இந்தியர்களுக்கு விசா தேவையில்லை.... ஈரான் நாட்டின் சூப்பர் அறிவிப்பு!

இந்தியர்களுக்கு விசா தேவையில்லை.... ஈரான் நாட்டின் சூப்பர் அறிவிப்பு!

இந்தியா மற்றும் வளைகுடா நாடுகள் உட்பட சுமார் 33 நாடுகளின் குடிமக்கள் ஈரான் நாட்டிற்குள் நுழைய விசா தேவையை நீக்குவதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.

உலக நாடுகள் அடுத்தடுத்து இந்தியா உடனான உறவை மேம்படுத்தவும், இந்தியா உடனான வர்த்தகத்தை மேம்படுத்தவும், இந்தியர்களைச் சுற்றுலாப் பயணியாக ஈர்க்கவும் விசா பெற வேண்டிய கட்டாயத்தைத் தளர்த்தி வருகிறது. இலங்கை, தாய்லாந்து, மலேசியா வரிசையில் தற்போது ஈரான் இணைந்துள்ளது. இந்தியா மற்றும் வளைகுடா நாடுகள் உட்பட சுமார் 33 நாடுகளின் குடிமக்கள் ஈரான் நாட்டிற்குள் நுழைய விசா தேவையை நீக்குவதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.

இதன் மூலம் ஈரான் உலக நாடுகள் உடன் வெளிப்படைத்தன்மை மற்றும் ஈடுபாட்டை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இப்புதிய அறிவிப்பு மூலம் ஈரான் அரசு சுமார் 45 நாடுகளில் இருந்து மக்களை விசா இல்லாமல் ஏற்றுக்கொள்கிறது. சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஈர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்நாட்டு ஈரானிய கலாச்சாரப் பாரம்பரியம், சுற்றுலா மற்றும் கைவினைப்பொருட்கள் அமைச்சர் எஸதுல்லாஹ் ஜர்காமி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவைத் தவிர, ரஷ்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், சவூதி அரேபியா, கத்தார், குவைத், லெபனான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துனிசியா, மொரிட்டானியா, தான்சானியா, ஜிம்பாப்வே, மொரிஷியஸ், இந்தோனேசியா, புருனே, ஜப்பான், சிங்கப்பூர், கம்போடியா, மலேசியா, வியட்நாம், பிரேசில், பெரு, கியூபா, மெக்சிகோ, வெனிசுலா, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, செர்பியா, குரோஷியா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகளும் ஈரான் வர விசா தேவையில்லை என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக, துருக்கி, அஜர்பைஜான் குடியரசு, ஓமன், சீனா, ஆர்மீனியா, லெபனான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கான விசா தேவைகளை ஈரான் அரசு தள்ளுபடி செய்திருந்தது. இந்நிலையில் தற்போது 32 நாடுகளின் விசா தேவையை ஈரான் அரசு தள்ளுபடி செய்துள்ளது. அந்நாட்டு சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி மார்ச் மாதத்தில் தொடங்கிய நடப்பு ஈரானிய ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் அந்நாட்டிற்கு வருகை புரிந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4.4 மில்லியனை எட்டியது.

இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் வருகை புரிந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 48.5% அதிகமாகும். தற்போது, 27 நாடுகள் இந்தியர்களுக்கு விசா இல்லாத பயணத்தை வழங்கி வருகிறது. சமீபத்தில்தான் கென்யா, இந்தோனேசியா மலேசியா, தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் விசா இல்லா பயணத்தை அறிவித்தன. ஏற்கெனவே பார்படாஸ், பூடான், டொமினிகா, ஹைட்டி, மாலத்தீவுகள், மொரிஷியஸ், நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in