100க்கும் மேலான இஸ்ரேலியர்களை மனிதக் கேடயமாக காஸாவில் பிடித்து வைத்திருக்கும் ஹமாஸ்... இஸ்ரேல் படைகள் திணறல்!

காஸாவில் உக்கிரமடையும் இஸ்ரேல் தாக்குதல்
காஸாவில் உக்கிரமடையும் இஸ்ரேல் தாக்குதல்

காஸாவில் தங்கள் மீதான தாக்குதலை தவிர்க்க, 100க்கும் மேலான இஸ்ரேலியர்களை பணயமாக பிடித்து வைத்திருக்கும் ஹமாஸ் படையினரால், இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தீவிர நடவடிக்கை எடுக்க வழியின்றித் திணறி வருகின்றன.

பாலஸ்தீனியர்களின் காஸா பிராந்தியத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பின் ஆயுதக் குழு, சனிக்கிழமை அன்று காலை இஸ்ரேல் எல்லைக்குள் ஊடுருவி திடீர் தாக்குதல் நடத்தியது. காஸா எல்லைக்குள் இருந்தும், ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை இஸ்ரேல் மீது ஏவியது. இதனால் ஹமாஸூக்கு எதிரான போர் நடவடிக்கையில் இஸ்ரேல் குதித்தது.

காஸாவில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவித்த பின்னரே இஸ்ரேல் தனது தாக்குதலை தொடங்கியது. எனினும், ஹமாஸ் அமைப்பினரின் பதுங்குமிடம் என்ற பெயரில் சில இடங்களை குறிவைத்து ஏவுகணைகளை வீசி அவற்றை நிர்மூலம் செய்தது. இஸ்ரேல் தாக்குதல் காரணமாக காஸா பகுதியிலிருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

காஸாவிலிருந்து இஸ்ரேல் நோக்கி சீறிப்பாயும் ராக்கெட்டுகள்

காஸா மீதான இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் தாக்குதலை முடக்கும் வகையில், முன்னதாக 100க்கும் மேலான இஸ்ரேலியர்களை கடத்தி வந்து அவர்களை மனிதக் கேடயமாக ஹமாஸ் பயன்படுத்தி வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே எப்போது தாக்குதல் தொடங்கினாலும், இஸ்ரேல் பக்கம் சேதம் குறைவாகவும், பாலஸ்தீனம் பக்கம் உயிர்ச் சேதம் அதிகமாகவும் இருப்பது வழக்கம். நவீன பயிற்சிகளை பெற்ற இஸ்ரேல் ராணுவத்தினர் மற்றும் அவர்கள் கொண்டிருக்கும் சாதனங்கள் மூலமாக தங்கள் தரப்பில் உயிர்களை பலிகொடுக்காது எதிர்தரப்புக்கு சேதங்களை விளைவிப்பதில் தீர்க்கமாக செயல்படுவார்கள்.

ஆனால், பாலஸ்தீன போராளி குழுக்கள் அனைத்துமே அத்தகைய நவீன உபகரணங்கள் முதல் பயிற்சிகள் வரை கிடைக்கப்பெறாதவை. உணர்வுபூர்வமான போராட்டம் மற்றும் தீர்க்கத்துக்கு அப்பால் அவர்கள் தத்தளிப்பதால், இருதரப்பு போர்களில் எப்போதும் பாலஸ்தீனம் பக்கமே சேதம் அதிகரித்து இருக்கும். இம்முறையும் இதே சேத விகிதம் தொடர்வதோடு, காஸாவில் பணயக் கைதிகளாக இருக்கும் இஸ்ரேலியர்களை மீட்பதே இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கு பெரும் சவாலாக இருக்கப் போகிறது. அதன் பின்னரே ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான முழுமூச்சிலான தாக்குதலை இஸ்ரேல் மேற்கொள்ளும்.

காஸா நோக்கி விரையும் இஸ்ரேலிய ராணுவத்தினரை உற்சாகமூட்டி வழியனுப்பும் இஸ்ரேலியர்கள்

இதனிடையே, இஸ்ரேல் பாதுகாப்பு படை - பாலஸ்தீனத்தின் காஸா ஹமாஸ் போராளிகள் இடையிலான மோதலில், இஸ்ரேலில் இருக்கும் வெளிநாட்டவர்களும் பலியாகி வருவது சர்வதேச சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. ஹமாஸ் போராளிகளால் தங்கள் தேசத்தின் குடிமகன் கொல்லப்பட்டிருப்பதாக குமுறிய அமெரிக்கா, அதனை சாக்கிட்டு இஸ்ரேலுக்கு உதவியாக தனது நவீன விமானம் தாங்கிய போர்க்கப்பலை அனுப்பியுள்ளது.

இதனால், காஸாவில் மனிதக் கேடயமாக இருக்கும் இஸ்ரேலியர்கள் முழுவதுமாக மீட்கப்பட்டதுடன், முன்னெப்போதும் இல்லாத மூர்க்கமான தாக்குதலை அமெரிக்கா உதவியோடு இஸ்ரேல் மேற்கொள்ளும் எனத் தெரிகிறது. இவற்றின் மத்தியில் போரின் 3வது நாளான இன்று இருதரப்பிலுமாக உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,100ஐ கடந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு வந்தாச்சு... டிசம்பர் 3-ல் வாக்கு எண்ணிக்கை!

புதிய மதுக்கடைகள் திறக்கவேண்டும்... முதல்வருக்கு அழுத்தம் கொடுக்கும் எம்எல்ஏக்கள்!

‘இஸ்ரேலில் நடக்கும் படுகொலைக்கு உடனே குரல் கொடுக்கும் மோடி, மணிப்பூர் பிரச்சினையில் மவுனம் காப்பது வெட்கக்கேடு’

பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு திடீரென வெளியேறிய பவா செல்லதுரை... புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

சென்னையில் சோகம்: பயிற்சியின் போது ஜிம் பயிற்சியாளர் மாரடைப்பால் மரணம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in