மீனாட்சி சுந்தரேஸ்வரர்
மீனாட்சி சுந்தரேஸ்வரர்

சிவனருள் பெற்ற அடியார்கள் – 5

ஆலயத் தொண்டு புரிந்தவர்கள் - 1.மூர்த்தி நாயனார்
Published on

சைவ நெறி தழைக்கச் செய்த வணிகரான மூர்த்தி நாயனார் ஆலயத் தொண்டு புரிந்து சிவனருள் பெற்றவர். மதுரையில் பிறந்த இவர், சுற்றமும் தொடர்பும் நீத்தவர்.

பாண்டிய நாடு பழமையான நாடு. நற்குலத்தில் பிறந்து, செல்வச் செழிப்பு மிக்க குடிமக்கள் நிறைந்து வாழும் சிறப்பைப் பெற்ற இந்நாடு முத்தமிழ் தந்து முதன்மை பெற்றது. சந்தனச் சோலையாக விளங்கும் பொதிகை மலையில் இருந்து வரும் தென்றல் காற்றால் குளிர்ந்த பூமியாக விளங்கும் மதுரையில், மூர்த்தியார் என்பவர் வணிகர் குலத்தில் தோன்றினார்.

அகப்பற்று, புறப்பற்று ஆகியவற்றை விட்டு பற்றற்றவராக இருந்து சிவபெருமானையே எந்நேரமும் வணங்கி வந்தார் மூர்த்தியார். உற்றார் உறவினருடன் எவ்வித தொடர்பும் இன்றி, சொக்கநாத பெருமானையே தனது உறவினராக, நண்பராக, இறைவனாகக் கருதி வாழ்ந்து வந்தார்.

மூர்த்தி நாயனார்
மூர்த்தி நாயனார்

தினமும் சொக்கநாதருக்கு சந்தனக் காப்பு சாற்றும் பணிக்கு தன்னால் ஆன உதவியை செய்து வந்தார். அன்புடன் சந்தனம் அரைத்துத் தரும் பணியை மனநிறைவுடன் செய்து வந்தார். இப்படியே பல நாட்கள் சென்றன.

ஒருசமயம், வடுகக் கருநாடு ஆளும் ஓர் அரசன், பாண்டிய நாட்டைக் கைப்பற்றும் நோக்குடன் நால்வகைப் படையுடன் தென்திசை நோக்கி வந்தான். அப்படி வந்தவன் பாண்டிய மன்னனை வீழ்த்தி, மதுரை மாநகரைக் கைப்பற்றி, ஆட்சியைப் பிடித்தான். புதிய அரசன், சைவ நெறியை தவிர்த்து, சமண சமயத்தைப் போற்றி வந்ததால், சிவனடியார்களுக்கு பல இன்னல்களை விளைவித்து வந்தான்.

சிவனடியார்கள் செய்யும் சிவத் தொண்டுக்கு இடையூறுகள் விளைவித்தான். மூர்த்தியாரையும் சிவத்தொண்டு புரியாத வண்ணம் செய்தான். இருப்பினும் அரசனின் கொடுமைகளைப் பொருட்படுத்தாது, தனது சந்தனம் அரைக்கும் பணியைச் செய்து வந்தார் மூர்த்தியார்.

மூர்த்தியாருக்கு சந்தனக் கட்டைகள் கிடைக்காதபடி செய்தான் அரசன். பகல் முழுவதும் சந்தனக் கட்டைகளைத் தேடி அலைந்தார் மூர்த்தியார். பல இடங்களில் தேடினார். தனக்கு வேண்டியவர்களிடம் சந்தனக் கட்டைகள் இருக்கிறதா என்று கேட்டார். மிகவும் சோர்ந்த நிலையில் சோமசுந்தர பெருமானின் கோயிலை அடைந்தார் மூர்த்தியார்.

எம்பெருமானுடைய திருமேனிக்கு பூசும் சந்தனக் கட்டைக்குத்தான் முட்டு (தடை) வந்தது. அதைத் தேய்க்கும் கைக்கு முட்டு வரவில்லை என்று கூறிக் கொண்டு, தன் கையையே சந்தனம் தேய்க்கும் பாறையில் தேய்த்தார். தோல், நரம்பு, எலும்பு என்று அனைத்தும் தேய்ந்து கரைந்தன.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்...
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்...

குருதி பெருகியதைக் கண்டு இறைவன் பொறுக்காமல், தன் அருள்வாக்கால், மூர்த்தியாரைக் குளிர்வித்தார். “ஐயனே... என் மீது கொண்ட பேரன்பால், இனியும் உம்மை வருத்திக் கொள்ள வேண்டாம். உமக்கு கொடுமை இழைத்தவனுக்கு தக்க தண்டனை காத்திருக்கிறது. அவன் வலிந்து கொண்ட நாடு முழுவதையும் நீவிர் ஏற்று, அநீதி நீக்கி, நீதியை நிலைநிறுத்தி, நியதியாக சைவத் திருப்பணி செய்து, நிறைவில் சிவலோகம் வந்து என்னை அடைவீர்” என்று திருவாய் மலர்ந்தார் ஈசன்.

ஈசனின் திருவாக்கைக் கேட்ட மூர்த்தியார், கையை பாறையில் தேய்ப்பதை நிறுத்தினார். அவரது கையும் பழைய நிலையை அடைந்தது. புண்ணாகிய தன்மை நீங்கி கை செழுமையுற்றது.

அன்றைய இரவில் வடுக கருநாட்டு அரசனின் உயிர் பிரிந்தது. அவனது உறவினர்கள் வாடினர். மறுநாள் காலை அமைச்சர்கள் கூடி இறுதிச் சடங்குகளை நிறைவேற்றினர். அரசனுக்கு வாரிசு யாரும் இல்லாததால், இனி அறநெறி வழுவாது நாட்டை ஆள புதிய மன்னர் வேண்டும் என்று சிந்தித்தனர்.

சொக்கநாதப் பெருமான் கோயிலுக்குச் சென்று ஈசனிடம் புதிய மன்னர் குறித்து விண்ணப்பம் வைத்தனர். அரண்மனைக்கு வந்து பட்டத்து யானையின் கண்ணைக் கட்டி, இந்நாட்டுக்கு ஓர் அரசனைத் தேர்ந்தெடுத்து வருக என்று அனுப்பினர். பட்டத்து யானை நெடுவீதிகளில் சுற்றித் திரிந்து நிறைவாக சோமசுந்தரப் பெருமான் கோயிலுக்கு வந்தது. அங்கு நின்றிருந்த மூர்த்தியாரைத் தூக்கி தன் முதுகில் வைத்துக் கொண்டது.

யானையின் செயல் கண்டு ஆச்சரியப்பட்ட மூர்த்தியார், இறைவனின் விருப்பம் எதுவோ அதுவே நடைபெறட்டும் என்றார். அதைக் கண்ட அமைச்சர்களும், சிவனடியாரான மூர்த்தியாரை வணங்கி அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.

மதுரை மாநகர் விழாக்கோலம் பூண்டது. எங்கும் சங்கொலி, மேளதாளங்கள் முழங்க, நாடு முழுவதும் தோரணங்கள் கட்டப்பட்டன. வெண்கொற்றக் குடை சுழன்றது. மந்திரம் ஓதி, வேத பண்டிதர்கள் வேள்வித் தீ மூட்டினர். தங்கக் குடங்களில் நீர் நிரப்பி வைத்தனர். சிந்தையில் சிவமே பொருள் என்றிருந்த மூர்த்தியார், இனி சைவ ஒளி ஓங்கி, இந்த அரசை ஏற்று ஆள்வேன் என்று உறுதி கொண்டார். மேலும், அரசாட்சி புரிய வேண்டிய இச்சூழலிலும் திருநீறு, உருத்திராக்கம் அணிந்து, சடைமுடியை மணிமுடியாகக் கொண்டு இருப்பேன் என்று இறைவனிடம் உறுதியளித்தார்.

அமைச்சர்கள், மூர்த்தியாரை அரண்மனைக்கு அழைத்து வந்து, முடிசூட்டு விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். புதிய அரசரின் குறிப்பறிந்து செயல்பட்டு, அவருக்கு உறுதுணையாக இருந்தனர். அரசருடைய ஆடம்பரமான ஆடை, அணிகலன்கள் ஏதும் அணியாமல், துறவொழுக்கத்துடன், பரமனையே எந்நேரமும் மனதில் இருத்தி, தெய்வத் தமிழும், சைவத் திறமும் ஓங்க நீண்ட நாள் அரசாட்சி புரிந்த மூர்த்தியார், நிறைவில் வேதமுதலாம் நாதன் திருவடிகளில் இளைப்பாறினார்.

சிவனடியாருக்கு மனத்தாலும், வாக்காலும், காயத்தாலும் ஒரு சிறிதும் இடர் புரியாது நன்மையே புரிய வேண்டும் என்பது மூர்த்தியார் வாழ்வில் இருந்தும், வடுக கருநாட்டு மன்னனின் வாழ்வில் இருந்தும் நாம் அறிந்து கொள்கிறோம்.

“மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்”

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க...

மீனாட்சி சுந்தரேஸ்வரர்
சிவனருள் பெற்ற அடியார்கள் – 4
x
காமதேனு
kamadenu.hindutamil.in