சிவனருள் பெற்ற அடியார்கள் – 10 

ஆலயத் தொண்டு புரிந்தவர்கள் - 7.செருத்துணை நாயனார் 
சிவனருள் பெற்ற அடியார்கள் – 10 
Updated on
3 min read

தஞ்சையில்  பிறந்த அஞ்சா நெஞ்சரான செருத்துணை நாயனார், குற்றம் கண்டவிடத்து, உடனே கண்டிக்கும் வீரம் படைத்தவர். சிவபெருமான் உறையும் கோயிலில் தொண்டுகள் பல புரிந்து, அனைவரையும் நல்வழிப்படுத்தும் குணம் உடையவராக இருந்தவர். 

செருத்துணையார்

அறத்தைப் போற்றும் பெருமக்கள் நிறைந்த ஊராக தஞ்சாவூர் விளங்குகிறது. சீரும், செல்வமும் ஒருங்கே சேர்ந்தாலும் நீதிநெறி தவறாமல் வாழும் வேளாளர் குலத்து மக்களும் தஞ்சையில் நிறைந்து காணப்படுகின்றனர். தஞ்சை அருகே கீழத் தஞ்சை என்ற தலத்தில் செருத்துணை நாயனார் என்ற சிவத் தொண்டர் வாழ்ந்து வந்தார்.  அவர் பல பேருக்கு துணை புரிந்ததால் செருத்துணையார் என்ற பெயரைப் பெற்று விளங்கினார்.  

தூய உள்ளம் படைத்தவராக இருக்கும் செருத்துணையார், அடியார்களைக் காப்பதிலும் அதிக ஈடுபாடு கொண்டவராக இருந்தார். தனது உள்ளத்தில் எழும் உணர்வுகளை எல்லாம் ஈசன் திருவடிகளில் செலுத்துபவராக இருந்து வந்தார்.

சிவனடியார்களுக்கு யாரேனும் தீங்கிழைத்தால் அவர்களை முதலில் கண்டிப்பார். அதையும் மீறி அவர்கள் திருந்தாவிட்டால், அவர்களை தண்டிக்கும் எண்ணம் படைத்தவராக செருத்துணையார் விளங்கினார். கோயிலில் நடைபெறும் இறை வழிபாடு எவ்வித இடையூறும் இன்றி நடைபெறவும் அரும்பாடுபட்டார்.  

திருவாரூர் கோயில்...
திருவாரூர் கோயில்...

அடியார்களின் நலனுக்காக, உடல், பொருள், ஆவி என அனைத்தையும் தியாகம் செய்யும் குணம் படைத்தவரான செருத்துணையார், திருவாரூர் தியாகேசப் பெருமானுக்கு இடையறாது, தொண்டுகள் பல ஆற்றி வந்தார். வழிபாடுகள், குறித்த நேரத்தில் நடைபெறவும், அபிஷேக மற்றும் அலங்கார பொருட்கள் குறித்த நேரத்தில் கோயிலுக்கு வந்தடையவும், குறித்த நேரத்தில் நைவேத்தியப் பொருட்கள் கோயிலில் தயார் செய்யப்படுவதற்கும், குறித்த நேரத்தில் மலர்கள், மலர் மாலைகள் கோயிலை வந்தடையவும் அனைத்து ஏற்பாடுகளையும் செருத்துணையார் செய்து வந்தார்.  

சிவபெருமானுக்கு பூஜை செய்யப் பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதில் செருத்துணையார் உறுதியுடன் இருப்பார். இறைவனுக்கு பயன்படுத்தப்படும் மலர்கள் தூய்மையான இடத்தில் இருந்து எடுக்கப்பட்டு வர வேண்டும் என்பதை எப்போதும் வலியுறுத்துவார். இதனால் கோயில் பூஜைக்குத் தேவையான மலர்களைப் பறிப்பவர்கள் மிகுந்த கவனத்துடன் மலர்களைப் பறித்து வருவது வழக்கம்.

ஈசனுக்கு மலர்கள் பறிக்கச் செல்பவர்கள், தூய எண்ணத்துடன், புனித நீராடி, தூய ஆடைகள் உடுத்தி, தூய கரங்களால், மலர்களைப் பறித்து, தூய்மையான கூடையில் சேகரித்து அவற்றை கோயில் மண்டபத்துக்கு எடுத்து வந்து, மாலையாகத் தொடுப்பது வழக்கம். அவர்களுடன் செருத்துணையாரும் சேர்ந்து மாலைகளைத் தொடுப்பார்.  

கோயில் கிணற்றில் இருந்தும், அருகில் உள்ள நீர்நிலைகளில் இருந்தும் சுவாமி அபிஷேகத்துக்கு நீர் கொண்டு வருவது குறித்து எப்போதும் கவனத்துடன் இருப்பார். கோயிலுக்குள் நடைபெறும் சீரமைப்புப் பணிகளை மேற்பார்வை இடுவார். சுவாமி புறப்பாட்டுக்குத் தேவையான வாகனங்களில் ஏதேனும் பழுது இருந்தால் அவற்றை சரி செய்வார். சப்தம் வராமல் இருக்க வேண்டும் என்பதற்காக கோயில் கதவுகளுக்கு இடையே மசகு எண்ணெய் இடுவார். கோயில் வளாகத்துக்குள் குப்பை சேகரம் ஆகாமல் இருக்கிறதா என்பதையும் கவனிப்பார்.  

திருவிழாக் காலங்களில் பயன்படுத்தப்படும் தேர் சரியாக பராமரிக்கப்படுகிறதா என்பதை அவ்வப்போது கண்காணிப்பார். பல்லக்கு, சப்பரம், ரதம் போன்றவை முறையாக இயங்குகின்றனவா என்பதை ஆய்வு செய்வார்.  வெளியூரில் இருந்து வரும் அடியார்களுக்கு தங்க வசதி செய்து கொடுத்து, அவர்கள் நீராடி இறைவனை வழிபடவும் உதவி புரிவார். அவர்களுக்குத் தேவையான உணவு வகைகள் கிடைப்பதற்கு ஏற்பாடுகள் செய்வார். கருணையின் வடிவாக இருந்து, அடியார்கள் சுவாமி தரிசனம் செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வார்.  

செருத்துணையார் எப்போதும் திருவாரூர் தியாகேசர் கோயிலில் அமர்ந்து, அனைத்தும் சரியாக நடைபெறுகின்றனவா  என்று, தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவது வழக்கம்.  ஒருசமயம், கோயில் மண்டபத்தில், வழிபாட்டுக்காக பல வகை மலர்கள் கூடைகளில் வைக்கப்பட்டிருந்தன. சில கூடைகளில் மலர் மாலைகளும் இருந்தன. மண்டபத்தின் மையத்தில் செருத்துணையார் அமர்ந்து, சிவ வழிபாட்டுக்காக மலர்களைத் தொடுத்துக் கொண்டிருந்தார்.  

அப்போது சுவாமி தரிசனம் செய்ய, பல்லவ பேரரசர் காடவர்கோன் கழற்சிங்கரின் பட்டத்து ராணி கோயிலுக்குள் நுழைந்தார்.  அவ்வாறு வந்தவர், மண்டபத்துக்குள் இருந்த மலர் ஒன்றை எடுத்து முகர்ந்து பார்த்தார். இதைக் கண்ட செருத்துணையார், மிகுந்த சினம் கொண்டார்.  

சிவ பூஜைக்கு உரிய பொருள் புனிதமானது. அதைக் கடப்பதும் முகர்வதும் தவறான செயல். சிவநிந்தையாகவே கருதப்படும். இத்தகைய சிவநிந்தை செய்வோர் எத்தகையவராக இருந்தாலும் தக்க முறையில் தண்டிக்கப்பட வேண்டும் என்று செருத்துணையார் நினைத்தார்.  

வந்தவர் அரசி என்றுகூட பார்க்காமல், சிவனுக்குரிய அர்ச்சனை மலரை முகர்ந்து பார்த்த குற்றத்துக்காக, பட்டத்து பெருந்தேவியாரின் கூந்தலைப் பற்றி இழுத்து கீழே தள்ளினார். தன் இடுப்பில் இருந்த வாளால், அரசியாரின் மூக்கை சீவினார். அப்போது அங்கு வந்த அரசரிடம், நடந்தவற்றை அப்படியே கூறினார்.  

இறைவன் மீது செருத்துணையார் காட்டும் பக்தியைக் கண்டு கழற்சிங்கர் வியந்தார். செருத்துணையாருக்கு தலை வணங்கினார். அந்த சமயத்தில் அவர்கள் முன் தோன்றிய ஈசன், அடியார்களின் பக்திக்கு தலை வணங்கி, அரசர், அரசி, செருத்துணையார் ஆகியோருக்கு அருள் புரிந்தார்.  

இவ்வாறு வன்மீகநாதரின் திருவடிகளுக்கு, பல்லாண்டுகள் இடையறாது திருத்தொண்டுகள் புரிந்து, செருத்துணையார்  சிவபெருமானின் திருவடி நிழலில் இளைப்பாறினார்.  

 ‘தஞ்சை மன்னவனாம் செருத்துணை தன் அடியார்க்கும் அடியேன்’ 

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க...

சிவனருள் பெற்ற அடியார்கள் – 10 
சிவனருள் பெற்ற அடியார்கள் – 9

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in