சிவனருள் பெற்ற அடியார்கள் - 1

அறிமுகம் – 1. வழிபாட்டின் தோற்றம்
சிவனருள் பெற்ற அடியார்கள் - 1
Updated on
3 min read

உயிரை வளப்படுத்த வழிபாடு அவசியமாகிறது. வழிபாடு, தீய குணங்களை ஒதுக்கி உண்மை நிலையில் ஒருவரை இருத்தச் செய்யும். எண்ணம் செயல், சொல் ஆகியவற்றை தூய்மையுற வைக்கும். உயர்ந்த சொற்களை பேசச் செய்து, உயர்ந்த எண்ணங்களை எண்ணச் செய்யும். இம்மூன்றையும் உண்டாக்கும் மனத்திண்மையை அளிக்கும்படி பரம்பொருளை வேண்டுவதே வழிபாடு. நம் குறைகளைக் களையவும், நம் தேவைகளை வேண்டவும், பரம்பொருளிடம் முறையிடுவதே வழிபாடு.

‘என்னுளே உயிர்ப்பாய்ப் புறம் போந்து புக்கு

என்னுளே நிற்கும் இன்னம்பர் ஈசனே’

- என்று அப்பர் பெருமான் அருளியுள்ளார். ‘பிறப்பின் உண்மையை உணர்ந்தவர்கள் இறைவனை ஒருகணமும் மறவாது இருப்பர். மூச்சோட்டம் தடைபடாது இருப்பதுபோல், இறையுணர்வும் இடைவிடாது இருத்தல் வேண்டும். அந்த இறைவன் மூச்சாகவே இருக்கிறான்’ என்பதையே அப்பர் பெருமான் இப்படிக் குறிப்பிடுகிறார்.

இரவென்றும் பகலென்றும் பார்க்காமல் எப்போதும் இறைவனை மனத்தில் இருத்த வேண்டும். அவ்வாறு செய்தால் எவ்வித துன்பமும் நம்மை அண்டாது. எந்நேரமும் நிறைந்த இன்பமே நம் வசப்படும் என்பது வலியுறுத்தப்படுகிறது.

இதே கருத்தை, ‘எவர் ஒருவர் வேறொன்றில் மனம் பற்றாது என்னை எப்போதும் தொடர்ந்து நினைக்கிறாரோ, அவரே என்னை எளிதில் அடையத் தக்கவன்’ என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் கூறுகிறார்.

இறைவனை அடைய பக்தி நெறியும் அன்பு நெறியும் சிறந்ததாக கூறப்படுகிறது. மனம் ஒன்றுபட்டு இறைவனிடம் அன்பு செலுத்த, ஆசைகளை ஒழிக்க வேண்டும். உலகப் பற்றுகள் நம்மை பாதிக்காத படி பார்த்துக்கொள்ள வேண்டும். அன்பு, அருள், இரக்கம் போன்ற தெய்வ இயல்புகள் நம்மை பற்றிக்கொள்ள வேண்டும். இறைவனிடத்தில் தன்னலம் கருதா அன்பு செலுத்தி, நம்மிடையே ஒற்றுமை உணர்வை ஓங்கச் செய்ய வேண்டும்.

இயற்கை வழிபாடு

கற்கால மனிதன் மர இலைகளை ஆடையாக உடுத்தி வந்தான். உணவை பச்சையாகவே உண்டு வந்தான். கற்கள் உராய்வதன் மூலம் நெருப்பு உண்டாவதை அறிந்தான். நெருப்பில் விழுந்த இறைச்சி, மிருதுவாகவும், சுவையாகவும் இருப்பதைக் கண்டான். பிறகு சமைப்பது, வேட்டையாடுவது, பயிர்த் தொழில் செய்வது என்று பல தொழில்களைக் கற்றுக் கொண்டான். இப்படி படிப்படியாக வளர்ந்த மனிதன், இயற்கையைக் கண்டு அதிசயித்தான். மேலும், இடி, மின்னல், பூகம்பம், எரிமலை ஆகியவற்றைக் கண்டு பயந்தான். தனக்கு மேலே ஒரு சக்தி இருப்பதை உணந்தவன், இயற்கையை வழிபடத் தொடங்கினான். சூரியன், சந்திரன் போன்றவற்றை வழிபடத் தொடங்கினான்.

சூரியன் மெய்ப்பொருள் என்பது சௌர மதத்தின் அடிப்படைத் தத்துவமாகும். சூரியக் கதிர்கள் பட்டால் நோய்கள் விலகும் என்று சரத்சம்ஹிதை என்ற ஆயுர்வேத நூல் கூறுகிறது. சூரியனிடம் இருந்து சந்திரனுக்கு ஒளி கிடைக்கிறது. சங்க இலக்கியங்கள் பிறை தொழும் வழக்கம் குறித்து குறிப்பிடுகின்றன. மூன்றாம் பிறையைப் பார்ப்பது சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. இறந்தவர்களுக்கு செய்யும் வழிபாடாக ஆவி வழிபாடும் இருந்துள்ளது.

சிறுதெய்வ வழிபாடு

பேய், பிசாசு போன்றவற்றை நம்பிய மனிதன், அவற்றில் இருந்து தன்னை காத்துக்கொள்ள கிராம தேவதை வழிபாட்டை தேர்ந்தெடுத்தான். இதுவே சிறுதெய்வ வழிபாடு. அப்படித்தான் அம்மன், மதுரைவீரன், முனியாண்டி, கருப்பண்ணசாமி, காத்தவராயன், ஆரியமாலா, அய்யனார் போன்ற சிறுதெய்வங்களுக்கு கோயில் எழுப்பி வழிபாடுகள் நடைபெற்றன.

கிராம தேவதைகள் பெரும்பாலும் பெண் தெய்வங்களாகவே அமைந்திருந்தனர். தீய சக்திகளிடம் இருந்து பக்தர்களைக் காக்கும் தெய்வங்களாக வாராஹி, பிடாரி, காளி, மாரி, திரௌபதி, காத்தாயி, பேச்சி, செல்லாயி உள்ளனர். பூமியை பூமாதேவி என்றும், நதிகளை பெண் பெயரிட்டும் (காவிரி, கங்கை, நர்மதை, சரஸ்வதி) வழிபட்டனர். சக்தி வழிபாடு, மழை வழிபாடு, மாரியம்மன் வழிபாடு, மர வழிபாடு (வேப்ப மரம், அரச மரம்) என்று வழிபாடுகள் வளர்ந்தன.

மனிதத் தலை, யானை உடல், எருதின் கொம்புகளுடன் புலியின் கால்கள், புலிவால் கூடிய மனித உருவம் தெய்வமாக வழிபடப்பட்டது. இது விநோத உருவ வழிபாடு என்று அழைக்கப்படுகிறது. பின்னர் நாக வழிபாடு, ஆற்று வணக்கம், பறவை வழிபாடு, விலங்கு வழிபாடு என்று மனிதன், பாம்பு, நதிகள், கருடன், எருது (ரிஷபம்) ஆகியவற்றை வணங்கத் தொடங்கினான். மேலும், தாயத்து அணிதல், பலி கொடுத்தல், இறைவனுக்கு விழா எடுத்தல், பலகாரம் படைத்தல், இசை - நடனம் வளர்த்தல், மந்திர மாயம் பழகுதல், யோக பயிற்சி எடுத்துக் கொள்ளுதல் போன்ற வழிபாட்டு முறைகளும், நேர்த்திக் கடன் செலுத்தும் முறைகளும் தோன்றின.

பெருந்தெய்வ வழிபாடு

படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களைப் புரியும் தெய்வங்கள் பெருந்தெய்வங்களாக வழிபடப்பட்டனர். படைப்பவர் பிரம்மதேவர், காப்பவர் திருமால், அழிப்பவர் சிவபெருமான் என்று பெருந்தெய்வங்கள் போற்றப்படுகின்றனர். இதைத் தவிர விநாயகர் வழிபாடு, முருகர் வழிபாடு என்று பலவகை வழிபாடுகளும் உண்டு. சிலப்பதிகாரத்தில் சிவன், திருமால், முருகன், பலதேவன் என்று நால்வகை வழிபாட்டு முறைகள் குறிப்பிடப்படுகின்றன.

விநாயகர் வழிபாடு மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்துதான் தமிழ்நாட்டுக்கு பரவியது என்று கூறப்படுகிறது. எந்தச் செயலைச் செய்தாலும் முதலில் விநாயகரையே வழிபடுகிறோம். நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்வது, தோப்புக் கரணம் போடுவது என்று இவ்வழிபாட்டு முறை இருக்கும். ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தை சிவபெருமானுக்கு உபதேசித்தவராகவும், குறிஞ்சி நிலக் கடவுளாகவும், வள்ளி மணாளராகவும் முருகப் பெருமான் போற்றப்படுகிறார்.

திருமாலை வழிபடுபவர்கள் வைணவர்கள் என்றும், சிவபெருமானை வழிபடுபவர்கள் சைவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

(சைவ சமய தோற்றம் குறித்து அடுத்த வாரம் பார்ப்போம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in