சிவனருள் பெற்ற அடியார்கள் – 31

தலங்களை தரிசித்து பாடியவர்கள் - 5.சேரமான் பெருமாள் நாயனார்
சிவனருள் பெற்ற அடியார்கள் – 31
Updated on
3 min read

அரசர் குலத்தில் அவதரித்த சேரமான் பெருமாள் நாயனார், சுந்தரமூர்த்தி சுவாமிகளுடன் திருபுவனம், களக்காடு, கீழ்வேளூர், திருமறைக்காடு, திருவையாறு உள்ளிட்ட எண்ணற்ற சிவத்தலங்களுக்குச் சென்று, பாடல்கள் புனைந்து சுவாமி தரிசனம் செய்தார். சிவனடியார்களுக்கு வேண்டுவன அளித்து மகிழ்ந்தவர் இவர். 

மலைநாடு என்று புகழப்படும் சேர நாட்டின் தலைநகரமாக கொடுங்கோளூர் விளங்கியது. மாகோதை என்று அழைக்கப்படும் இந்நகரத்தில் புகழ்பெற்ற திருத்தலமாக திருவஞ்சளைக் களம் உள்ளது. அஞ்சைக்களத்தீஸ்வரர் என்ற திருநாமத்துடன் உமையம்மையுடன் இத்தலத்தில் சிவபெருமான் கோயில் கொண்டுள்ளார். 

சேரர் குலம் தழைக்க கொடுங்கோளூர் தலத்தில் பெருமாக்கோதையார் மன்னர் குலத்தில் அவதரித்து, படைக்கலப் பயிற்சிகளை விரும்பாமல், சிவ மார்க்கத்தை உணர்ந்து, சமய நூல்களைக் கற்று வந்தார். அரச போகத்தையும், அரண்மனை வாழ்க்கையையும் வெறுத்தார். இதைத் தொடர்ந்து சிவனார் எழுந்தருளியிருக்கும் திருவஞ்சைக் களம் என்ற தலத்தை அடைந்து, கோயில் அருகே மாளிகை அமைத்துக் கொண்டு சிவத் தொண்டுகள் புரிந்து வந்தார். ஒவ்வொரு நாளும் அதிகாலை எழுந்து, நீராடி, வேத நெறிப்படி உடல் முழுவதும் திருநீறு அணிந்து கொள்வார். 

மலர்வனம் சென்று மலர்களைப் பறித்து ஈசனுக்கு மாலையாக தொடுத்து கோயிலுக்குள் செல்வார். கோயிலைத் தூய்மைப்படுத்தி, தாம் கொண்டு வந்த மாலைகளை ஈசனுக்கு சூட்டி மகிழ்வார். பூமாலைகளுடன், தன்னுடைய பாமாலைகளால் ஈசனைப் போற்றிப் பாடுவார். 

அந்த சமயத்தில் கொடுங்கோளூரில் இருந்து அரசாட்சி புரிந்து வந்த மன்னன் செங்கோற்பொறையன், தனது மன்னர் பட்டத்தை உதறித் தள்ளி, கானகம் சென்று தவம் புரியத் தொடங்கினார். அமைச்சர்கள் அனைவரும் கூடி, இளவரசர்  பெருமாக்கோதையை மன்னராக்க முயற்சி மேற்கொண்டனர். அனைவரும் திருவஞ்சைக் களம் வந்து, இதுகுறித்து பெருமாக்கோதையை சந்தித்து, விஷயத்தைக் கூறினர். 

அரண்மனை வாழ்வு, அரவணிந்த அண்ணலை (சிவபெருமானை) மறக்கச் செய்யும் என்று எண்ணிய பெருமாக்கோதை, இறைவன் சம்மதம் தெரிவித்தால் மட்டுமே தன்னால் அரச பதவியை ஏற்க இயலும் என்று அமைச்சர்களிடம் தெரிவித்தார். அமைச்சர்களும் இதற்கு உடன்பட்டனர். பெருமாக்கோதை அமைச்சர்களை அழைத்துக் கொண்டு, கோயிலுக்குச் சென்று எம்பெருமானிடம் தமது விண்ணப்பத்தைப் பகர்ந்தார். 

சிவபெருமான் தனது அசரீரி வாக்கால், பெருமாக்கோதையார் அரச பதவியை ஏற்க சம்மதம் தெரிவித்தார். அரச பதவியுடன், சிவத் தொண்டையும் செய்து வர பெருமாக்கோதையாரைப் பணித்தார். மேலும் விலங்குகள், பறவைகள் போன்ற ஐந்தறிவு படைத்த உயிர்கள் பேசக் கூடிய பேச்சை அறியும் ஆற்றலையும் அவருக்கு அளித்தார். 

ஈசனின் சம்மதத்தை அமைச்சர்களிடம் தெரிவித்த பெருமாக்கோதையார் ஒரு நன்னாளில் அரச பதவியை ஏற்றார். பெருமாகோதையார் சேரமான் பெருமாள் ஆனார். மணிமுடிப் பெருவிழா சிறப்புற நிறைவு பெற்றது. பட்டத்து யானை மீது நகரை வலம் வந்த சேரமான் பெருமாள், வழியில் வண்ணார் ஒருவர் உவர்மண் சுமந்தவாறு செல்வதைக் காண்கிறார். உவர்மண் மேனியில் பட்டு மழை நீரோடும் வியர்வையோடும்  கலந்து உலர்ந்து காணப்பட்டது. வண்ணாரின் வெண்ணிறக் கோலத்தைக் கண்ட அரசர், அவரை சிவனடியாராகவே நினைத்தார். யானையின் மீதிருந்து கீழே இறங்கி வண்ணாரை வணங்கினார். அடியார் மீது அரசர் கொண்டுள்ள அன்பை நினைத்து, அமைச்சர்களும் மெய்யன்பர்களும் அதிசயித்தனர். வண்ணார் மிகவும் அஞ்சி நடுங்கி நின்றார். 

அரண்மனை வந்தடைந்த சேரமான் பெருமாள், அன்று முதல் சிறந்த அரசாட்சி புரிந்தார். சோழர்களும் பாண்டியர்களும் சேர மன்னருக்கு நட்பாகினர். தினந்தோறும் மணமிக்க மஞ்சள் நீர், சந்தனம், நறும்புகை, தூப தீபம், திருவமுது முதலிய வழிபாட்டுப் பொருட்களுடன் சிவாகம முறைப்படி, மன்னர் வழிபட்டு வந்தார்.  மன்னரின் பக்தியில் மகிழ்ந்த அம்பலவாணர், வழிபாட்டின் நிறைவில் தமது காற்சிலம்பின் ஒலியைக் கேட்டு இன்புறும் பேறை மன்னருக்கு  அளித்தார். (இதனால் சேரமான் பெருமாள் கழற்றிற்று அறிவார் என்று அழைக்கப்பட்டார்) 

பாணபத்திரன் என்ற புலவர், மதுரையம்பதியில் இன்னிசைப் பாடல்களால் சிவபெருமானை வழிபட்டு வந்தார். அவரது இசையில் மகிழ்ந்த ஈசன், அவரது வறுமையைப் போக்கும் முயற்சியில் இறங்கினார். பாணபத்திரனின் கனவில் தோன்றிய ஈசன், உடனே சென்று சேரமான் பெருமாளை சந்திக்கும்படி கூறி, சேரமானிடம் சேர்ப்பிக்குமாறு ஒரு ஸ்ரீமுகம் (ஓலை) எழுதித் தருகிறார். அதிகாலை விழித்தெழுந்த பாணபத்திரன், திருவோலையுடன் கொடுங்கோளுர் சென்று சேர மன்னரை சந்திக்கிறார். 

ஈசன் அளித்த திருவோலையைக் கண்ட மன்னர், மிகுந்த மகிழ்ச்சியுடன், பாணபத்திரனிடம் பொன்னையும் பொருளையும் வாரி வழங்குகிறார். தமக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு பாணபத்திரர் விடைபெறுகிறார். 

அரச பணியுடன் சிவத் தொண்டையும் செய்து வரும் சேர மன்னர், ஒருநாள் வழிபாடு நிறைவடைந்ததும், இறைவனின் பாதமணிச் சிலம்பொலி கேட்காததால் வருந்துகிறார். ஈசனிடம் இது குறித்து வினவுகிறார். உடனே ஈசனின் பாதச் சிலம்பொலி கேட்கிறது. உடனே ஓர் அசரீரியும் ஒலிக்கிறது. 

“சேரனே... எம்மால் தடுத்தாட் கொள்ளப்பட்ட தோழன் சுந்தரன் தில்லை பொன்னம்பலத்தை வழிபட்டு பாடியதைக் கேட்டு மெய் மறந்தேன். அதனாலேயே என் சிலம்பொலி சற்று தாமதமாக உனக்குக் கேட்டுள்ளது” என்று ஈசனின் மொழியைக் கேட்ட சேர மன்னர், சுந்தரரைக் காண்பதற்கு எண்ணுகிறார். அரச பொறுப்பை அமைச்சர்களிடம் ஒப்படைக்கிறார். ஒரு நன்னாளில் சுந்தரரைக் காணப் புறப்படுகிறார். 

திருவஞ்சைக்களம், தில்லை, சீர்காழி ஆகிய தலங்களை தரிசித்து, திருவாரூரை அடைகிறார். சுந்தரரை சந்தித்து மகிழ்ந்தார். அவருடன் சேர்ந்து தியாகேசப் பெருமானை தரிசித்து ‘திருவாரூர்த் திகழும் மணிக்கோவை’ என்னும் பிரபந்தத்தைப் பாடினார். இருவரும் சேர்ந்து பல தலங்களை தரிசித்து மகிழ்ந்தனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு கொடுங்கோளூரை அடைந்து, சேரமான் பெருமாளின் அரண்மனையில் சுந்தரர் தங்கியிருந்தார். சுந்தரர் திருவாரூர் கிளம்பும் சமயத்தில் அவருக்கு பொன்னும் பொருளும் கொடுத்தனுப்பினார் சேரமான் பெருமாள். 

சிவபெருமானின் தூதர்கள், ஒருநாள் சுந்தரரிடம் வந்து, கைலாச மலைக்கு திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டதை தெரிவிக்கின்றனர். சுந்தரர் ஒரு வெள்ளை யானையின் மீது ஏறி கைலாய மலைக்கு கிளம்புகிறார். சேர மன்னனும் குதிரையில் அவரைப் பின் தொடர்கிறார். 

‘கொடைக் கழறிற்றறிவார்க்கு அடியேன்’

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க...

சிவனருள் பெற்ற அடியார்கள் – 31
சிவனருள் பெற்ற அடியார்கள் – 30

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in