சிவனருள் பெற்ற அடியார்கள் – 21

அடியாருக்குத் தொண்டு புரிந்தவர்கள் -7.பெருமிழலைக் குறும்ப நாயனார்
குறும்ப நாயனார்
குறும்ப நாயனார்

பெருமிழலையில் பிறந்த குறும்ப நாயனார், அவ்வூரின் தலைவராக இருந்தவர். சிவனடியார்களுக்கு சேவை செய்ய எண்ணியவர், அவர்கள் கூறா முன் குறிப்பறிந்து வேண்டுவன செய்பவர். சுந்தரமூர்த்தி நாயனாரை துதித்து வழிபட்டவர்.

குறும்ப நாயனார்
குறும்ப நாயனார்

பாண்டிய நாட்டின் உள்நாடாக இருந்தது பெருமிழலை. இதன் தலைநகராக விளங்கிய பெருமிழலை, மா, தென்னை, பலா, பாக்கு முதலிய மரங்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்டிருந்தது. பெருமிழலை திருவீதிகளில் உள்ள இல்லங்களில் சிவத்தொண்டர்கள், திருநீற்றின் ஒளியுடனும் நீதி தவறாமலும் வாழ்ந்து வந்தனர்.

அவர்களுள் குறும்பர் (குறுநில மன்னர்) மரபில் அவதரித்த பெருமிழலைக் குறும்பனார் என்ற சிவனடியாரும் வாழ்ந்து வந்தார். அவ்வூருக்கு தலைவராக இருந்த இவர் எந்நேரமும் சிவபெருமானை வழிபட்டு, சிவனடியார்கள் மீது மிகுந்த அன்பும், பக்தியும் கொண்டிருந்தார்.

சிவனடியார் முன்பு, தன்னை ஓர் எளியவனாகவே எண்ணிக் கொள்வார். அவர்களை இன்முகத்துடன் வரவேற்று, அவர்களுக்கு இன்னமுது அளித்து, அவர்களின் ஏவல்களை சிரமேற்கொண்டு பணிவோடு செய்வார். இதன் காரணமாக, பெருமிழலைக் குறும்பரின் இல்லத்தில் எப்போதும் சிவ அன்பர்கள் நிறைந்து காணப்படுவர்.

சுந்தரமூர்த்தி நாயனாரிடம் பக்தி கொண்ட, பெருமிழலைக் குறும்பர், அவரது தொண்டராக மாறினார். சிவபெருமானின் நாமத்துடன், சுந்தரமூர்த்தி நாயனாரின் நாமத்தையும் துதித்து வழிபட்டார்.

குறும்ப நாயனார்
குறும்ப நாயனார்

இறைவனின் திருவருளைப் பெற்ற சுந்தரர் திருவடிகளை வணங்கிப் போற்றுவதால், பரமனின் அருளைப் பெறலாம் என்று உறுதிகொண்டு, சுந்தரர் உபாசனையைத் தொடங்கினார். சுந்தரமூர்த்தியின் அருளால், பெருமிழலைக் குறும்பர், அஷ்டமா சித்திகளும் கிடைக்கப் பெற்றார்.

சித்தத்தால் எதையும் உணரும் அரும்பெரும் சக்தியைப் பெற்ற பெருமிழலைக் குறும்பர், சுந்தரமூர்த்தி சுவாமிகளை தரிசித்து மகிழ்ந்தார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் கொடுங்கோளூரில் இருந்தபடியே வெள்ளை யானை (ஐராவதம்) மீது அமர்ந்து கயிலை மலைக்குச் செல்லப் போகிறார் என்பதை தன் சித்தத்தால் உணர்ந்து கொண்டார் பெருமிழலைக் குறும்பர்.

தன் உயிரிலும் மேலான சுந்தரமூர்த்தி சுவாமிகளை விட்டு இவ்வுலகில் வாழ்வதால் பயன் ஏதும் இல்லை என்று பெருமிழலைக் குறும்பர் நினைத்தார். எம்பெருமான் திருவடிகளை அடையத் துணிந்தார்.

சுந்தரமூர்த்தி நாயனார் மீது தாம் கொண்டுள்ள பக்தி, தமது சித்தயோக முயற்சி ஆகியவற்றால், சுந்தரர் கயிலை மலை செல்வதற்கு முதல்நாளே தம் உயிரை, உடலில் இருந்து நீங்கும்படி செய்தார் பெருமிழலைக் குறும்பர். கயிலையை அடைந்து, பரமனின் திருவடி நிழலில் இளைப்பாறினார்.

இறைவனுடைய திருவருளைப் பெறுவதற்கு குருவருள் சிறந்த சாதனமாகக் கருதப்படுகிறது. பிறவியாகிய பெருங்கடலைக் கடப்பதற்கு இறைவனின் திருவடி மரக்கலம் போன்றதாகும். குருநாதர் மாலுமியாக கருதப்படுகிறார். மரக்கலத்துக்கு மாலுமி எவ்வளவு அவசியமாகக் கருதப்படுகிறாரோ, அதேபோல இறையருளைப் பெறுவதற்கு குருஅருள் அவசியமாகக் கருதப்படுகிறது.

குருபக்தியால் திருவருள் மட்டுமின்றி அட்டமா சித்திகளையும் பெறலாம். குருநமச்சிவாயர் குருபக்தியால் திருவருட்பேறு பெற்றதும், உபமன்யு முனிவர் முக்காலமும் உணரும் அருட்கண் பெற்றதும், குருபக்தியால் உயர்ந்த அப்பூதியடிகள் வாழ்க்கையும் இங்கு நினைவுகூரத்தக்கது.

மனம், மொழி, மெய் ஆகிய 3 கரணங்களாலும், தனது குருநாதரான சுந்தரமூர்த்தி சுவாமிகளை, பெருமிழலைக் குறும்பர் வழிபட்டார். அதன் பயனாக சிவயோக நெறியைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘பெருமிழலை குறும்பர்க்கு அடியேன்’

8.சடைய நாயனார்

திருநாவலூர் நகரில் வேதியர் குலமாம் சைவர் மரபில் அவதரித்த சிவத்தொண்டராக விளங்கிய சடையனார், சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தந்தை ஆவார். கடவுளின் குழந்தையை ஜனித்தவர் சென்ற ஒவ்வொரு ஸ்தலத்திலும் மதிப்பு பெற்றனர்..

சடைய நாயனார்

திருநாவலூர் என்ற ஊர் சைவ வளத்துடனும், செல்வச் செழிப்புடனும் விளங்கியது. அவ்வூரில் அவதரித்த சடையனார் என்ற சிவனடியார், இளமையில் வேத ஆகமங்களைக் கற்றுத் தேர்ந்தார். நற்குணங்ளைப் பெற்ற இவர், தம் மனைவி இசைஞானியாருடன் தலங்கள்தோறும் சென்று சிவபெருமானை வழிபட்டு வந்தார்.

அனைத்தும் சிவபெருமான் கொடுத்தது என்று நினைத்த சடையனார், நரசிங்க முனையரையர் என்ற மன்னர் (சிவனடியார்), சுந்தரமூர்த்தி சுவாமிகளை தன்னுடன் அனுப்புமாறு கேட்டதும், மறுமொழி பேசாது சுந்தரரை அனுப்பி வைத்தார். இதன் மூலம் சடைய நாயனாரின் தியாக உள்ளம் புலனாகிறது. சிவனடியார்களைக் கண்டதும் அவர்களை இன்முகத்துடன் உபசரித்து மகிழ்வார் சடைய நாயனார். அவருக்கு உறுதுணையாக மனைவி இசைஞானியார் இருந்தது குறிப்பிடத்தக்கது.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் தான் பாடிய திருத்தொண்டத் தொகையில் பல இடங்களில் தமது பெற்றோரை சிறப்பித்து கூறியுள்ளார். திருத்தொண்டத் தொகையைப் பாடி உலகை உய்வித்த தெய்வப் புதல்வனைப் பெற்ற சடையனாரும், இசைஞானியாரும் போற்றத்தக்கவர்கள் ஆவர்.

‘அரனடியே அடைந்திட்ட சடையனுக்கு அடியேன்’

9.இசைஞானியார்

கணவர் சடையனாருடன் சேர்ந்து பல தலங்கள் தரிசித்து மகிழ்ந்த இசைஞானியார், தவப் புதல்வனான சுந்தரமூர்த்தியைப் பெற்றெடுத்ததால், பார் முழுவதும் புகழப்பட்டார். சிவனடியார்களைப் போற்றி, வணங்கி சேவைப் புரிவதில் ஆர்வம் கொண்டவராக விளங்கினார்.

இசைஞானியார்

மகன் சுந்தரமூர்த்தி சுவாமிகள், கணவர் சடையனாருடன் இணைந்து, இசைஞானியார், சிவபெருமானை வணங்கி மகிழ்ந்தார். 63 நாயன்மார்களுள் ஒருவராக சேர்க்கப்பட்ட இசைஞானியார், இசையில் சிறந்து விளங்கியவர். தனது மகன் சுந்தரமூர்த்தி சுவாமிகளை, இசையில் புலமை பெறச் செய்தவர் இசைஞானியார். சைவ சமயத்தை போற்றும் விதமாக அச்சமய நெறிகளைத் தீவிரமாக கடைபிடித்து, பஞ்சாக்கரம் ஓதி, ஈசனை வழிபட்டு மகிழ்ந்தவர். சிவத்தலங்கள் பலவற்றுக்குச் சென்று, அரனாரைப் போற்றி வழிபட்டார்.

நீண்ட காலம், கணவர் சடையனாருடன் இணைந்து சிவத்தொண்டும், சிவனடியார் சேவையும் செய்து, ஈசன் திருவடி நிழலில் இளைப்பாறினார்.

‘இசைஞானியாருக்கும் அடியேன்’

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க...

குறும்ப நாயனார்
சிவனருள் பெற்ற அடியார்கள் – 20

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in