ஈரான் - பாகிஸ்தான் இடையே சமாதானம்... எல்லைகள் திறப்பு; தொடங்கியது சரக்கு போக்குவரத்து!

ஈரான் - பாகிஸ்தான் இடையே சமாதானம்... எல்லைகள் திறப்பு; தொடங்கியது சரக்கு போக்குவரத்து!

பாகிஸ்தான் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வந்த மோதல் சுமுகமானதைத் தொடர்ந்து அனைத்து எல்லைகளும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் இருநாடுகளுக்கும் இடையிலான சரக்கு போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

கடந்த செவ்வாய்கிழமையன்று பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் திடீரென ஈரான் வான்வழித் தாக்குதல் நடத்தியது. அங்கிருந்து தங்கள் நாட்டில் செயல்பட்டு வரும் பலூச் பிரிவினைவாதிகளான ஜெய்ஷ் அல்-அதல் அமைப்பின் இரு நிலைகளில் குறிவைத்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஈரான் விளக்கமளித்தது.

ஆனால், அதற்குப் பதிலடியாக, ஈரானின் சிஸ்தான்-பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பயங்கரவாத நிலைகளின் மீது பாகிஸ்தானும் வியாழக்கிழமையன்று துல்லியத் தாக்குதல் நடத்தியது.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் வெகுவாக அதிகரித்தது. இந்தச் சூழலில், பதற்றத்தைத் தணிக்கும் வகையில் இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா்களும் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினர். மேலும் ஐநாவும் இந்த சிக்கலில் தலையிட்டு சமாதானத்துக்காக குரல் கொடுத்தது. எனவே இரு நாடுகளும் சமாதானம் ஆகின.

எனவே இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைகளும் திறக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து காய்கறிகள் மற்றும் பொருள்களை ஏற்றி வந்த 100-க்கும் அதிகமான டிரக்குகள், தஃப்தான் எல்லையைக் கடந்து ஈரானுக்குள் நுழைந்ததாக ஈரானின் மக்ரான் மாகாண ஆணையர் சயீத் அஹ்மத் உம்ரானி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இரு நாடுகளின் எல்லைகளிலும் கடந்த சில நாட்களாக காத்து நின்ற சரக்கு, எரிபொருள் மற்றும் எரிவாயு டிரக்குகள், கண்டெய்னர்கள் உள்ளே வரவும் வெளியே செல்லவும் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருநாடுகளுக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டதால் எல்லையோர மக்கள் நிம்மதி அடைந்துள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in