சிவனருள் பெற்ற அடியார்கள் – 27

கோயில் கட்டி வழிபட்டவர்கள் - 2.காரி நாயனார்
திருக்கடையூர் கோயில்
திருக்கடையூர் கோயில்

திருக்கடையூரில் பிறந்த காரி நாயனார், செந்தமிழை ஆய்ந்து அறிந்தவர். கவி பாடுவதில் வல்லவரான இவர், திருக்கயிலை நாதன் பேரில் திருக்கோவைகளை இயற்றியுள்ளார். தான் ஈட்டிய பொருள் அனைத்தையும் கோயில் கட்டவும், அடியார்க்கு தந்து உதவவும் பயன்படுத்தினார். 

மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடி சாலை மார்க்கத்தில், 23 கிமீ தொலைவில் திருக்கடையூர் என்ற தலம் உள்ளது. இத்தலத்தில்  வேதம் ஓதும் மறையோர் பலர் வசித்து வந்தனர். அவர்களுள் செந்தமிழில் புலமை பெற்ற காரியார் என்பவர் கவி பாடி, தினமும் சிவபெருமானை வழிபட்டு வந்தார். 

காரியார்
காரியார்

சிந்தையில் சிவபெருமான் இருக்க, காரியார், அவர் மீது பாடல்கள் புனையத் தொடங்கினார். (காரியார் நாவில் சரஸ்வதி இருந்தாள் என்று புலவர்கள் பாராட்டுவதுண்டு) திருநீற்றின் பெருமையை உணர்ந்து, திருசடை அண்ணலையும், அவரது அடியார்களையும் வணங்கி மகிழ்ந்தார். சிவனடியார்களுக்குத் தேவையானவற்றை செய்து வந்தார். கோயில்கள் தோறும் சென்று சிவனை வழிபட்டு வந்தார். அக்கோயில்களில் திருப்பணிகளையும் மேற்கொண்டார். 

ஒருசமயம் காரிக்கோவை என்ற நூலை இயற்றினார் காரியார். இந்நூலில் உள்ள பாடல்களை, சொல் விளங்குபடியும், அதன் உட்பொருள் மறைந்து இருக்கும்படியும், அவர் அமைந்துள்ளார். மூவேந்தர்களின் நட்பைப் பெற்றதால், இந்நூலின் தெள்ளிய உரையை அவர்கள் உணரும்படி எடுத்துரைத்தார். 

காரியாரின் தமிழ்ப் புலமையை உணர்ந்த மூவேந்தர்கள், அவருக்கு  பொன்னும் பொருளும் பரிசாகக் கொடுத்து சிறப்பித்தனர்.  பொற்குவியல்களுடன் திருக்கடையூர் திரும்பிய காரியார், சிவன் கோயில்களைப் புதுப்பித்தார். மேலும் புதிதாக பல சிவன் கோயில்களைக் கட்டி குடமுழுக்கு நிகழ்த்தினார்.  

Aanmeegam

சிவனடியார்களுக்கு அன்புடன் இன்னமுது அளித்தார். அவர்களுக்கு பெருநிதிகளை அள்ளி அள்ளிக் கொடுத்து மகிழ்ந்தார். தமிழறிவால் நூல்கள் பல இயற்றினார். அதில் இருந்து கிடைக்கும் பெரும் பொருள் அனைத்தையும் சிவன் கோயில்களுக்கும், சிவனடியார்களுக்கும் வழங்கி பேரின்பம் பூண்டார். 

திருக்கடையூரில் கோயில் கொண்டுள்ள அமிர்தகடேஸ்வரரையும் அபிராமவல்லியையும் தரிசித்து, பாமாலைகள் பாடி மகிழ்ந்தார். 

திருக்கடையூர் கோயில் வரலாறு 

ஒருசமயம் பிரம்மதேவர் சிவபெருமானிடம் ஞான உபதேசம் பெற விரும்பி, கையிலை மலைக்குச் சென்றார். சிவபெருமான், அவரிடம் வில்வ விதைகளை அளித்து, அவற்றை பூலோகத்தில் விதைக்கப் பணிக்கிறார். எந்த இடத்தில், விதைக்கப்பட்ட ஒரு நாழிகைக்குள் (24 நிமிடங்கள்) வில்வ மரம் வளர்கிறதோ, அதே இடத்தில் ஞான உபதேசம் வழங்குவதாக சிவபெருமான் பிரம்மதேவரிடம் கூறினார். அதன்படி பிரம்மதேவர், திருக்கடையூர் வந்து சிவபெருமானை வணங்கி, வில்வ விதைகளை விதைத்தார். அவை ஒரு நாழிகைக்குள் வளரத் தொடங்கின. 

உடனே சிவபெருமான் பிரம்மதேவருக்கு காட்சி அருளி, ஞான உபதேசம் செய்து வைத்தார். இவரே இத்தலத்தில் வில்வ வன நாதராக தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார் 

மற்றொரு சமயம் பாற்கடலில் இருந்து அமிர்தம் கிடைக்கப் பெற்ற மகிழ்ச்சியில் தேவர்கள், விநாயகப் பெருமானை வணங்காமல் சென்றனர். இதைக் கண்ட விநாயகப் பெருமான், அமிர்த கலசத்தை மறைத்து வைத்தார்.  

தங்கள் தவறை உணர்ந்த தேவர்கள், விநாயகப் பெருமானை வணங்கி, அமிர்த கலசத்தைப் பெற்றுக் கொண்டு, சிவபூஜை செய்வதற்காக இத்தலத்தில் வைத்தனர். அமிர்த கலசம் இருந்த இடத்தில் சுயம்புலிங்கம் தோன்றியது. அமிர்த கலசத்தில் இருந்து தோன்றியதால், சிவபெருமான், ‘அமிர்தகடேஸ்வரர்’ என்றும் பெயர் பெற்றார். 

காலசம்ஹார மூர்த்தி 

மிருகண்டு முனிவர் – மருத்துவதி அம்மாள்  தம்பதிக்கு நீண்ட நாட்களாக பிள்ளை வரம் கிட்டவில்லை. முனிவரின் தவத்தை மெச்சி, குறைந்த ஆயுளுடன், நிறைந்த அறிவுடைய குழந்தை பிறக்கும் என்று சிவபெருமான் திருவாய் மலர்ந்தார். அப்படிப் பிறந்த தன் குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்று பெயரிட்டு வளர்த்தார் மிருகண்டு முனிவர். குழந்தைக்கு 16 வயது ஆனதும், அவனது ஆயுள் பற்றிய கவலை குடும்பத்தாருக்கு வந்தது. 

இதை அறிந்து கொண்ட மார்க்கண்டேயன், பல சிவத்தலங்களுக்குச் சென்று வழிபட்டான். 107 சிவன் கோயில்களை வழிபட்ட பின்னர், 108-வது தலமாக இத்தலம் வந்தான். அப்போது அவனது இறுதிநாளும் வந்துவிட்டது. 

மார்க்கண்டேயனின் உயிரைப் பறிக்க எமன் வந்ததும், உடனே மார்க்கண்டேயன், ஓடிச்சென்று அமிர்தகடேஸ்வரரை இறுகக் கட்டிக் கொண்டான். எமன் பாசக் கயிற்றை வீச, அது அமிர்தகடேஸ்வரரையும் சேர்த்து இழுத்தது. கோபம் கொண்ட சிவபெருமான், எமனை எட்டி உதைத்து, சம்ஹாரம் செய்தார். மார்க்கண்டேயனை ”என்றும் பதினாறாய் இருப்பாய்” என்று சிவபெருமான் வாழ்த்தினார். 

காலனை அழித்ததால், பூமியில் இறப்பே இல்லாமல் போனது. பூமி தேவிக்கு பாரம் தாங்கமுடியவில்லை. இதை அறிந்த தேவி, ஈசனிடம் முறையிட, காலனுக்கு மீண்டும் உயிர் தந்தருளினார் ஈசன்.  இதனால் இங்குள்ள ஈசன் ‘கால சம்ஹார மூர்த்தி’ என்று அழைக்கப்படுகிறார்.  

கோயில் சிறப்புகள் 

சிவபெருமான் சந்நிதிக்கு வலதுபுறம் நந்திதேவருக்கு அருகே வெளிப் பிரகாரத்தில் உள்ள கள்ள வாரண விநாயகர் சந்நிதி, விநாயகப் பெருமானின் மூன்றாம் படை வீடாகப் போற்றப்படுகிறது. 

திருக்கடையூர் அபிராமி அம்மன்
திருக்கடையூர் அபிராமி அம்மன்

சோழர்களால் கட்டப்பட்ட இக்கோயில் சிவபெருமானின் தேவாரப் பாடல் பெற்ற 274-வது சிவன் கோயில்களில், 110-வது தேவாரத் தலம் ஆகும். அப்பர் பெருமான், திருஞான சம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோர் இத்தல இறைவன் மீது தேவாரப் பாடல்கள் பாடியுள்ளனர்.  தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 47-வது தலம் ஆகும். அம்மனின்  51 சக்தி பீடங்களில் இது கால சக்தி பீடமாகும். 

அல்லும் பகலும், அமிர்தகடேஸ்வரர், அபிராமவல்லியை வழிபட்ட காரி நாயனார், நீண்ட நாள் ஈசன் புகழ் பாடி, அவருடன் இரண்டறக் கலந்தார். 

 ‘காரிக்கு அடியேன்’

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க...

திருக்கடையூர் கோயில்
சிவனருள் பெற்ற அடியார்கள் – 26

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in