சிவனருள் பெற்ற அடியார்கள் - 2

சிவனருள் பெற்ற அடியார்கள் - 2

அறிமுகம் – 2.சைவ சமய வளர்ச்சி
Published on

சமயம் என்பது நான்கு தூண்களால் தாங்கப் பெறும் ஒரு மண்டபத்தைப் போன்றது. தத்துவ ஆய்வு (மெய்ப்பொருள் ஆராய்ச்சி), முத்தி நிலை (ஆன்மா அடைய வேண்டிய உயர் நிலை), முத்தி அடைவதற்குரிய வழிகள், அவ்வழிகளில் நின்று நிரூபித்துக் காட்டிய அடியார்கள் ஆகிய 4 அங்கங்களைக் கொண்டு அமைந்துள்ளதே முழுமையான சமயம் என்று கருதப்படுகிறது.

சைவ சமயம் இத்தகைய சிறப்புகளைக் கொண்டதாக போற்றப்படுகிறது. சைவ சித்தாந்தத்தில் பதி – பசு – பாசம் ஆகிய முப்பொருள்கள் குறித்து கூறப்படும். பதி என்பது பேரறிவுடைய இறைவனையும், பசு என்பது சிற்றறிவுடைய உயிரையும், பாசம் என்பது உயிரற்ற தளையையும் (ஆணவம், கன்மம், மாயை) குறிப்பதாக அறியப்படுகிறது.

இறைவன் எங்கும் இருப்பதாகவும், ஒருவராக இந்த உலகத்தையே ஆள்பவராகவும் போற்றப்படுகிறார். அவர் இந்த உலகத்துக்கு அப்பாலும் நிறைந்து இருப்பவராகவும் கூறப்படுகிறார். அவருக்கு உருவம் இல்லை. அவருக்கு அழிவு என்பதே இல்லை. தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவில் ஆற்றலுடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை ஆகிய எண் வகை குணங்களைக் கொண்டவராக (எண்குணத்தான்) இறைவன் அறியப்படுகிறார். மேலும், இறைவனுக்கு உவமை கூற இயலாது என்பதையும் சைவ சித்தாந்தம் உரைக்கிறது.

உடலைப் பெறுவதற்கு முன்பு அறிவு, விருப்பம், செயல் ஆகியவை இன்றி அறியாமை நிலையில், இந்த உயிர் இருந்திருக்கும். இதற்கும் உருவம் கிடையாது. அழிவு இல்லை. உயிர்களை அடிமைப்படுத்தும் பொருள்களாக தளை (பாசம்) கூறப்படுகிறது. இவையே போகப் பொருட்கள் ஆகும்.

சைவ சமயம் என்பதை விளக்கும் திருமூலர் அச்சமயம் சிவனுடன் தொடர்புடையது என்கிறார். அனைத்து பொருள்களையும் கடந்த நிலையிலும், அனைத்து பொருளிலும் ஊடுருவியும் இருக்கும் பரம்பொருளை சிவன் என்று கூறினாலும், அப்பரம்பொருள் நம்முடன் தொடர்பு கொள்ள எடுத்துக் கொண்ட கோலமும், அக்கோலத்தைக் குறிக்கும் திருநாமமும் இங்கு பரம்பொருளை ‘சிவன்’ என்று குறிப்பதற்கு காரணமாகும் என்று சைவ சமயம் விளக்குகிறது.

இறைவனுக்கு வடிவம் இல்லை, இறைவனுக்கு வண்ணம் இல்லை என்று கூறும்போது அவனுடன் நாம் கலந்து இறையின்பத்தை பெற முடியாது. அதனால் நாம் அவனுடன் தொடர்பு கொள்வதற்கு ஏற்றபடி அவனே ஒரு வடிவத்தையும் வண்ணத்தையும் திருவடியையும் காட்டி நம்மை ஆட்கொண்டான். அந்த தரிசனமே நம்மை அவனிடம் சரணடைய வைக்கிறது.

எல்லா தேவர்களிலும் உயர்ந்த மகாதேவனாக சிவபெருமான் போற்றப்படுகிறார். அவருக்கும் பக்தர்களுக்கும் இடையே உள்ள தெய்வீகத் தொடர்பு, அவரை அதிகமாக உருவகித்து மனதிலே பதிய வைப்பது என்பதையே சைவ சமயம் உணர்த்துகிறது. அப்பர், சம்பந்தர் போன்ற சிவனடியார்கள் சைவ நெறி தழைக்கச் செய்ய அவதரித்தனர். சிவ வணக்கம், சிவ வழிபாடு வரலாறு கடந்தது.

சிவபெருமானின் அட்ட வீரச் செயல்களாக அந்தகாசுரனை சங்கரித்தது, காமனை எரித்தது, காலனை உதைத்தது, சலந்தரனை தடித்தது, தக்கன் வேள்வி தகர்த்தது, திரிபுரம் எரித்தது, பிரம்மதேவன் சிரத்தை அறுத்தது, யானையை உரித்தது ஆகியன அறியப்படுகின்றன.

‘பித்தா பிறைசூடி’ என்று சுந்தரமூர்த்தி நாயனார், சிவபெருமானைப் போற்றுகிறார். ‘காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி’ என்று இறைவனிடம் பேரன்பு கொண்டார் திருஞான சம்பந்தப் பெருமான். ‘அன்பே சிவம்’ என்கிறார் திருமூல நாயனார். அன்பையே பக்தியாக்கினார் கண்ணப்ப நாயனார். ‘இறையை மறவாமை வேண்டும்’ என்கிறார் காரைக்கால் அம்மையார். ‘அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ’ என்று உறவு முறை கொண்டாடுகிறார் அப்பர் பெருமான். ‘வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி’ என்று சிவபெருமானைப் போற்றுகிறார் மாணிக்கவாசகர்.

சிவலிங்கமும் திருவேடமும் (அடியார் கோலம்) நம்மால் பூசிக்கத்தக்க சிவத் திருக்கோலங்களாக சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள் கூறுகின்றனர். ‘தாபர சங்கமங்கள் என்றிரண்டுருவில் நின்று மாபரன் பூசை கொண்டு மன்னுயிர்க்கு அருளை வைப்பன்’ என்பது சித்தியார். இப்படி கூறப்பட்டாலும் சிவலிங்கமே பூசிப்பதற்குரிய பொருளாகக் கூறப்படுகிறது. ‘காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய் நீள்நாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்’ என்று கூறப்படுவதால், அனைத்து திருக்கோலங்களுக்கும் இதையே மூலமாக, காரணமாக கூறிவிடலாம். இதனாலேயே சிவலிங்கத்தையே முதன்மையாகக் கொண்டு பூஜைகள் நடைபெற்றாலும் சிவபெருமானின் பிற கோலங்களும் (அகோர மூர்த்தி, நடராஜ மூர்த்தி, சோமாஸ்கந்தர், அர்த்தநாரீஸ்வர மூர்த்தி, தட்சிணாமூர்த்தி, உமா மகேஸ்வர மூர்த்தி) சிவபூஜையில் இடம் பெறுகின்றன.

சிவ பூஜையில் எளிமையும் அன்பும் ஒருபக்கம் பேசப்பட்டாலும், மற்றொரு பக்கம் சில கிரியாவிதிகள் வற்புறுத்தப்பட்டன. இதன் காரணமாக சமய நூற்கல்வியும் ஒழுக்கமும் பூஜை செய்வோருக்கு வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. சமய நூற்கல்வி என்பது ‘ஆகமப் பயிற்சியையே’ குறிக்கிறது. ‘அம்மானே ஆகம சீலர்க்கருளும் பெம்மானே’ என்று ஆன்மிகப் பெரியோர் பாடுவதுண்டு. ஆகமங்கள் பலவாகவும் விரிவாகவும் சிவ வழிபாட்டைப் பற்றி கூறுகின்றன. கருவி நூல்களாக அகோர சிவாச்சாரியார் – சைவ பத்ததி, காஞ்சிபுரம் ஸ்ரீ பஞ்சாக்கர யோகிகள் – சைவ பூஷணம், சிவாக்கிர யோகிகள் – பூஜாக்கிரமம் – பஞ்சாட்சர ஜபவிதி, சீகாழி தத்துவப் பிரகாச சுவாமிகள் – தத்துவப் பிரகாசம், மறைஞான சம்பந்தர் – சைவசமய நெறி ஆகியன கருதப்படுகின்றன.

இவற்றோடு சிவார்ச்சனா சந்திரிகை, அட்டப்பிரகரணம் போன்ற நூல்களையும், திருமுறைகள், சித்தாந்த சாத்திரங்களையும் துணை நூல்களாகக் கொள்வதுண்டு. ஆகமம் முதல் நூலாகவும், உபாகமம் வழி நூல் என்றும் அட்டப்பிரகரணம் சார்பு நூல் என்றும் கூறப்படும்.

தத்துவப் பிரகாசிகை, தத்துவ சங்கிரகம், தத்துவ நிர்ணயம், போக காரிகை, மோக்‌ஷ காரிகை, நாத காரிகை, பரமோக்‌ஷ நிராச காரிகை, ரத்தினத் திரையம் ஆகியன அட்டப் பிரகரணங்கள் ஆகும்.

(சைவ சமய நெறிமுறைகளை அடுத்த வாரம் பார்ப்போம்)

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க...

சிவனருள் பெற்ற அடியார்கள் - 2
சிவனருள் பெற்ற அடியார்கள் - 1
x
காமதேனு
kamadenu.hindutamil.in