சிவனருள் பெற்ற அடியார்கள் – 29

தலங்களை தரிசித்து பாடியவர்கள்- 2.ஐயடிகள் காடவர் கோன் நாயனார்
சிவனருள் பெற்ற அடியார்கள் – 29
Updated on
3 min read

காஞ்சிபுரத்தில் பிறந்த பல்லவ அரசரான ஐயடிகள் காடவர் கோன் நாயனார், சைவ நெறியை எங்கும் பரவச் செய்து, நீதி நெறி வழுவாது அரசு புரிந்தவர். சிவபெருமான் மீது கொண்ட பக்தியால் அரச வாழ்வை வெறுத்து, தலங்கள்தோறும் சென்று வெண்பாக்கள் பாடி சிவ வழிபாடு செய்தார். 

தொண்டை நாட்டின் தலைநகராக காஞ்சிபுரம் விளங்கியது. பல்லவர்களின் ஆட்சிக் காலத்தில் நாட்டு மக்கள் மன்னர்களை தெய்வமாகக் கொண்டாடினர், எவ்வுயிரும் நலம் பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் மன்னர்களும்  சிறப்பாக ஆட்சி புரிந்தனர். அவர்களுள் தலை சிறந்தவராக ஐயடிகள் காடவர் கோன் என்ற அரசர் விளங்கினார். இவரது ஆட்சிக் காலத்தில் சைவம் தழைத்தது. கலைகளும் சிறப்புற்றன. கலைஞர்கள், சிவனடியார்கள் என்று அனைவருக்கும் தேவையானவற்றை செய்து கொடுத்து பல்லவ அரசர் மகிழ்ந்தார். 

வீரத்திலும் விவேகத்திலும் சிறந்து விளங்கியதுடன் பக்தியிலும் இறை வழிபாட்டிலும் மேம்பட்டு விளங்கினார்.  மேலும் கல்வி கேள்விகளில் சிறப்புற்று விளங்கினார். நல்ல தமிழ்ப் புலமை பெற்ற ஐயடிகள் காடவர் கோன், வெண்பா பாடுவதிலும் திறம்பெற்று இருந்தார். தமிழ் வெண்பாக்கள் பாடி தினமும் சிவபெருமானை வழிபட்டு வந்தார். 

வடமொழி, தென்மொழி, இயல், இசை, நாடகம் ஆகியவற்றை வளர்க்க அரும்பாடுபட்டார். சிவன் கோயில்கள் பலவற்றுக்கு சென்று அரனாரை  தரிசித்து மகிழ்ந்தார். சிவபெருமான் மீது கொண்ட பக்தியால், அரசாட்சியை துறக்க எண்ணினார். இறைபக்திக்கு அரசாட்சி பெரும் பாரமாக இருப்பதாக உணர்ந்தார். 

ஒருநாள் தன் மகன் சிவ விஷ்ணுவை அழைத்து, அவனிடம் அரசாட்சியை ஒப்படைத்தார் ஐயடிகள் காடவர் கோன். குமாரனுக்கு முடிசூட்டி மகிழ்ந்த மன்னர், அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு சிவ  யாத்திரையைத் தொடங்கினார்.

தில்லை உள்ளிட்ட பல தலங்களுக்குச் சென்று எம்பெருமானை உள்ளம் குழைத்து, வெண்பாக்களால் அர்ச்சித்து மகிழ்ந்த ஐயடிகள் காடவர் கோன், நீண்ட நாட்கள் சிவ வழிபாடு செய்து அரனாரின் திருவடி நிழலில் இளைப்பாறினார். 

 ‘ஐயடிகள்  காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்’ 

**

3.கழற்சிங்க நாயனார் 

காஞ்சிபுரத்தில் பிறந்த பல்லவ அரசரான கழற்சிங்கர், சிவபெருமான் மீது தீராத பக்தி கொண்டவர். வடநாட்டு மன்னரை வீழ்த்தி, பெற்ற செல்வம் அனைத்தையும் ஆலய வழிபாட்டுக்கும், அடியார்கள் வழிபாட்டுக்கும் பயன்படுத்தி, எங்கும் சைவநெறி தழைக்கும்படி செய்தவர். நாட்டில் உள்ள சிவத் தலங்களுக்குச் சென்று இறைவனை தரிசித்து மகிழ்ந்தார். 

தொண்டை நாட்டின் தலைநகரான காஞ்சிபுரத்தில், பல்லவ அரசர் கழற்சிங்கர், மக்கள் நன்மையை பெரிதாகக் கருதி நல்லாட்சி புரிந்து வந்தார். சிறந்த சிவபக்தரான இவர், பல கோயில்களுக்குச் சென்று அரனாரை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 

ஒருநாள், திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் தியாகேசப் பெருமானை தரிசிக்க எண்ணி, தனது பிராட்டி மற்றும் பரிவாரங்களுடன் புறப்பட்டார். திருவாரூரை அடைந்து கோயிலுக்குள் சென்று புற்றிடம் கொண்ட நாயகரை வழிபட்டார். மன்னர் பக்தியில் மூழ்கி வழிபட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில், அரசியார் கோயில் பிரகாரத்தில் வலம் வருவதற்கு  புறப்பட்டார்.

பிரகார வலம் வந்தபோது, அங்கிருக்கும் அழகிய மண்டபங்களைக் கண்டு, அரசியார் அதிசயித்தார். அங்கு மணி மண்டபத்தில் தொண்டர்கள் அமர்ந்து மலர் தொடுத்துக் கொண்டிருந்தனர். வண்ண வண்ண மலர்கள் அரசியாரின் எண்ணத்தைக் கொள்ளை கொண்டன. மலர்களின் நறுமணத்தில் தன்னை மறந்தார். அரசியார், தன்னையும் அறியாமல், தரையில் இருந்த ஒரு மலரை எடுத்து மோந்து பார்த்தார். 

அங்கு அமர்ந்திருந்த தொண்டர்களுள், செருத்துணை நாயனாரும் ஒருவர். அடியார்கள் உள்ளிட்ட யாராக இருந்தாலும் தவறு செய்தால், அவர்களை கண்டித்து, தண்டனை அளிக்கக்கூடிய குணம் படைத்த செருத்துணையார், அரசியாரின் இச்செயலைக் கண்டதும் வெகுண்டார். 

அரசியாயிற்றே என்று சிறிதும் எண்ணாமல், செருத்துணையார், அரனாரின் அர்ச்சனைக்குரிய மலர்களை நுகர்ந்து பார்த்து பிழை புரிந்த அவரது மூக்கை வாளால் சீவினார்.  உடனே அரசியார் மயக்கமுற்று கீழே விழுந்தார். இச்செய்தி, இறைவழிபாட்டில் ஈடுபட்டிருந்த மன்னருக்கு எட்டியது. மன்னரும் அரசியார் விழுந்த இடத்துக்கு வந்தார். “இக்கொடிய செயலைச் செய்தது யார்?” என்று வினவினார்.

மன்னரின் அருகே வந்த செருத்துணையார், “இச்செயலை செய்தது நான்தான்” என்றார். மன்னரின் மனம் அறிந்த செருத்துணையார், ”அரசியார் எம்பெருமானுக்குரிய மலர்களை மோந்து பார்த்தார்” என்றார். 

நடந்தவற்றை உணர்ந்தகொண்ட கழற்சிங்கர், “மலரை எடுத்த கையை அல்லவா முதலில் தாங்கள் துண்டித்திருக்க வேண்டும்?” என்று கூறியதோடு நில்லாமல், சற்றும் யோசிக்காமல் அரசியாரின் கையைத் துண்டித்தார். அரசரின் பக்தி நிலை கண்டு செருத்துணையார், அவரை வணங்கினார். 

மன்னருக்கு அருள் செய்ய திருவுள்ளம் கொண்ட புற்றிடங்கொண்ட பெருமான், சக்திதேவியுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, அவருக்கு காட்சியருளினார். பட்டத்தரசியாருக்கு ஏற்பட்ட துன்பத்தையும் நீக்கி அருளினார். 

மன்னருடைய சிவபக்தியையும், அடியார் மீது அவர் கொண்டுள்ள பக்தியையும் கண்டு, அடியார்கள், அங்கிருந்த தொண்டர்கள், பக்தர்கள், அவரைப் போற்றிப் பணிந்தனர். மன்னரின் புகழ் எங்கும் பரவியது. 

குற்றம் யார் புரிந்தாலும், குற்றம் குற்றமே என்பதை உலகுக்கு உணர்த்திய கழற்சிங்க நாயனார், பல தலங்கள் சென்று ஈசன் மீது பாடல்கள் பாடி, தரிசித்து மகிழ்ந்தார்.  நீண்ட காலம் ஆலயத் தொண்டு, அடியார் தொண்டு புரிந்து, அரனாரின் திருவடிகளைத் தொழுது பேரின்பப் பெருவாழ்வை அடைந்தார். 

‘கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்’

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க:

சிவனருள் பெற்ற அடியார்கள் – 29
சிவனருள் பெற்ற அடியார்கள் – 28

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in