நம்பிக்கையில்லாத் தீர்மானம்: மீண்ட போரிஸ் ஜான்சன்; சுணக்கத்தில் ரிஷி சுனக்!

போரிஸ் ஜான்சன்
போரிஸ் ஜான்சன்

தனக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வென்றிருக்கிறார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன். ஆனால் அவருக்கு இது முழுமையான வெற்றியா என்பது குறித்து விவாதங்கள் தொடங்கியிருக்கின்றன. மேலும் போரிஸ் ஜான்சனால் காலியாக வாய்ப்பிருந்த பிரதமர் நாற்காலிக்காக, முழுமூச்சில் தயாராகிவந்த இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்கின் அரசியல் பாதையும் தற்போது சுணக்கம் கண்டுள்ளது.

59 சதவீத ஆதரவுடன் தனக்கு எதிரான நாடாளுமன்ற நம்பிக்கையில்லாத் தீர்மானத்திலிருந்து மீண்டிருக்கிறார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன். ஒரு பிரதமராக அவர் தனது பதவியில் ஒட்டிக்கொண்டபோதும், அதற்கான தார்மிகத் தகுதியை அவர் இழந்திருப்பதாக அதிருப்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். முந்தைய பிரதமர் தெரசா மே (2018) தனக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பெற்ற வாக்குகளைவிட, போரிஸ் ஜான்சனின் தற்போதைய ஆதரவு குறைவு. அந்த வாக்கெடுப்பை தொடர்ந்தே தெரசா ராஜினாமாவும், போரிஸ் ஜான்சனின் பதவியேற்பும் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

அண்மை இந்திய பயணத்தில் போரிஸ் ஜான்சன்
அண்மை இந்திய பயணத்தில் போரிஸ் ஜான்சன்

தற்போது தனக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றி பெற்றபோதும், மக்கள் மத்தியிலான சரிந்த ஆதரவை மீளப்பெறுவது போரிஸ் ஜான்சனுக்கு பெரும் போராட்டமாகக் காத்திருக்கிறது. முக்கியமாக அடுத்த தேர்தலில் அவர் பிரதமர் வேட்பாளராக, பொதுமக்கள் மட்டுமன்றி கட்சியினர் மத்தியிலும் எதிர்ப்பு நீடிக்கும். எனவே, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வென்ற கையோடு ‘ஒன்றுபடுவோம் பொருளாதாரத்தை வலுப்படுத்துவோம்’ என்று பொதுமக்களுக்கான அறைகூவல் ட்வீட் விடுத்திருக்கிறார் போரிஸ் ஜான்சன்.

இவரது இனிவரும் நாட்களின் செயல்பாடும், இழந்த செல்வாக்கினை மீட்கும் நோக்கிலே அமைந்திருக்கும். ஆனால் அதற்கான முயற்சிகள் நடைமுறையில் எடுபடுமா என்பதும் சந்தேகமே. அந்தளவுக்கு மக்கள் அபிமானத்தில் அடிவாங்கியிருக்கிறார் பிரிட்டன் பிரதமர். ’பார்டிகேட்’ என்று பிரிட்டன் ஊடகங்கள் வர்ணிக்கும் பிரதமருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அத்தனை வீரியமானவை.

சர்வதேசளவில் அதிகரித்திருந்த கரோனாப் பரவல் பிரிட்டனை அலங்கமலங்க அடித்த நாட்கள் அவை. கரோனா உயிரிழப்புகளை குறைக்கும் நோக்கில் நாடுதழுவிய தீவிரமான பொதுமுடக்கத்துக்கு உத்தரவிட்டிருந்தார் பிரதமர் போரிஸ். கரோனாவுக்கு எதிரான சுகாதாரம், மருத்துவ மற்றும் சட்டம் ஒழுங்கு ஏற்பாடுகளில் கவனம் செலுத்தாத அரசாங்கம், ஊரடங்கின் பெயரில் வீட்டு சிறையில் வைப்பதற்கு பல்வேறு நாடுகளின் மக்கள் மத்தியிலும் அப்போது கடும் எதிர்ப்பு நிலவியது. பிரிட்டனில் அது அதிகமாகவே எதிரொலித்தது. ஆனபோதும் போரிஸ் ஜான்சன் பிடிவாதமாக இருந்தார். ஆனால் அந்த பொதுமுடக்க விதிகளைத் தனிப்பட்ட வகையில் மீறியிருந்தார்.

உற்சாக விருந்தில் போரிஸ்
உற்சாக விருந்தில் போரிஸ்

ஊரடங்கின் மத்தியில் நம்பர்10 டவுனிங் தெருவில் இருக்கும் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் தனது நண்பர்களுடன் உற்சாக விருந்து ஒன்றில் திளைத்திருந்தார். இந்த முறைகேடு செய்தியாக வெளியானபோது முதலில் மறுத்துப் பார்த்தார். புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி பிரதமரை நெளிய வைத்ததும், மக்கள் ஆதரவில் சரிந்து விழுந்தார். முக்கியமாக அவர் சார்ந்த கன்சர்வேட்டிவ் கட்சியிலிருந்தே எதிர்ப்பலை வலுத்தது.

நாடாளுமன்றத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்டார். காவல் துறையின் அபராதத்துக்கும் ஆளானார். இந்த வகையில் பிரிட்டன் பிரதமர் ஒருவர் சட்டத்தை மீறியதற்காக காவல் துறையின் அபராதத்துக்கு ஆளான வரலாற்று சாதனையும் படைத்தார்.

நாடாளுமன்ற நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில், போரிஸ் ஜான்சன் தோல்வியைப் பரவலாகப் பலரும் எதிர்பார்த்தனர். எனவே பிரதமர் ரேஸில் காத்திருப்போர் குறித்த கருத்துக் கணிப்புகளும் அங்கே களைகட்டின. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இதில் முன்னின்றார். தனக்கான முறை வந்திருப்பதாக, உரிய ஆதரவைத் தக்கவைத்துக்கொள்வதில் ரிஷி சுனக் மும்முரமானார். கரோனா நலிவிலிருந்து நாட்டை மீட்பதற்கான கடன்களை வழங்குவதில், தன்னுடைய நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து கூடுதல் அக்கறை காட்டினார். கிட்டத்தட்ட விடைபெறும் பக்குவத்துக்கு சென்ற போரிஸ் ஜான்சன், தனது ஆதரவாளர்களிடம் ஆழம் பார்த்த பின்னர், தான் கற்ற அரசியல் அனுபவத்தைச் செயல்படுத்த முடிவானார்.

மனைவி அக்‌ஷதாவுடன் ரிஷி சுனக்
மனைவி அக்‌ஷதாவுடன் ரிஷி சுனக்

ரிஷி சுனக்கின் மனைவியும் இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகளுமான அக்‌ஷதா மூர்த்தியை மையமாக்கி சர்ச்சைகள் கிளப்பப்பட்டன. இன்ஃபோசிஸ் பங்குகள் மற்றும் சொந்த தொழில்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அக்‌ஷதாவின் சொத்து மதிப்பு இங்கிலாந்து ராணியின் சொத்துக்களைவிட அதிகமானது. அக்‌ஷதா தனது இந்திய சொத்துக்களில் இருந்து ஈட்டும் வருமானத்துக்கு பிரிட்டனில் வரி கட்டுவதில்லை என்ற புகார்கள் பாய்ந்தன. இந்த வரிச் சலுகைக்கு பிரிட்டனின் நிதிச்சட்டங்கள் வாய்ப்பளித்தபோதும், கணவர் ரிஷி சுனக்கின் அதிகாரத்தைப் பயன்படுத்தியே வரி செலுத்தாது தவிர்க்கிறார் என்ற பிரச்சாரம் முன்வைக்கப்பட்டது.

இந்தக் களேபரத்தில், அக்‌ஷதா தொடர்பான ஆவணங்கள் பிரதமர் அலுவலகத்தில் இருந்தே கசியவிடப்பட்டது குறித்து சுனக் ஆதரவாளர்கள் புலம்பியது எடுபடவில்லை. தொடர்ந்து, சுனக் வழங்கிய ’கோவிட் மீட்பு’ கடன்களைப் பயன்படுத்தி பலரும் சொத்துக்கள், சொகுசு வாகனங்கள் வாங்கியது தொடர்பான புகார்கள் பூதாகரமாயின.

உக்ரைனில் அதிபர் ஸெலன்ஸ்கியுடன் போரிஸ் ஜான்சன்
உக்ரைனில் அதிபர் ஸெலன்ஸ்கியுடன் போரிஸ் ஜான்சன்

பிரிட்டன் பிரதமராக போரிஸ் ஜான்சனுக்கு மாற்று எவரும் இல்லை என்ற கருத்து மறைமுகமாக திணிக்கப்பட்டது. அது ஓரளவுக்கு வேலையும் செய்தது. மேலும், பிரிட்டன் மக்களின் ரஷ்ய எதிர்ப்பு மனநிலைக்கு உவப்பாக, உக்ரைனுக்கான நவீன ஆயுதங்கள் வழங்குவதிலும் போரிஸ் ஜான்சன் தாராளம் காட்டி வருகிறார். தடாலடியாய், போர்முனையில் துவளும் உக்ரைனுக்கும் நேரடிப் பயணம் ஒன்றையும் மேற்கொண்டார். அது பிரிட்டனுக்கு அப்பாலும் கவன ஈர்ப்பு பெற்றது.

போரிஸ் ஜான்சன் - ரிஷி சுனக்
போரிஸ் ஜான்சன் - ரிஷி சுனக்

முடிவாக போரிஸ் ஜான்சனின் கணிப்புகளும், எதிர்பார்ப்புகளும் பூர்த்தியாகியிருக்கின்றன. தொடர்ந்து பொருளாதாரத்தைத் தூக்கி நிமிர்த்தும் சவாலில் போரிஸ் ஜான்சன் இறங்கப்போகிறார். ஆனால் அங்கு ரிஷி சுனக்கின் உதவியை அவரால் தவிர்க்க முடியாது. குறிப்பாக அடுத்து வரும் தேர்தலுக்கும் போரிஸ் ஜான்சன் குறிவைப்பாரா அல்லது ரிஷி சுனக்குக்கு வழிவிடுவாரா என்ற கேள்வியில் இந்த இருவரின் அரசியல் எதிர்காலம் அடங்கியிருக்கிறது.

போரிஸ் ஜான்சன்
பிரதமர் ரேஸில் முந்தும் ரிஷி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in