சிவனருள் பெற்ற அடியார்கள் – 22

சமணரோடு போரிட்டு சைவநெறி பரப்பியவர்கள் - 1.தண்டியடிகள்
திருவாரூர் சிவன்
திருவாரூர் சிவன்

திருவாரூரில் பிறவியிலேயெ கண்ணின்றி அவதரித்த தண்டியடிகள், தேவாசிரியன் மண்டபத்தில் ஐந்தெழுத்து ஓதி ஈசனை வணங்கி வந்தவர். சமணரோடு வாதிட்டு, மக்கள் பயனடையும் வண்ணம் நீர்நிலை அமைத்து தொண்டு புரிந்தவர்.

தண்டியடிகள்
தண்டியடிகள்

சோழ நாட்டில் தலைசிறந்த தலமாக திருவாரூர் விளங்கி வருகிறது. இத்தலத்தில் தண்டியடிகள் என்ற சிவனடியார் வாழ்ந்து வந்தார். பிறவியிலேயே கண் பார்வை இழந்த இவர், தனது அகக் கண்களாலேயே தினமும் திருவாரூர் தியாகேசப் பெருமானை தரிசித்து வணங்கி வந்தார்.

இவர் வாழ்ந்த காலத்தில், திருவாரூரில் சமணர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. மேலும் அவர்கள், சைவ சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கு பலவிதங்களில் இன்னல்கள் அளித்து வந்தனர். திருவாரூர் கமலாலயக் குளத்தின் அருகே சமணர்கள் பல மடங்களைக் கட்டிக்கொண்டு, தங்கள் மதத்தைப் பரப்பும் நோக்கில் செயல்பட்டு வந்தனர்.

தினமும் குளத்தில் நீராடி வரும் தண்டியடிகளுக்கு, சமணர்களின் செயல்பாடு கவலை அளித்தது. அவர்கள் குளத்தை மண்ணால் மூடி விடுவார்களோ என்று வேதனைப்பட்டார். இதைத் தொடர்ந்து குளத்தின் பரப்பையும், ஆழத்தையும் பெரிதுபடுத்த எண்ணிய தண்டியடிகள், அதற்கான திருப்பணிகளில் ஈடுபட்டார்.

திருவாரூர் சிவன்
திருவாரூர் சிவன்

குளத்தின் நடுவிலும், குளத்தைச் சுற்றியும் அடையாள முனைகள் நட்டு கயிறு கட்டினார். மண்ணை வெட்டி கூடையில் எடுத்துக் கொள்வார். கயிற்றை அடையாளமாக பிடித்துக் கொண்டு வெளியே வந்து கொட்டுவார். தண்டியடிகளின் நல்ல நோக்கத்தை அறியாத சமணர்கள் அவருக்கு இடையூறு அளிக்கத் தொடங்கினர்.

திருவாரூர் கமலாலயம்
திருவாரூர் கமலாலயம்

தண்டியடிகள் அருகே வந்த சமணர்கள், “இவ்வாறு மண்ணைத் தோண்டுவதால் குளத்தில் உள்ள உயிரினங்கள் இறந்து போக வாய்ப்பு உள்ளது” என்றனர். இதைக் கேட்டு தமக்குள் சிரித்துக் கொண்ட தண்டியடிகள், “தான் படைத்த உயிரினத்தைக் காக்க இறைவனுக்குத் தெரியாதா? இந்தப் பணியால் எந்த உயிரினத்துக்கும் தீங்கு நேராது” என்றார்.

உடனே சமணர்கள், தாங்கள் சொல்ல வந்ததை அறியாத தண்டியடிகளை, குருடர், செவிடர் என்று பலவாறு இகழ்ந்தனர். இதைக் கேட்டதும் தண்டியடிகள், “திரிபுரம் எரித்த ஈசனின் திருவடியைப் போற்றி, தினமும் என் அகக் கண்களால் கண்டு களிக்கிறேன். அவன் நாமத்தை நாவால் சொல்கிறேன். கோயிலில் ஒலிக்கும் வேத முழக்கத்தை காதால் கேட்கிறேன். ஒப்பில்லாத சிவபெருமானின் அருளையும், அன்பையும், ஐம்பொறிகளாலும் அனுபவிக்கிறேன். நீங்கள் அனைவரும் கண்ணிருந்தும் குருடர்கள், காதிருந்தும் செவிடர்கள், நாவிருந்தும் ஊமைகள்” என்றார்.

திருவாரூர் கமலாம்பிகை
திருவாரூர் கமலாம்பிகை

மீண்டும் தண்டியடிகளை சமணர்கள் எள்ளி நகையாடினர். இதையடுத்து கோபம் கொண்ட தண்டியடிகள் அவர்களை சோதிக்க எண்ணினார். “ஈசனின் அருளால் எனக்கு கண்ணொளி கிடைத்து, சமணர்கள் கண்ணொளி இழந்தால், என்ன செய்வீர்கள்?” என்று சமணர்களிடம் தண்டியடிகள் வினவினார். இதைக் கேட்ட சமணர்கள், “அவ்வாறு நாங்கள் கண்ணிழந்தால், நாங்கள் இவ்வூரைவிட்டே சென்றுவிடுவோம்” என்று கூறி, தண்டியடிகளிடம் இருந்த மண்வெட்டி, கூடை உள்ளிட்டவற்றை பிடுங்கி எறிந்தனர். குளத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றையும் அறுத்து எறிந்தனர்.

சமணர்களின் செயல்பாடுகளை நினைத்து, தண்டியடிகள் பெரிதும் வருந்தினார். தமது துன்பத்தைப் போக்குமாறு ஈசனிடம் வேண்டினார். அன்றிரவு தண்டியடிகளின் கனவில் தோன்றிய ஈசன், “கவலை வேண்டாம். யாம் உம்மைக் காப்போம். உம்மை, சமணர்கள் பழித்தது எம்மை பழித்தது போலவே உள்ளது. எமக்கு நீவிர் செய்யும் தொண்டுகள் இடையறாது நடைபெறுவதற்காக யாம் உமது கண்களுக்கு ஒளி தருகிறோம். அதேவேளையில், சமணர்களின் கண்களை ஒளி இழக்கும்படி செய்வோம்” என்று திருவாய் மலர்ந்தார்.

ஈசன் சோழநாட்டை ஆண்ட அரசரின் கனவிலும் தோன்றி, “எமது தொண்டன் திருவாரூர் குளத்தில் திருப்பணிகள் செய்கிறான். நீ உடனே சென்று அவனது எண்ணத்தை நிறைவேற்றுவாயாக. சமணர்களிடம் இருந்து அவனைக் காத்து, சமணர்களைக் கண்டிக்க வேண்டும்” என்று பணித்தார்.

ஈசனின் கட்டளையை ஏற்ற மன்னர், திருக்குளத்துக்கு வந்து, தண்டியடிகளை சந்தித்து, ஈசன் தனது கனவில் தோன்றி உரைத்ததை கூறினார். தண்டியடிகளும் தனக்கு சமணர்கள் அளித்த இன்னல்கள் குறித்து மன்னரிடம் கூறினார். மன்னர், சமணர்களை அழைத்து வர உத்தரவிட்டார். சமணர்களும் மன்னர் கட்டளையை ஏற்று குளத்தருகே வந்தனர்.

தண்டியடிகள் தங்களிடம், கண்ணொளி குறித்து கூறிய தகவலை, சமணர்கள் மன்னரிடம் கூறினர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மன்னர், தண்டியடிகளை அழைத்து ஈசன் அருளால் கண்பார்வை பெறுமாறு கூறினார். தண்டியடிகளும் உடனே குளத்தில் இறங்கி தனக்கு கண்ணொளி தருமாறு ஈசனை வேண்டி, ஐந்தெழுத்தை ஓதியவாறு நீரில் மூழ்கினார்.

ஈசன் அருளால் கண்ணொளி பெற்று, நீரில் இருந்து எழுந்தார் தண்டியடிகள். மகிழ்ந்த தண்டியடிகள், ஆனந்தக் கண்ணீர் வடித்தார். கரம் தூக்கி அரனாரைத் தொழுதார். அரசனை வணங்கினார். மன்னரும் கரங்குவித்து சிரம் தாழ்த்தி தண்டியடிகளை வணங்கினார்.

அதே சமயத்தில் சமணர்கள் கண்ணொளி இழந்தனர். நீதி தவறாமல் ஆட்சி புரியும் மன்னர், சமணர்களைப் பார்த்து, “நீங்கள் கூறியபடி ஒருவர் கூட திருவாரூரில் இருக்கக் கூடாது” என்றார். தண்டியடிகள் பூங்கோயிலை அடைந்து எம்பெருமானை கண்குளிர தரிசித்தார். தனது திருப்பணிகளை தொடர்ந்து செய்யத் தொடங்கினார்.

அரனாரின் அருளாலும், சோழ அரசனின் துணையுடனும் தண்டியடிகள் தான் எண்ணியவாறு, குளத்தை மிகப் பெரிய அளவில் கட்டி முடித்தார். ஊர் மக்களும் தண்டியடிகளின் தொண்டை போற்றிப் புகழ்ந்தனர்.

நீண்ட நாள் பூவுலகில் பக்தியுடன் வாழ்ந்து புகழ்பெற்ற தண்டியடிகள், அரனாரின் திருவடி நிழலை அடைந்து பேரின்ப நிலையை எய்தினார்.

‘நாட்டமிகு தண்டிக்கும் அடியேன்’

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க...

திருவாரூர் சிவன்
சிவனருள் பெற்ற அடியார்கள் – 21

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in