தரையில் அமர்ந்து சாப்பிட்டால் ரூ.238; பாத்திரம் கழுவாமல் இருந்தால் ரூ.116 அபராதம்! சீனா அதிரடி

சமையலறை
சமையலறை

வீட்டில் பாத்திரம் கழுவாமல் இருப்பது, தரையில் அமர்ந்து சாப்பிடுவது,  சிலந்திக்கூடு அகற்றாமல்  இருப்பது போன்ற குற்றங்களுக்கு  அபராதம் விதிக்கப்படும் வழக்கம் சீனாவில் நடைமுறைக்கு வந்திருக்கிறது. 

தெற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாண அரசாங்கம் பொது மக்களிடம் சுகாதாரம் மற்றும் தூய்மைப் பழக்கத்தை கொண்டு வர இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்திருக்கிறது.  இங்குள்ள கிராமப்புறங்களில் மக்கள் அசுத்தமான பகுதிகளில் வாழுகிறார்கள்.  அவர்கள் சுற்றுப்புறத் தூய்மையை பேணுவதில்லை என்று வருத்தப்பட்டு அவர்களை திருத்தும் வகையில் இத்தகைய நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

வாழும் சூழலை தூய்மைப்படுத்தும்  நோக்கில் 14 வகையான நடத்தைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த தவறுகளை செய்தால் அபராத தொகை இரட்டிப்பாகும் என்றும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி அந்த பகுதிகளில்  தரையில் அமர்ந்து  சாப்பிட்டால்  இந்திய மதிப்பில் ₹ 233 அபராதமாக வசூலிக்கப்படுகிறது.  பாத்திரங்கள் கழுவாமல் வைக்கப்பட்டிருந்தால் ₹ 116 அபராதம் கட்ட நேரிடும். மேலும் வீட்டில் எங்காவது சிலந்தி வலைகள் இருந்தால் அதை அகற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதை செய்யாத பட்சத்தில் ₹ 58 அபராதமாகும். வீட்டு முற்றத்தில் சிறுநீர் அல்லது மலம் கழித்தால் ₹ 35 அபராதம். நிலைமையின் தீவிரத்தன்மையை பொறுத்து இந்த அபராதத் தொகை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

"அசுத்தம், குளறுபடி, ஒழுங்கற்ற வாழ்க்கைச் சூழல் போன்றவை பல காலமாக நீடித்து வருகின்றன. இதையெல்லாம் களையும் பொருட்டே இப்படியொரு அபராதம் விதிக்கப்படுகிறது.  விவசாயிகளின்  வீட்டில் பார்க்கும் எல்லாமே அசுத்தமாக இருக்கின்றன.

வீடு முழுவதும் சிலந்தி வலைகள். எங்குப் பார்த்தாலும் அருவருப்பும் குழப்பமும் நீடிக்கிறது. மக்கள் எந்தக் கவலையுமின்றி தரையில் அமர்ந்து சாப்பிடுகிறார்கள். அவர்கள் வீட்டின் அருகே கொசுக்கள் நிறைய காணப்படுகின்றன. மிக அருகாமையில் நாய்களோடு வாழ்கிறார்கள். அவற்றை மாற்றும் நோக்கில் இத்தகைய அபராத திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்று அந்த பகுதி கிராம பொறுப்பாளர்கள் கூறுகிறார்கள். 

இப்போது கொண்டு வரப்பட்டுள்ள அபராத திட்டம், இந்தப் பிரச்சினைகளை முழுமையாக தீர்த்துவிடுமா என உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், அபராதம் கட்ட வேண்டியிருக்குமே என்று பயந்தாவது இனி இந்த தவறை மறுபடியும் செய்ய மாட்டார்கள். இந்த மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் அபராத தொகை அனைத்துமே இவர்களது வாழ்வாதாரத்தை முன்னேற்ற மறுபடியும் இவர்களிடமே முதலீடு செய்யவுள்ளது.  உதாரணமாக வீட்டை சுத்தம் செய்யாமல் அபராதம் கட்டுபவர்களுக்கு துடைப்பம் வாங்கிக் கொடுப்போம் என அவர்கள் கூறுகிறார்கள். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in