சிவனருள் பெற்ற அடியார்கள் – 32

தலங்களை தரிசித்து பாடியவர்கள் - 6.விறன்மிண்ட நாயனார்  
திருவாரூர் சிவன், அம்பாள்
திருவாரூர் சிவன், அம்பாள்
Updated on
3 min read

நீர்வளம், நிலவளம், மழை வளம் என அனைத்து வளங்களையும் தன்னகத்தே கொண்டிருந்த திருச்செங்குன்றூர் மலைநாடு, சேர நாடு என்றும் அழைக்கப்பட்டது. புராண நிகழ்வுகளை உள்ளடக்கிய இந்நாடு தோன்றுவதற்கு காரணமாக பரசுராமர் இருந்தார் என்று அறியப்படுகிறது. 

விறன்மிண்டர்
விறன்மிண்டர்

சிவபெருமானை தியானித்து தவம் மேற்கொண்ட பரசுராமர், தவத்தின் நிறைவில் பரசு என்ற மழுவாயுதத்தைப் பெற்றார். இவரது தந்தை ஜமதக்கினி முனிவர், அரச வம்சத்தினரால் கொலை செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த பரசுராமர், அரச குலத்தை 21 தலைமுறைக்கு பழிவாங்கி வதைத்தார். வேந்தர்களின் குருதியில் தந்தைக்கு செய்ய வேண்டிய பிதுர்க்கடன்களைச் செய்த பரசுராமர், சினம் தணிந்து அமைதி அடைந்து இந்த நிலவுலகத்தை காசிப முனிவருக்கு தானம் செய்துவிட்டு மேற்கு கடலை நோக்கி பயணம் மேற்கொண்டார். 

மேற்குக் கடலை அடைந்த பரசுராமர், தனது தவ வலிமையால், மழுவாயுதத்தைப் பயன்படுத்தி, கடல்நீரை விலகச் செய்து மலைநாடு என்ற திருநாட்டை தோற்றுவித்தார். இந்த மலைநாட்டில் பற்பல வகைகளில் முத்துக்கள் கிடைத்துக் கொண்டிருக்கும். செல்வ வளம் நிறைந்த மலை நாட்டில் உள்ள தலங்களில் மிக முக்கியமான தலங்களில் செங்குன்றூரும் ஒன்றாகும். 

செங்குன்றூர் பகுதியில் பெரும்பாலும் உழவுத் தொழில் செய்யும் வேளாளர் குடிமக்களே நிறைந்து காணப்பட்டனர். அவர்களுள் ஒருவராக அவதரித்த விறன்மிண்டர்  (விறல்மிண்டர்) என்பவர் சிறந்த சிவனடியாராக விளங்கினார். திருநீறும், கண்டிகையும் (உருத்திராக்க மாலை) அணிந்து தினமும் சிவதரிசனம் செய்து வந்தார். சிவனடியார்களிடமும் பேரன்பு கொண்டு, அவர்களுக்கு வேண்டியதை செய்து வந்தார். சிவனடியார்களைப் பற்றி யாராவது தரம் தாழ்த்திப் பேசினால், உடனே அவர்களை தண்டிப்பார். அந்த சமயத்தில். விறல்மிண்டரின் பக்தி வீரமாக மாறிவிடும். (விறல் என்றால் வீரம் என்று பொருள்படும். விறல்மிண்டர் என்ற பெயரே இவரது வீரம் பற்றிய விளக்கமாக அமைந்துவிட்டது) 

அஞ்சா நெஞ்சமும், அறநெறி உள்ளமும் படைத்த விறல்மிண்டர், அடிக்கடி சிவன் கோயில்களுக்குச் சென்று இறைவழிபாடு செய்து வந்தார். கோயிலுக்குள் நுழையும் முன்பு சிவனடியார்களை வணங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 

தலயாத்திரை சென்றபோது ஒருசமயம் திருவாரூர் தலத்தை அடைந்தார். அப்போது தேவாசிரியன் மண்டபத்தில் குழுமியிருந்த அடியார்களை வணங்கி, தாமும் அவர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். 

அப்போது சுந்தரமூர்த்தி சுவாமிகள் சுவாமி தரிசனம் செய்ய கோயிலுக்கு வந்திருந்தார். அவர் அடியார்களை மனத்தில் வணங்கியபடி, கோயிலுக்குள் சென்றார். ‘இறைவனை வழிபடுவது எளிது. ஆனால், அடியாரை வழிபடுவது அரிது. அடியாரை வணங்கும் பண்பு ஒருவருக்கு இருக்க வேண்டும். அவர்களை வணங்குவதற்கு உரிய தகுதி, பக்தி, அன்பு இருத்தல் வேண்டும். இவற்றை எல்லாம் பெறாத என்னால் எப்படி அடியாரை வணங்க முடியும்?’ என்று நினைத்து, சுந்தரமூர்த்தி சுவாமிகள் பொதுவாக அடியாரை மனத்தில் வணங்குவது வழக்கம். 

சுந்தரமூர்த்தி சுவாமிகளின் மனப்பக்குவத்தை உணராத விறல்மிண்டர், அவர் மீது சினம் கொண்டார். சுந்தரரின் செவிகளில் விழுமாறு, “தேவாதி தேவர்களாக விளங்கும் அடியார் பெருமக்களை வணங்காது செல்வதால் என்ன பயன்? வன்றொண்டர்  (சுந்தரர்) அடியார்களுக்கு புறம்பானவர். அவரை ஆட்கொண்ட வீதிவிடங்கப் பெருமானும் அடியார்களுக்கு புறம்பானவர்தான்” என்றார் விறல்மிண்டர். 

விறல்மிண்டர் கூறியதைக் கேட்ட சுந்தரமூர்த்தி சுவாமிகள், விறல்மிண்டர் அடியார்களின் மீது கொண்டிருந்த பக்தியை நினைத்து பெருமையடைந்தார். சுந்தரமூர்த்தி எம்பெருமான் முன்னர் விழுந்து வணங்கி, “அடியார்களுக்கு அடியனாகும் பேரின்ப நிலையை எமக்கு தந்தருள வேண்டும்” என்றார். உடனே இறைவன், “தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்று அடி எடுத்துக் கொடுக்க, சுந்தரமூர்த்தி சுவாமிகள், ‘திருத்தொண்டத் தொகை’ என்ற திருப்பதிகத்தைப் பாடினார்.  சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையைக் கேட்டு விறல்மிண்டர் பெருமகிழ்ச்சி அடைந்தார். 

விறன்மிண்டர் பிறந்த இடம்
விறன்மிண்டர் பிறந்த இடம்

(திருத்தொண்டத் தொகை இவ்வுலகுக்குக் கிடைக்க விறல்மிண்ட நாயனாரும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. திருத்தொண்டத் தொகையை முன்னிருத்தி, திருத்தொண்டர்களின் பெருமைகளைச் சொல்லும் விதமாக பெரியபுராணத்தை சேக்கிழார் பெருமான் இயற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது) 

விறல்மிண்டர் குறித்து மற்றொரு சம்பவமும் கூறப்படுகிறது. சுந்தரர் மீது கோபம் கொண்ட விறல்மிண்டர் சுந்தரரை வெறுத்ததோடு மட்டுமல்லாமல் திருவாரூரையும் வெறுத்தார். திருவாரூர் எல்லையை தீண்டுவதில்லை என்று உறுதி பூண்டார். தமது இல்லத்துக்கு வரும் அடியார்களிடம், “தாங்கள் எந்த ஊரில் இருந்து வருகிறீர்கள்?” என்று கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர்கள் திருவாரூர் என்று கூறிவிட்டால், கடும் கோபம் கொண்டு அவர்களை தண்டிப்பார். அவர்கள் காலை துண்டிப்பார். 

இதைத் தொடர்ந்து, அவர்கள் இல்லத்துக்கு வரும் அடியார்களிடம், “என் கணவர் உங்கள் ஊர் பற்றி கேட்டால் திருவாரூர் என்று கூற வேண்டாம்” என்று விறல்மிண்டரின் மனைவி கூறுவார். 

ஒருசமயம் திருவாரூர் தியாகேசப் பெருமான், சிவனடியார் வேடம் பூண்டு, விறல்மிண்டரின் இல்லத்துக்கு வந்தார். விறல்மிண்டரின் மனைவி எச்சரிக்கை விடுத்தும், அந்த அடியார், தான் திருவாரூரில் இருந்து வருவதாக விறல்மிண்டரிடம் கூறினார். கோபமடைந்த விறல்மிண்டர், அவரை தண்டிக்க எழுந்தார். அதற்குள் சிவனடியார் எழுந்து ஓடத் தொடங்கினார். திருவாரூர் எல்லைக்குள் சென்றார். 

 “திருவாரூர் எல்லைக்குள் வந்துவிட்டீர்களே?” என்று சிவனடியார் கேட்க, தன் தவற்றை உணர்ந்த விறல்மிண்டர், கொடுவாளால் தமது காலை வெட்டிக் கொண்டார். உடனே திருவாரூர் தியாகேசப் பெருமான்  ரிஷபாரூடராக கமலாம்பாளுடன் விறல்மிண்டருக்கு காட்சியருளினார். சுந்தரரின் பெருமைகளை சிவபெருமான் விறல்மிண்டருக்கு எடுத்துரைத்தார். 

அடியார்களிடம் அளவிலாத அன்பு கொண்ட விறல்மிண்டர், சுந்தரரின் மீது கொண்டிருந்த தவறான எண்ணத்தை மாற்றிக் கொண்டார்.கயிலையில் இறைவன் திருவடியைப் பிரியாது வழிபடும் சிவகணங்களுக்குத் தலைவராகத் திகழும் திருவருளைப் பெற்றார். 

‘விறன்மிண்டர்க்கு அடியேன்’

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க...

திருவாரூர் சிவன், அம்பாள்
சிவனருள் பெற்ற அடியார்கள் – 31

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in