சிவனருள் பெற்ற அடியார்கள் – 28

தலங்களை தரிசித்து பாடியவர்கள் - 1.காரைக்கால் அம்மையார்
காரைக்கால் அம்மையார்
காரைக்கால் அம்மையார்

பெண் நாயன்மார்களுள் ஒருவரான காரைக்கால் அம்மையார், பல தலங்கள்தோறும் சென்று ஈசனை தரிசித்து, பாடல்கள் புனைந்து வழிபட்டார். புனிதவதி என்ற இயற்பெயர் கொண்ட இவர், கயிலை மலை மீது கைகளால் நடந்து சென்றதால், ஈசன் மனமகிழ்ந்து, அம்மையே என்று அழைத்தார். காரைக்காலில் அவதரித்ததால் காரைக்கால் அம்மையார் என்று அழைக்கப்படுகிறார்.

காரைக்கால் அம்மையார்
காரைக்கால் அம்மையார்

வளம் நிறைந்த சோழ நாட்டில் உள்ள காரைக்காலில், கிபி 4-ம் நூற்றாண்டில் தனதத்தனார் என்ற வணிகர் வாழ்ந்து வந்தார். அறநெறி தவறாமல் வாணிபம் செய்து வந்த இவருக்கு மகளாக அவதரித்த புனிதவதி, சிறுவயது முதலே பக்திப் பெருக்கோடு சிவபெருமானை வழிபட்டு வந்தார். மங்கைப் பருவம் எய்ததும், நாகப்பட்டினத்தில் வசிக்கும் வணிகர் பரமதத்தனுக்கு மணம் செய்து வைக்கப்பட்டார் புனிதவதி.

ஒரே மகள் என்பதால், அவரைப் பிரிய மனமில்லாத தனதத்தன், அவரை நாகப்பட்டினத்துக்கு அனுப்பாமல், தன் இல்லம் அருகிலேயே காரைக்காலில் மற்றொரு இல்லத்தில் மகளையும் மருமகனையும் தனிக்குடித்தனம் வைத்தார்.

பரமதத்தன், காரைக்காலிலேயே வணிகம் செய்து வந்தார். ஒருநாள் பரமதத்தனை சந்திக்க வந்த ஒருவர், 2 மாங்கனிகளைக் கொண்டு வந்தார், மாங்கனிகளைப் பெற்றுக் கொண்ட பரமதத்தன், தன் பணியாளை அழைத்து, அவற்றை தன் இல்லத்தில் கொண்டு கொடுக்கச் சொன்னார்.

பணியாளும், பரமதத்தன் இல்லம் சென்று மாங்கனிகளை புனிதவதியிடம் சேர்ப்பித்தார். அவற்றைப் பெற்றுக் கொண்ட புனிதவதி, உள்ளே சென்று சமையல் பணிகளை கவனித்தார். சற்று நேரத்துக்கெல்லாம், வாயிற்புரத்தில் இருந்து ‘சிவாய நம’ என்ற குரல் கேட்டது.

வெளியே வந்த புனிதவதி, அங்கு ஒரு சிவனடியார் நின்றிருப்பதைக் கண்டார். அவர் பசியுடன் இருப்பதை உணர்ந்த புனிதவதி, அவருக்கு அமுது பரிமாறி, இலையில் ஒரு மாம்பழத்தையும் வைத்தார். உணவருந்திய சிவனடியார், புனிதவதியை வாழ்த்திவிட்டுச் சென்றார்.

சற்று நேரத்தில், மதிய உணவுக்கு இல்லம் திரும்பினார் பரமதத்தன். புனிதவதி அவருக்கு உணவு பரிமாறிவிட்டு, மீதம் இருந்த ஒரு மாம்பழத்தை அரிந்து இலையில் இட்டார். மாங்கனி மிகவும் சுவையாக இருந்ததால், மற்றொரு பழத்தையும் அரிந்து தருமாறு பரமதத்தன் கேட்டார். மாம்பழத்தை சிவனடியாருக்கு பரிமாறியதால் செய்வதறியாது தவித்த புனிதவதி, தன்னைக் காக்குமாறு ஈசனிடம் வேண்டியார். அப்போது அவர் கையில் ஒரு மாங்கனி வந்தடைந்தது.

இறைவனை தியானித்தபடியே அந்த மாங்கனியை கணவரின் இலையில் பரிமாறினார். இரண்டு மாங்கனிக்கும் சுவையில் மாறுபாடு இருப்பதை உணர்ந்த பரமதத்தன், அதுகுறித்து புனிதவதியிடம் வினவினார். புனிதவதி அனைத்து விஷயங்களையும் கூற, ஆச்சரியத்தில் ஆழ்ந்தார் பரமதத்தன். இறைவனிடம் வேண்டி, தனக்கு மற்றொரு மாங்கனியைப் பெற்றுத் தருமாறு மனைவியைப் பணித்தார்.

புனிதவதியும், தனக்கு மீண்டும் ஒரு மாங்கனி அளிக்கும்படி இறைவனை வேண்டினார். அவ்வாறு வழங்கவில்லையென்றால் தான் பொய் உரைத்ததாக தனது கணவர் கருதுவார் என்றும், தன்னைக் காக்குமாறும் இறைவனை பிரார்த்தித்தார்.

இறைவனும் அருள்பாலித்தார். புனிதவதியின் கையில் ஒரு மாங்கனி தோன்றியது. அதை அவர் தன் கணவரிடம் அளித்தார். ஆனால், பரமதத்தன் கையில் இருந்து மாங்கனி மறைந்தது. இதைக் கண்டு பயந்த பரமதத்தன், தன் மனைவி சாதாரண மனிதப் பிறவி அல்ல என்பதை உணர்ந்தார். தெய்வீகத் தன்மை பொருந்தியவர் என்பதை மனதில் கொண்டார்.

இறையருள் பெற்றவர் தொழுவதற்கு உரியவர் என்பதால் இனி அவருடன் வாழ இயலாது என்பதை உணர்ந்தார் பரமதத்தன். இனி தனித்து வாழ்வதே சிறந்தது என்பதை புனிதவதியிடம் தெரிவித்தார். செய்வதறியாது தவித்த புனிதவதி, தன்னை பக்குவப்படுத்திக் கொண்டார். உலகப் பற்றை துறக்க எண்ணினார். கணவரும் வாணிபம் செய்ய வெளியூர் செல்ல இருப்பதால், தன்னை தெய்வ சிந்தனையில் ஈடுபடுத்திக் கொண்டார் புனிதவதி.

வெளியூர் சென்ற பரமதத்தன், நிறைந்த பொருள் ஈட்டிய பின், காரைக்கால் செல்லாமல் பாண்டிய நாட்டில் மற்றொரு நகரத்தில் வாழ்ந்து வந்தார். அவ்வூரில் உள்ள வணிகரின் மகளைத் திருமணம் செய்து கொண்டு, இல்லறம் நடத்தி வந்தார். தனது மகளுக்கு ‘புனிதவதி’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

பரமதத்தன் இருக்கும் இடம் அறிந்து, அவ்வூருக்குச் சென்றார் புனிதவதி. புனிதவதி தன்னைத் தேடி, தான் இருக்கும் ஊருக்கு வந்ததை அறிந்த பரமதத்தன், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்று புனிதவதியை சந்தித்தார்.

கணவரின் முடிவு தனக்கு வேதனை தந்தாலும், இனி தனக்கு அழகு, இளமை தேவையில்லை என்று உணர்ந்து, தனக்கு பேய் வடிவம் அளிக்கும்படி இறைவனை வேண்டினார். இறைவனும் அவ்வாறே அருளினார். பேய் வடிவம் கொண்ட புனிதவதி, காரைக்கால் அம்மையார் என்று அழைக்கப்பட்டார். தமிழில் நல்ல புலமை பெற்று, அருட்கவிகளை இயற்றினார். அற்புதத் திருவந்தாதி, திரு இரட்டை மணிமாலை ஆகிய பிரபந்தங்களை பாடினார்.

திருக்கயிலை சென்று ஈசனை தரிசிக்க எண்ணி, அங்கு சென்றார் அம்மையார். இறைவனும், “யாது வரம் வேண்டும்?” என்று கேட்க, அதற்கு, “பிறவாமை வேண்டும், அப்படி பிறந்துவிட்டால் உன்னை மறவாமை வேண்டும். உனது புகழ்பாடி உன் ஆனந்தத் தாண்டவத்தை அருகில் இருந்து கண்டு இன்புற வேண்டும்” என்று காரைக்கால் அம்மையார் வேண்டினார்.

திருவாலங்காட்டில் தான் ஆட, அதை அருகில் இருந்து கண்டுகளித்துப் பாடி மகிழலாம் என்று இறைவன் அருளினார். தலையாலேயே நடந்து திருவாலங்காட்டை அடைந்த அம்மையார், ‘கொங்கை மகிழ்’ எனத் தொடங்கி மூத்த திருப்பதிகம் பாடி இறைவனின் ஆனந்தக் கூத்தை கண்டு மகிழ்ந்தார்.

மாங்கனி திருவிழா
மாங்கனி திருவிழா

இவ்வாறு திருப்பதிகங்கள் பாடி, பல ஆண்டுகள் வாழ்ந்து, ஈசனின் திருவடி நிழலில் இளைப்பாறினார் அம்மையார். காரைக்கால் சோமநாதர் கோயிலில் அம்மையார் நினைவாக ஆனி பௌர்ணமி தினத்தில் மாங்கனித் திருவிழா இன்றைக்கும் நடைபெறுகிறது.

‘பேயார்க்கும் அடியேன்’

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க...

காரைக்கால் அம்மையார்
சிவனருள் பெற்ற அடியார்கள் – 27

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in