பிரதமர் ரேஸில் முந்தும் ரிஷி!

பிரிட்டனை ஆளப்போகும் இந்திய வம்சாவளி இளைஞர்
ரிஷி சுனக்
ரிஷி சுனக்

காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றதன் 75-வது ஆண்டு கொண்டாட்டங்கள் இந்தியாவில் களைகட்டி வருகின்றன. இதன் பொருட்டு, சுதந்திர இந்தியாவின் பெருமைகளை பறைசாற்றுவதற்கான ஏற்பாடுகள் இந்தியாவுக்குள் மும்முரம் பெற்றுள்ளன. இந்தியாவின் வெளியிலிருந்தும் இந்தப் பெருமைக்கு சிறப்பு சேர்க்க உள்ளார் ரிஷி சுனக். பிரிட்டனின் அடுத்த பிரதமர் ரேஸில் முன்னணியில் இருக்கும் ரிஷி வென்றால், முதல் இந்திய வம்சாவளியாக அவர் பிரிட்டன் பிரதமர் நாற்காலியில் அமர்வார்.

சரிந்த போரிஸ்

தற்போதைய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், அண்மையில் தனது 57-வது வயதில் 7-வது குழந்தைக்கு தந்தையானார். கொண்டாட வேண்டிய அம்சம் என்பதால், நெருங்கிய நண்பர்கள் புடைசூழ பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் கூடிக் குலாவி மது அருந்தி மகிழ்ந்திருக்கிறார். அதில் பிழையேதும் இல்லை. ஆனால், இந்த ஆட்டம்பாட்டம் அரங்கேறியபோது நாடு டெல்டா அலையில் அலைக்கழிந்து கொண்டிருந்தது. கொத்துக்கொத்தாய் மக்கள் மடிந்துகொண்டிருந்தனர்.

போரிஸ் ஜான்சன் சர்ச்சைக்கு ஆளான பார்ட்டி
போரிஸ் ஜான்சன் சர்ச்சைக்கு ஆளான பார்ட்டி

அப்போது, பொதுமக்களின் ஆட்சேபத்தையும் மீறி கடுமையான கரோனா கட்டுப்பாடுகளை விதித்திருந்தார் போரிஸ் ஜான்சன். ஆனால் முன்னுதாரணமாய் இருக்க வேண்டிய பிரதமரே, அப்பட்டமாய் அவற்றை மீறி இருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாக, இங்கிலாந்து மக்கள் கொதித்துப்போனார்கள். மக்கள் மதிப்பீட்டில் போரிஸ் ஜான்சன் சரிந்து விழுந்தார். உடனடியாக, போரிஸ் ஜான்சனுக்கு மாற்று யார் என்று ஊடகங்களும் மக்களும் துழாவத் தொடங்கினர்.

அடிமை மண்ணிலிருந்து ஆண்ட பாராளுமன்றத்துக்கு...

ரிஷி சுனக்கின் தாத்தா - பாட்டி ஆகியோர், பிரிட்டிஷ் காலத்து பஞ்சாபில் பிறந்தவர்கள். இனவெறி தலைவிரித்தாடிய அக்காலத்தில், கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள் வாயிலாக இங்கிலாந்தில் குடியேறியவர்கள். அடுத்த தலைமுறை, படித்தால் மட்டுமே எழ முடியும் என்று உணர்ந்தவர்கள். அந்தவகையில் மருத்துவத் துறையில் பணியாற்றிய பெற்றோரால், இங்கிலாந்தின் பணக்கார பள்ளியில் சேர்க்கப்பட்டார் ரிஷி சுனக். தொடர்ந்து ஆக்ஸ்போர்டில் தத்துவம், அரசியல், பொருளாதாரமும், ஸ்டேன்ஃபோர்டில் எம்பிஏவும் முடித்தார். படிப்பு முடித்த கையோடு இங்கிலாந்தின் பிரபல நிதிசார் நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் அமர்ந்தார்.

2015-ல், வடக்கு யார்க்‌ஷையர் ரிச்மண்ட் தொகுதியில் தேர்வாகி பாராளுமன்றம் சென்றார் ரிஷி. கன்சர்வேடிவ் கட்சியின் இளம் எம்பிக்களில் முதன்மையானவராக கட்சியிலும் ஆட்சியிலும் கவனம் பெற்றார். பிரெக்ஸிட் விவகாரத்தில், அப்போதைய பிரதமர் தெரசா மே பதவி துறந்தார். போரிஸ் ஜான்சன் பிரதமரானதும், ரிஷியின் ஆதரவாளர்கள் முக்கிய பதவிகளுக்கு வந்தனர். ரிஷி சுனக் நாட்டின் கருவூலத்தின் தலைமைச் செயலரானார். இவரது செயல்பாடுகள் பிரதமருக்கு நெருக்கமானதில், அடுத்த வாய்ப்பில் நாட்டின் நிதியமைச்சராகவும் உயர்ந்தார் ரிஷி.

ரிஷி சுனக், போரிஸ் ஜான்சன்
ரிஷி சுனக், போரிஸ் ஜான்சன்

கரோனாவால் பெருகிய ஆதரவு

பெருந்தொற்று காலத்தின் டெல்டா அலை பிரிட்டனை புரட்டிப்போட, மக்களின் அதிருப்தியை எதிர்கொள்ள முடியாது போரிஸ் ஜான்சன் தவித்தார். அப்போது அருகிலிருந்து பல்வேறு நிதிச்சலுகைகள், நலத்திட்டங்கள் சார்ந்த முடிவுகளை வழங்கி ரிஷி சுனக் உதவினார். அதுவே, கரோனா காலத்தில் பிரதமர் சார்பில் பத்திரிகையாளர்களை சந்திக்கும் பொறுப்புக்கு ரிஷியைத் தள்ளியது. கரோனா பாதிப்புகளைப் பட்டியலிட்டு பயமுறுத்தாது, மக்களுக்கான சலுகைகள், உதவிகள் குறித்தே ரிஷி அதிகம் எடுத்துரைத்தார்.

தமிழகத்தில் முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் கரோனா களநிலவரத்துக்காக அன்றாடம் டிவிக்களில் தோன்றிய விஜயபாஸ்கர், ஒருகட்டத்தில் முதல்வர் எடப்பாடியைவிட மக்கள் அபிமானத்தில் முந்திய கதை பிரிட்டனிலும் அரங்கேறியது. பிரதமர் மீது அதிருப்தியில் இருந்த பிரிட்டன் மக்களுக்கு ரிஷி சுனக்கின் அணுகுமுறை, மக்கள் மீதான கரிசனம் ஆகியவை பிடித்துப்போயின. மக்கள் கருத்துக்கணிப்புகளில் போரிஸ் பின் தங்கினார். பிரதமருக்கான மாற்றுப் பட்டியலில் ரிஷி சுனக் முதன்மை பெற ஆரம்பித்தார்.

போரிஸ் சமரசம்

கரோனா கட்டுப்பாடுகளை பிரதமரே மீறிய விவகாரம் பின்னாளில் பிரிட்டன் பாராளுமன்றத்தில் அதிருப்தி அலைகளை பெருக்கியபோது, அடுத்த பிரதமர் ரிஷி சுனக் என்ற கருத்து அதிகம் பரவியது. தொடக்கத்தில் போரிஸ் ஜான்சன் துணுக்குற்றாலும், வேறு எவரையும்விட ரிஷி சுனக் தன்னுடைய இடத்தை நிரப்புவதில் ஒருவகையில் சமரசம் கொண்டிருக்கிறார். கரோனா கட்டுப்பாடுகளை மீறியது மட்டுமல்ல, அப்போதைய மருத்துவ நெருக்கடி சூழலை முறையாக நிர்வகிக்காதது, பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான எம்பிக்களை பாதுகாக்க முயன்றது என போரிஸ் ஜான்சனுக்கு எதிரான அதிருப்தி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அதற்கேற்ப மக்கள் அபிமானத்திலும் சரிந்துகொண்டே செல்கிறார் அவர். இன்னொரு பக்கம், ரிஷி சுனக் ஆதரவுக்கான கிராஃப் எகிறிச் செல்கிறது. அரசியல் அனுபவம் போதாது என்று எதிர்ப்பாளர்கள் குற்றம்சாட்டியபோதும், அமைதியாக விஸ்வரூபமெடுத்து வருகிறார் ரிஷி சுனக்.

மூர்த்தி - சுதா தம்பதியுடன் அக்‌ஷதா - ரிஷி
மூர்த்தி - சுதா தம்பதியுடன் அக்‌ஷதா - ரிஷி

செழிப்பில் ராணியை முந்தும் மூர்த்தி மகள்

2006-ல் ஸ்டேன்ட்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது சக மாணவியாக அக்‌ஷதா மூர்த்தியை சந்தித்தார் ரிஷி. வேர்களைத் தேடும் இயல்பான ஆர்வத்தில் அவருடன் நட்பில் நெருங்கினார். நட்பு காதலில் கனிய, 3 ஆண்டுகள் கழித்து பெங்களூருவில் நடைபெற்ற 2 நாள் திருமண விழாவில் அக்‌ஷதாவை கரம்பிடித்தார் ரிஷி. இவர்களுக்கு கிருஷ்ணா, அனுஷ்கா என்று 2 குழந்தைகள் உண்டு.

அக்‌ஷதாவின் தந்தை நாராயணமூர்த்தி, இன்ஃபோசிஸ் மென்பொருள் நிறுவனத்தின் இணை நிறுவனர். தன் வசமிருக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள், தந்தைவழி பங்குகள் ஆகியவற்றின் மூலமே, இங்கிலாந்து ராணியின் சொத்து மதிப்பைவிட 80 மில்லியன் பவுண்டுகளில் அக்‌ஷதா முந்துகிறார் என்பது ஒரு சுவாரசியமான தகவல். இந்தியாவின் கோஹினூர் வைரத்தை சூடியிருக்கும் ராணியை, இந்தியப் பெண்ணொருவர் செல்வச் செழிப்பில் சாதாரணமாக கடந்திருக்கிறார் என்று லண்டன் பத்திரிகைகள் வரிந்து எழுதுகின்றன.

ரிஷியால் சேரும் பெருமை

நிதர்சனத்தில், இந்திய வம்சாவளி என்பதாலும் ரிஷி சுனக் மீதான அபிமானங்கள் அங்கே அதிகம். ரிஷிக்கு முன்பே, இந்திய மருமகன் என்று சொல்லி ஒருவர் இங்கிலாந்து பிரதமர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். வேறு யாருமல்ல; தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன்தான். இவரது முன்னாள் மனைவியருள், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மரினா வீலர் என்பவரும் அடக்கம். ரிஷி பிரிட்டன் பிரதமரானால், இந்தியாவின் மகனும், மருமகனுமாக தனி அடையாளம் பெறுவார். மேலும், அந்தப் பதவியில் அமரப்போகும் முதல் சிறுபான்மையினத்தவர் என்ற பெருமைக்கும் ஆளாவார்.

75-வது சுதந்திர தின ஆண்டில் குதூகலித்திருக்கும் இந்தியர்கள், நம்மை ஆண்ட பிரிட்டனை இனி இந்திய வம்சாவளி ஆளப்போகிறது என்றும் பெருமை கொள்ளலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in