திருக்கிறார். ஏமனில் போட்டி அரசை நடத்தும் ஹவுதிக்கள், “இந்தத் தாக்குதல் மனிதகுலத்துக்கு எதிரான போர்க்குற்றம்” என ஆவேசமாகக் கூறியிருக்கிறார்கள்.

ஜனவரி 17-ல், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் உள்ள மூன்று பெட்ரோல் டேங்கர்கள் மீது ட்ரோன்கள் மூலம் நடந்த தாக்குதலில் இரண்டு இந்தியர்கள், ஒரு பாகிஸ்தானியர் என மூவர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். அபுதாபி விமான நிலையத்தின் கட்டுமானப் பகுதி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதல்களுக்கு ஏமனில் செயல்பட்டுவரும் ஹவுதி கிளர்ச்சிப் படையினர் அறிவித்தனர்.

கொடூரமான இந்தத் தாக்குதலைக் கண்டிப்பதாகக் கூறிய ஐக்கிய அரபு அமீரக வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா பின் சையத் அல்-நஹ்யான், “இந்தப் படுபாதகச் செயலுக்கு நிச்சயம் தண்டனை உண்டு” சூளுரைத்திருந்தார். ஹவுதிகளுக்கு எதிரான தாக்குதலை சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை தொடங்கியது. ஏமன் தலைநகர் சனாவில் ஜனவரி 18-ல் நடந்த வான்வழித் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

இதன் அடுத்த கட்டமாக, ஏமன் நாட்டின் சாடா நகரின் அகதிகள் தடுப்பு முகாம் மீது சவுதி தலைமையிலான படையினர் நேற்று நடத்திய வான்வழித் தாக்குதலில் 80 பேர் கொல்லப்பட்டனர். அதேபோல், அந்நாட்டின் துறைமுக நகரான ஹொடெய்டாவில் உள்ள தகவல் தொடர்புக் கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களின் எண்ணிக்கை இறுதிசெய்யப்படவில்லை. இணைய மையமாகச் செயல்பட்டுவந்த இந்தக் கட்டிடத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இணையச் சேவைகள் பாதிக்கப்பட்டன.

அதேபோல், சாடா தாக்குதலில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள் என்றும் ஏராளமானோர் காயமடைந்திருக்கிறார்கள் என்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கூறியிருக்கிறார்கள். இறந்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை என்று கூறியிருக்கும் அல் ஜஸீரா ஊடகம், இந்தத் தாக்குதலில் 200-க்கு மேற்பட்டோர் காயமடைந்ததாக ‘எல்லைகள் அற்ற மருத்துவர்கள்’ அமைப்பு கூறியிருப்பதை மேற்கோள் காட்டியிருக்கிறது. சம்பவம் நடந்த இடத்திலிருந்து இன்னமும் பல உடல்கள் மீட்கப்படவில்லை என்றும் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, இனி எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தப்படலாம்; அப்பாவிப் பொதுமக்கள் குறிவைக்கப்பட்டலாம் எனும் அச்சம் ஏமனில் உருவாகியிருக்கிறது.

வரலாற்றுப் பின்னணி

பல தசாப்தங்களாக ஏமனின் அதிபராக இருந்த அலி அப்துல்லா சாலேயின் அமெரிக்க ஆதரவுக் கொள்கைகளுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியவர்கள் ஹவுதிக்கள். நீண்டகாலமாக சாலேயின் ஆட்சியைச் சகித்துக்கொண்டிருந்த ஏமன் மக்கள், 2011-ல் நடந்த அரபு வசந்தத்தைத் தொடர்ந்து ஆட்சி மாற்றம் வேண்டி போராட்டத்தில் குதித்தனர். மிகப் பெரிய அளவுக்கு வெடித்த மக்கள் புரட்சியை எதிர்கொள்ள முடியாமல், சவுதி அரேபியாவுக்குத் தப்பிச் சென்றார் சாலே. இதையடுத்து, துணை அதிபராக இருந்த ஆப்ட்ரப்பு மன்சூர் ஹாதி, ஏமனின் அதிபரானார். ஆனால், நிர்வாகத் திறமையற்ற அவரது ஆட்சியால் ஏமன் மக்கள் ஏமாற்றமடைந்தனர். ஆட்சியில் பங்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்துபோன ஹவுதி படையினர் கிளர்ச்சியைத் தொடங்கினர்.

2015-ல் ஹவுதி படையினர் அரசுக்கு எதிரான போரில் உச்சம் பெற்றுவிட்டனர். மன்சூர் ஹாதியும் சவுதிக்குத் தப்பிச் சென்றார். அரசுப் படைகளுக்கு ஆதரவாக சவுதி அரேபியா களமிறங்கியது. சன்னி பிரிவு ஆட்சியாளர்களைக் கொண்ட பல அரபு நாடுகளும், அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளும் ஏமன் அரசுக்கு வரிந்துகட்டிக்கொண்டு ஆதரவு தெரிவித்தன. மறுபுறம், ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள் அதிகம் கொண்ட ஹவுதி படையினருக்கு, ஷியா ஆட்சி நடக்கும் ஈரான் ஆதரவளிக்கிறது. இதற்கிடையே, நாடு திரும்பிய மன்சூர் ஹாதி, தெற்கு ஏமனில் உள்ள முக்கிய நகரமான ஏடனைத் தற்காலிகத் தலைநகராகக் கொண்டு மீண்டும் ஆட்சி நடத்திவருகிறார். ஹவுதிக்கள் தனியாக அரசு நடத்துகின்றனர்.

ஹவுதிக்களுக்கு எதிரான தாக்குதல் எனும் பெயரில் சவுதி அரேபியா தலைமையிலான படைகள் நடத்திவந்த தாக்குதல்களில் இதுவரை 13,000 அப்பாவிப் பொதுமக்கள் உட்பட 1.30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். அபுதாபியில் தாக்குதல் நடத்திய ட்ரோன்கள் போல, ஏமனில் சவுதி அரேபியா தலைமையிலான படைகள் ஏராளமான ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்றைய தாக்குதல்களைக் கண்டித்திருக்கும் ஹவுதி அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் தாஹா அல்-மோடாவகீல், “இது மனிதகுலத்துக்கு எதிரான போர்க்குற்றம் என்றே நாங்கள் கருதுகிறோம். மனிதகுல வரலாற்றில் நிகழ்ந்திருக்கும் இந்தத் தருணத்துக்கு உலகம் பொறுப்பேற்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி வழங்க வேண்டும் என்று சர்வதேச சமுதாயத்திடம் அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

ஹவுதிக்கள் மீதும் போர்க்குற்றக் குற்றச்சாட்டுகள் உள்ளன. சிறார்களைத் துப்பாக்கி ஏந்த வைத்து போர்க்களத்துக்கு அனுப்பிவைப்பதாக அவர்கள் மீது புகார்கள் உண்டு.

இதற்கிடையே, ஐக்கிய அரபு அமீரகம் மீதான தாக்குதல்களுக்கு மட்டும் கண்டனம் தெரிவித்திருக்கும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகளிடமிருந்து கண்டனம் எழுந்திருக்கின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in