சிவனருள் பெற்ற அடியார்கள் – 11

பாடிப் பதம் பெற்றவர்கள் - 1. திருநீலகண்ட யாழ்ப்பாணர்
மதுரை மீனாட்சி - சொக்கநாதர்
மதுரை மீனாட்சி - சொக்கநாதர்

எருக்கத்தம்பூரில் பிறந்த, திருநீலகண்ட யாழ்ப்பாணர், மதுரை சோமசுந்தரரை வணங்க விருப்பம் கொண்டு, தன் மனைவியுடன் பல சிவத்தலங்கள் தரிசித்து, பஞ்சாட்சர மந்திரத்தை யாழில் இசைத்தவர். சிவனடியார்களுக்கு தொண்டு செய்து, ஈசனின் உள்ளம் கவர்ந்தவர்.

திருநீலகண்ட யாழ்ப்பாணர்
திருநீலகண்ட யாழ்ப்பாணர்

சோழ நாட்டில் அமைந்துள்ள எருக்கத்தம்புலியூர், ஸ்ரீமுஷ்ணம் என்ற வைணவத் தலத்துக்கு 4 மைல் தொலைவில் உள்ளது. இங்கு மிகப் பெரிய சிவன் கோயில் அமைந்துள்ளது. தொழுவார் பிறவிப் பிணி அறுக்கும் தலமாக போற்றப்படும் இத்தலத்தில் சிவபெருமான் நீலகண்டேஸ்வரர் என்ற திருநாமத்துடன், நீலமலர் கண்ணம்மையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தல விருட்சம் வெள்ளெருக்கு என்பதால் இத்தலத்துக்கு எருக்கத்தம்புலியூர் என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.

பாணர் மரபில் பிறந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்ற சிவனடியார் தன் மனைவி மதங்க சூளாமணியுடன் இத்தலத்தில் வசித்து வந்தார். சிறு வயது முதல் இசை கற்ற திருநீலகண்ட யாழ்ப்பாணர், நீலகண்டேஸ்வரரின் புகழை தன்னுடைய யாழில் இனிமையுடன் இசைத்து ஆனந்தம் அடைவார். இவரது இசையுடன் இசைந்து இவர் மனைவியும் யாழ் மீட்டி திருத்தலங்கள்தோறும் சென்று சிவபெருமானை வழிபடுவது வழக்கமாக இருந்தது.

பல காலம், பல சிவத்தலங்களை தரிசித்த பின்னர், இருவரும் மதுரையம்பதிக்குச் சென்றனர். திரு ஆலவாய் அண்ணல் கோயிலின் புறத்தில் நின்று சிவபெருமானின் புகழை, யாழில் சுருதிகூட்டி, பண் அமைத்து பாடிக் கொண்டிருந்தனர்.

(பண்டைய நாட்களில், பாணர் மரபைச் சேர்ந்தவர்கள், கோயிலுக்குள் சென்று இறைவனை வழிபடுவது இல்லை. அவர்கள் கோயிலின் புறப்பகுதியில் இருந்து இறைவன் மீது பாடல்கள் புனைந்து, இசைக் கருவிகள் இசைத்து, வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்)

திருநீலகண்ட யாழ்ப்பாணரின் யாழிசையில் உள்ளம் உருகிய சோம சுந்தரர், தனது பக்தனைக் காக்க எண்ணுகிறார். அன்றிரவு மதுரையம்பதி சிவத் தொண்டர்களின் கனவில் தோன்றி, யாழ்ப்பாணரையும் அவரது மனைவியையும் கோயிலுக்குள் அழைத்து வரப் பணித்தார். மேலும், அவர்களுக்கு இறைவனை தரிசனம் செய்விக்கவும் உத்தரவு பிறப்பித்தார். யாழ்ப்பாணரின் கனவிலும் தோன்றி, “பாணரே.. உம்மை எம்மிடம் அழைத்து வந்து தரிசனம் செய்விக்கப் பணித்துள்ளோம்” என்று திருவாய் மலர்ந்தார்.

மறுநாள் வழக்கம்போல், காலை வேளையில் யாழ்ப்பாணரும் அவரது மனைவியும், கோயிலின் புறத்தே அமர்ந்தவாறு யாழிசைத்து, இறைவனைப் போற்றி பாடி மகிழ்ந்தனர். சிவத்தொண்டர்கள் அவர்கள் அருகே வந்து, கோயிலுக்குள் வருமாறு அழைத்தனர். அவர்களும் சிவத்தொண்டர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி கோயிலுக்குள் சென்று, மண்டபத்தில் அமர்ந்து மீண்டும் இசையில் மூழ்கி, பக்தர்களை மெய்சிலிக்க வைத்தனர். இருவரும் தரை ஈரமாக இருப்பதையும் உணராமல் பாடிக் கொண்டிருந்தனர்.

திருவாரூர் உற்சவம்
திருவாரூர் உற்சவம்

சிவபிரான் பிரம்மதேவரின் தலையைக் கொய்து செருக்கழித்தது (திருக்கண்டியூர்), அந்தகாசுரனைக் கொன்றது (திருக்கோவலூர்), திரிபுரம் எரித்தது (திருவதிகை), தக்கன் தலையைத் தடிந்தது (திருப்பறியலூர்), சலந்தராசுரனை வதைத்தது (திருவிற்குடி), கயமுகாசுரனைக் கொன்று தோலை உரித்து போர்த்திக் கொண்டது (திருவழுவூர்), மன்மதனை எரித்தது (திருக்குறுக்கை), மார்க்கண்டேயனைக் காத்து கூற்றுவனை உதைத்தது (திருக்கடவூர்) ஆகிய அட்ட வீரச் செயல்களைப் போற்றி, யாழ்ப்பாணத் தம்பதி, பண்ணமைத்துப் பாடியதைக் கேட்டு, இருவரின் இசையில் மெய்மறந்த சோம சுந்தரர், தரை ஈரமாக இருப்பதால் அவர்கள் யாழின் சுருதி கெட்டுவிடும் என்று எண்ணினார். உடனே அசரீரி வாயிலாக சிவத் தொண்டர்களை நோக்கி, “நிலத்தில் இருந்து பாடினால் ஈரத்தால் யாழ் கெட்டுவிடும். விரைந்து அவர்களுக்கு அமர்ந்து பாட பலகை இடவும்” என்று பணித்தார்.

ஈசனின் கட்டளையை ஏற்ற சிவத் தொண்டர்கள், யாழ்ப்பாணர் தம்பதி அமர பீடம் ஒன்றை அளித்து, அதன்மீது அமர்ந்து பாடுமாறு வேண்டினர். பீடத்தில் அமர்ந்து யாழ்பாணர் தம்பதி பாட, சோம சுந்தரரும், பக்தர்களும் கேட்டு மகிழ்ந்தனர்.

நீண்ட நாட்கள் மதுரையம்பதியில் தங்கியிருந்து, சோம சுந்தரரை தரிசித்து மகிழ்ந்த யாழ்ப்பாணர் தம்பதி, அங்கிருந்து கிளம்பி பல சிவத்தலங்களை தரிசித்தவாறு, திருவாரூரை அடைந்தனர். அங்கே கோயிலுக்கு வெளியே அமர்ந்து, திருவாரூர் தியாகேசனையும், கமலாம்பாளையும் தங்களது இசையால் மகிழ்வித்த யாழ்ப்பாணர் தம்பதி, வேறு பல சிவத்தலங்களை தரிசிக்க எண்ணம் கொண்டனர்.

அன்றிரவு திருவாரூர் தொண்டர்கள் கனவில் தோன்றிய ஈசன், கோயிலில் வேறு ஒரு வாயில் அமைத்து, அவர்களை உள்ளே அழைத்து வருமாறு உத்தரவு பிறப்பித்தார். அதன்படி மறுநாள் காலை, யாழ்ப்பாணர் தம்பதி கோயிலுக்குள் எழுந்தருளும் பொருட்டு, வடதிசையில் வாயில் ஒன்றை அமைத்தனர். அதன் வழியாக திருநீலகண்ட யாழ்ப்பாணரையும், அவரது மனைவியையும் அழைத்துச் சென்ற சிவத் தொண்டர்கள், அவர்களை ஈசன் முன்னர் அமர்ந்து பக்திப் பாடல்கள் பாடுமாறு கூறினர்.

சிவத் தொண்டர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, யாழ்பாணர் தம்பதி யாழ் மீட்டி, சிவபெருமான் மீது பாடல்கள் பாடினர். சில நாட்கள் திருவாரூரில் தங்கியிருந்த யாழ்ப்பாணர் தம்பதி, அங்கிருந்து புறப்பட்டு, சிவத்தலங்கள் பலவற்றை தரிசித்து, சீர்காழி தலத்தை அடைந்தனர். அங்கு சமயக் குரவர்களுள் ஒருவரான திருஞானசம்பந்தரை வணங்கி மகிழ்ந்தனர்.

யாழ்பாணர் தம்பதியின் யாழிசையில் மகிழ்ந்த திருஞானசம்பந்தர், தன்னுடன் சிவத்தலங்கள் பலவற்றுக்கு வந்து, தேவாரப் பதிகங்களை யாழில் இட்டு இசைத்து பாடுமாறு வேண்டினார். அவர்களும் திருஞான்சம்பந்தருடன் சிவத்தலங்கள் சென்று, யாழிசைத்து பாடி மகிழ்ந்தனர்.

நிறைவாக திருபெருமண நல்லூரில் திருஞானசம்பந்தரின் திருமணத்துக்கு வந்திருந்த யாழ்ப்பாணர் தம்பதி, அங்கு தோன்றிய சிவஜோதியில் கலந்து சிவபதவி அடைந்தனர்.

‘திருநீலகண்டத்துப் பாணனார்க்கு அடியேன்’

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க...

மதுரை மீனாட்சி - சொக்கநாதர்
சிவனருள் பெற்ற அடியார்கள் – 10 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in