
பிரபலமான கொரியன் பாப் பாடகி நஹீ திடீரென உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பிரபல கொரியன் பாப் பாடகி நஹீ கடந்த 8-ம் தேதி காலமானார், அவருக்கு வயது 24. கொரியாவின் கியோங்கி மாகாணத்தில் உள்ள பியோங்டேக் நகரத்தை சேர்ந்த இவர், கடந்த 2019ம் ஆண்டு இசைத்துறைக்குள் நுழைந்தார். இவரது புளு நைட், குளூமி டேஸ் உள்ளிட்ட ஆல்பங்கள் மிகவும் பிரபலமானவை. அவர் கடைசியாக 4 மாதத்திற்கு முன் சிங்கிள் ரோஸ் என்ற பாடல் வெளியிட்டார்.
இந்நிலையில், கடந்த 8ம் தேதி தீடீரென அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். ஆனால், அவரது இறப்புக்கான காரணம் என்ன என்பது இதுவரை வெளியாகவில்லை. கடந்த 3 நாட்களுக்கு முன்னர் பாடகி தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், அவரது இறப்புச் செய்தி அறிந்த ரசிகர்கள் இந்த பதிவில் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அவரது இழப்பு கொரியன் இசை ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.