காமதேனு
இன்று 'புன்னகை’ இளவரசி என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை சிநேகா தனது 42வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.
மும்பையில், தெலுங்கு குடும்பத்தில் பிறந்த நடிகை சிநேகாவின் இயற்பெயர் சுஹாசினி ராஜாராம் நாயுடு. நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இன்றும் செல்லமாக சுஹா.
மாடலாக தனது பயணத்தைத் தொடங்கியவர் கடந்த 2000ம் ஆண்டில் ‘என்னவளே’ படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். ஆனால், அவர் நடிக்க முதலில் ஒப்பந்தமான படம் ‘விரும்புகிறேன்’.
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட எண்பதுக்கும் மேற்பட்டப் படங்களில் நடித்திருக்கிறார்.
சிநேகா தேர்ந்த பரதநாட்டியக் கலைஞரும் கூட. ’சந்திரமுகி’ படத்தின் கங்கா கதாபாத்திரத்திற்காக பரிசீலனையில் இவர் பெயரும் இருந்தது. ஆனால், தேதி பிரச்சினை காரணமாக அவரால் ’சந்திரமுகி’யில் நடிக்க முடியவில்லை.
2009ல் வெளியான ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் நடித்த போது இவருக்கும் நடிகர் பிரசன்னாவுக்கும் இடையே காதல் மலர்ந்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்தது.
’ஆட்டோகிராஃப்’, ‘விரும்புகிறேன்’, ’பிரிவோம் சந்திப்போம்’, ‘புதுப்பேட்டை’ போன்ற படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
’புதுப்பேட்டை’ படத்தில் சிநேகாவை வேறொரு பரிமாணத்தில் பார்க்க முடிந்ததாக ரசிகர்கள் பாராட்டினர்.
குறிப்பாக, தனுஷுடன் அவர் மீண்டும் இணைந்த ‘பட்டாஸ்’ படத்தில் அவர் கர்ப்பமாக இருந்த போது நடித்திருந்தார்.
தற்போது படங்கள், ரியாலிட்டி ஷோ, குடும்பம் என பிஸியாக இருக்கும் சிநேகாவுக்கு ’காமதேனு’ வாசகர்கள் சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துகள்!