சிவனருள் பெற்ற அடியார்கள் – 6

ஆலயத் தொண்டு புரிந்தவர்கள் - 2.நமிநந்தியடிகள்
சிவனருள் பெற்ற அடியார்கள் – 6
Updated on
3 min read

ஏமப்பேரூரில் அந்தணர் குலத்தில் பிறந்த நமிநந்தியடிகள், சிவபெருமானின் திருவடியை இடையறாது வாழ்த்தி வழிபட்டு வந்தவர். சத்திய மொழியாக கருதப்படும் வேத நூல்களில் கூறப்படும் ஒழுக்கத்தை கடைபிடித்து, தூய திருநீற்றின் சார்பே மெய்ப்பொருள் என்று வாழ்ந்த சிவனடியார்.

சோழர்களுக்கு சொந்தமான பொன்னி நாட்டில் அமைந்த ஏமப்பேரூர், சிறந்த சிவத்தலமாக போற்றப்படுகிறது. திருவாரூருக்குத் தெற்கில் இருந்து 6 கிமீ தொலைவில் திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் உள்ளது ஏமப்பேரூர். இத்தலத்தில் உள்ள அந்தணர்கள் வேள்விச் சாலையில் பூஜை மேடை அமைத்து அதில் வெண் மணல் பரப்பி, இடையே செந்தீ வளர்த்து வேத பாராயணம் செய்வது வழக்கம்.

வேதத்தில் சிறந்து விளங்கிய நமிநந்தியடிகள் என்னும் சிவனடியார், ஏமப்பேரூர் அருகே உள்ள திருவாரூர் தலத்துக்குச் சென்று, புற்றிடங்கொண்ட பெருமானை வணங்கி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். திருவாரூர் கோயிலின் திருமதிலுக்கு அருகே அறநெறி என்ற கோயிலில் சிவபெருமான் அறநெறியப்பர் என்ற திருநாமம் தாங்கி அருள்பாலிக்கிறார்.

நமிநந்தியடிகள்
நமிநந்தியடிகள்

நமிநந்தியடிகள் தினமும் அறநெறியப்பரையும், அம்மையையும் பக்தி பெருக்கோடு வழிபட்டு வந்தார். அதுசமயம் கோயில் பிரகாரங்களில் வளர்ந்துள்ள புல், தேவையற்ற செடிகளைக் களைந்தார். கோயிலை தூய்மைப்படுத்தினார்.

கோயிலில் எண்ணற்ற விளக்குகளை ஏற்றி வழிபட விரும்பினார் நமிநந்தியடிகள். அப்போது அந்தி நேரம் நெருங்குவதை அறிந்தார். கதிரவன் மறைந்து கொண்டிருந்தான். தனது ஊர் சென்று நெய் கொண்டு வந்து விளக்கேற்ற போதிய நேரம் இல்லை என்பதை உணர்ந்தார். உடனே கோயிலுக்கு வெளியே சென்று அங்கு உள்ள ஒரு வீட்டுக்குள் சென்று தனக்கு விளக்கு ஏற்ற நெய் தருமாறு வேண்டினார்.

திருவாரூர் தோரோட்டம்...
திருவாரூர் தோரோட்டம்...

அது ஒரு சமணரின் இல்லம் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. சைவ சமயத்தைச் சார்ந்த ஒருவர் நெய் வேண்டி நிற்பதை அறிந்த அந்த இல்ல உரிமையாளர் நெய் தர மறுத்தார். மேலும், “கையில் நெருப்பை ஏந்திய உங்கள் இறைவனுக்கு எதற்காக விளக்கு? அது மிகையாகும். உங்களுக்கு விளக்கேற்ற விருப்பம் இருந்தால், தண்ணீரை ஊற்றி விளக்கேற்றவும்” என்று கூறினார்.

செய்வதறியாது தவித்தார் நமிநந்தியடிகள். இப்படியும் சிலர் உள்ளனரே என்று வருந்தினார். ஈசனை வேண்டி, அவரையே தனக்கு ஒரு வழி கூறுமாறு கேட்டார் நமிநந்தியடிகள்.

அப்போது வானில் இருந்து ஓர் அசரீரி ஒலித்தது. “அன்பரே வருந்தற்க... விளக்குப் பணி செய்ய நானே ஒரு வழி கூறுகிறேன். இக்கோயில் குளத்துக்குச் சென்று, நீர் முகந்து வந்து விளக்கேற்றி மகிழ்வாயாக” என்ற இறைவாக்கைக் கேட்டு துள்ளிக் குதித்தார் நமிநந்தியடிகள்.

கங்கையை முடிமேல் வைத்த இறைவனின் கருணையை எண்ணி உள்ளம் உருகினார். தூய நீர் நிறைந்த குளத்தில் இறங்கி, ஐந்தெழுத்து ஓதி, தண்ணீர் முகந்து வந்தார். கோயிலில் உள்ள அகல்களில், திரியிட்டு, தண்ணீரை ஊற்றி விளக்கு ஏற்றினார். நமிநந்தியடிகளை முன்னர் எள்ளி நகையாடியவர்கள், தற்போது தண்ணீர் ஊற்றி விளக்கேற்றியதைக் கண்டு அதிசயித்தனர்.

அதிகாலை வரை எரியும் அளவுக்கு அகல்களில் தண்ணீர் ஊற்றிவிட்டு தனது இல்லத்துக்குச் செல்ல தயாரானார் அடிகள். இல்லம் திரும்பிய அவர், நித்திய நியமங்களைச் செய்து, உணவு உண்டு உறங்கினார்.

அதிகாலை திருவாரூரை அடைந்து, இறைவனை வணங்கி, அருகில் உள்ள அறநெறியப்பரையும் வணங்கி, கோயிலில் தூய்மைப் பணி மேற்கொண்டார். ஆலயப் பணி நிறைவடைந்ததும், மாலை நேரத்தில் முன்புபோல் நீரால் விளக்கேற்றி இறைவனையும், அம்மையையும் வழிபட்டார். இப்பணிகள் தினந்தோறும் நடைபெற்றன,

(சிவன் கோயிலில் அணையும் தருவாயில் இருந்த விளக்கின் திரியை, தன்னையும் அறியாமல் ஓர் எலி தூண்டியது. இந்த புண்ணியத்தின் பயனால் எலி, பலிச்சக்கரவர்த்தியாகப் பிறந்தது என்பதால் கோயிலில் விளக்கேற்றுவது சிறந்த ஆலயப் பணியாக கருதப்படுகிறது)

நமிநந்தியடிகளின் திருத்தொண்டைப் பற்றியும், இறைவன் மீது அவர் கொண்ட பக்தியைப் பற்றியும் அறிந்த சோழ மன்னர், அந்தக் கோயிலுக்கு அவரையே தலைவராக்கினார். கோயில் பணிகள் தடைபடாது நடைபெற, நிறைய பொன்னும் பொருளும் அளித்தார்.

திருவாரூர் தோரோட்டம்...
திருவாரூர் தோரோட்டம்...

அடிகளாரும் எம்பெருமானுக்கு பெருவிழாக்கள் பல நடத்தி மகிழ்ந்தார். ஆண்டுதோறும் பங்குனி உத்திரப் பெருவிழாவை வெகு விமரிசையாக நடத்தினார். அந்த சமயத்தில் ஏமப்பேரூரை அடுத்துள்ள மணலி என்ற ஊரில் திருவாரூர் தியாகேசப் பெருமான் எழுந்தருள்வது வழக்கம். மணலியில் தியாகேசப் பெருமானுக்கு நடைபெற்ற பெருவிழாவில் நமிநந்தியடிகளும் கலந்து கொண்டார்.

விழாவில் தொண்டர்கள், அன்பர்கள் சாதி, மத பேதமின்றி கலந்து கொண்டனர். அன்றிரவு நமிநந்தியடிகளின் கனவில் தோன்றிய தியாகேசப் பெருமான், “திருவாரூரில் பிறந்தவர்கள் அனைவரும் எனது கண்களே. இந்தப் பேருண்மையை அறிய திருவாரூர் வந்து என்னை தரிசிப்பாயாக” என்று திருவாய் மலர்ந்தார்.

மறுநாள் காலை எழுந்து நீராடி, திருநீறு பூசி, திருவாரூர் கோயிலுக்கு புறப்பட்டார் நமிநந்தியடிகள். வழியில் உள்ள அனைவரும் சிவகண உருவத்தில் பேரொளிப் பிழம்பாக திருநீற்று மேனியுடன் திகழ்வதைக் கண்டார். அனைவரும் சிவசொரூபமாக தோற்றம் கொண்டுள்ளதை எண்ணி மகிழ்ந்தார்.

இச்சம்பவம் நடைபெற்ற நிமிடத்தில் இருந்து, நமிநந்தியடிகளுக்கு திருவாரூரை விட்டுச் செல்ல மனம் வரவில்லை. தியாகேசப் பெருமானின் திருவடிகளிலேயே காலத்தைக் கடத்த எண்ணினார். அதன்படி ஏமப்பேரூரில் இருந்து மனைவியுடன் திருவாரூர் வந்து தியாகேசப் பெருமானுக்கு திருத்தொண்டுகளைச் செய்து வாழ்ந்து வந்தார்.

நீண்ட நாட்கள் திருவாரூரில் இருந்து, அறநெறியப்பரின் திருவடி நிழலை அடைந்து பேரின்பம் பூண்டார் நமிநந்தியடிகள்.

‘அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்’

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க...

சிவனருள் பெற்ற அடியார்கள் – 6
சிவனருள் பெற்ற அடியார்கள் – 5

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in