மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 14

மகா பெரியவா
மகா பெரியவா ஓவியம்: A.P.ஸ்ரீதர்

‘‘சொத்து பிரிக்க வேண்டியது அவசியம்... என் தம்பியின் போக்கு சரியில்லை. சொத்தினைப் பிரிக்க வேண்டும் என்பதில் எனக்கு விருப்பம் இல்லை. இருந்தாலும், தம்பியின் நடவடிக்கை காரணமாக இந்த முடிவுக்கு வந்துவிட்டேன். இதற்கு உங்களது ஆலோசனையும் அறிவுரையும் வேண்டும்’’ என்று மகா பெரியவா திருச்சந்நிதியைத் தேடி காஞ்சிபுரம் வந்தனர் கேரளத்துப் பிரமுகரும் அவரது மனைவியும்.

சகோதர ஒற்றுமை என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர்கள் கேரளத்து அண்ணனும், அவரது தம்பியும். யார் கண்பட்டதோ... திடீரெனத் தம்பியின் போக்குகள் மாறின. அவரது செயல்பாடுகள் வித்தியாசமாக இருந்தன. வீட்டை விட்டுத் தனியே குடித்தனம் போய்விட்டார். அண்ணன் மீது பல விஷயங்களில் தம்பிக்கு அதிருப்தி!

தன் தம்பியின் போக்கு பிடிக்காமல் குடும்பச் சொத்தினைப் பிரிக்க வேண்டியதுதான் என்று அண்ணன் தீர்மானித்து விட்டார். என்றாலும், இத்தனை நாட்களாக அனைவரும் ஒன்றாக வாழ்ந்த குடும்பச் சொத்தினை பாகம் பாகமாகப் பிரிப்பதில் அண்ணனுக்கு உடன்பாடில்லை. இப்படிப்பட்ட ஒரு நிலைக்குத் தம்பி தன்னைத் தள்ளிவிட்டானே என்று புலம்பித் தீர்த்தார்.

குருவிகள் போல் கூட்டமாக வாழ்ந்த குடும்பத்தில் இப்படி ஒரு பாகப்பிரிவினை தேவைதானா என்று வீட்டு பூஜையறையில் மகா பெரியவா படத்தின் முன் போய் அழுதார். நல்ல பதில் வேண்டி, அந்த மகானின் திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.
தம்பிக்கு இருக்கக்கூடிய பிடிவாதமான குணம், இந்த முடிவை எடுத்தே ஆக வேண்டும் என்று அவரை நிர்பந்தப்படுத்தியது. குடும்பத்தில் அண்ணன் - தம்பிக்கு உண்டான அனைத்துச் சொத்துகளையும் பிரிக்க வேண்டியது  காலத்தின்  கட்டாயம்  என்று  வேறு  வழியே  இல்லாமல்  முடிவெடுத்தார்.

இருந்தாலும், இதை தன்னிச்சையாகச் செயல்படுத்த அவருக்கு மனமில்லை. பரம்பரை பரம்பரையாகத் தங்கள் குடும்பத்துக்கு குல குருவாக இருந்து வரும் காஞ்சி பீடாதிபதியைத் தரிசித்து அவரிடம் விஷயத்தைச் சொல்லி அனுக்ரஹம் பெறுவதற்காகக் காஞ்சி மடத்துக்கு வந்திருந்தார்.

கைகளைக் கூப்பியவாறு மகா பெரியவாளைப் பார்த்தார். பிறகு, ‘‘இத்தனை நாளா பிரிக்காமல் ஒண்ணா இருந்த இந்தச் சொத்தினை இப்ப பிரிச்சுக் குடுத்துடலாம்னு தீர்மானிச்சிருக்கேன் பெரியவா. தவிர, என்னோட போக்கு புடிக்கலேனு அவன் இப்ப என் மேல ‘கேஸ்’ போடுவதற்குத் தயாரா இருக்கிறதா வேற கேள்விப்பட்டேன். சொத்தினைப் பிரிச்சுக் கொடுத்தாலும், வில்லங்கம் தொடருமா என்னன்னு எனக்குப் புரியலை... பெரியவாதான் எனக்கு வழி காட்டணும்’’ என்று தேம்பித் தேம்பி அழுதவர், மீண்டும் ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்.

ஒரு சில விநாடிகளுக்குப் பெரியவா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். ‘‘எதையும் விட்டுக் குடுக்காம சரிசமமா அவனுக்கு எல்லாத்துலயும் பங்கு தரணும்னு நீ நினைக்கறே... ஆனா, அவன் உன் மேல ‘கேஸ்’ போடத் தயாரா இருக்கான்னும் வேற சொல்றே...
சரி, நீயும் ‘கோர்ட்’டுக்குப் போறேன்னு வெச்சுக்கோ... அதுக்கு ‘கோர்ட் ஃபீஸ்’னு எத்தனை ரூபாய்க்கு ‘ஸ்டாம்ப்’ வாங்கணும்... அப்புறம் வக்கீலுக்குன்னு ஒரு ‘ஃபீஸ்’ கொடுக்கணுமோல்லியோ? அது எவ்ளோ ஆகும்?’’ -இது மகானின் அர்த்தபுஷ்டியான கேள்வி.

‘‘ஆமாம் பெரியவா... வழக்குன்னு வந்துடுத்துன்னா ‘கோர்ட்’ படியேறித்தான் ஆகணும். ‘கோர்ட் ஃபீஸ்’, வக்கீல் ‘ஃபீஸ்’ இதெல்லாம் பல ஆயிரம் ரூபாய் செலவாகும்’’ கேரளத்து அண்ணன்.

‘‘இப்ப உன்னோட சொத்துங்கிறது இன்னிக்கு நேத்திக்கு நீ சம்பாதிச்சது இல்ல. பூர்வீகச் சொத்து. பரம்பரை பரம்பரையா வந்துண்டே இருக்கிறது. இதுக்கான எல்லா ‘டாக்குமென்ட்’களும் உங்கிட்ட இருக்கும்னு சொல்ல முடியாது. குடும்பம் ஒண்ணா சேர்ந்து இருக்குன்னா அதுக்கு இந்த ‘டாக்குமென்ட்ஸ்’லாம் தேவை இல்லை.

ஆனா, பாகப்பிரிவினைன்னா ‘ரிஜிஸ்திரார்’ ‘ஆபீஸு’க்குப் போய் இன்னின்ன ‘டாக்குமென்ட்ஸ்’ எல்லாம் வேணும்னு கேட்டாக்க, கேட்ட மாத்திரத்துல உடனே எடுத்துக் குடுக்க முடியாது. எல்லாத்தையும் தேடித்தான் தரணும். இப்படித் தேடி எடுக்கறதுக்குக் காலமும் ஆகும். காசும் குடுக்கணும்... இல்லியா?’’- பரப்பிரம்ம சொரூபமான மகா பெரியவா தெள்ளத் தெளிவாகக் கேட்டார்.
‘‘ஆமா பெரியவா... நீங்க சொல்றதெல்லாம் வாஸ்தவம்தான்’’ என்று குழம்பிய நிலையில் பேசினார் அண்ணன்.

‘‘போகட்டும்... ‘கேஸ்’னாலுமே காசு பணம் இறைக்கறது ஒரு பக்கம் இருந்தாலும், இந்தக் ‘கேஸ்’ நீ எதிர்பார்க்கிற கால அவகாசத்துக்குள்ள லேசுல முடிஞ்சுடுமா? இத்தனை நாள்ல ‘ஃபைனல்’ தீர்ப்பு குடுத்துடுவானு சொல்ல முடியுமா?’’

‘‘அப்படில்லாம் தீர்க்கமா சொல்ல முடியாது பெரியவா. மாசக்கணக்கும் ஆகலாம். நீண்டுண்டே போச்சுன்னா வருஷக்கணக்கும் ஆகலாம். ‘கோர்ட்’ படி ஏறிட்டா எதுவும் நம்ம கையில இல்லே.’’

‘‘சரி... எத்தனை நாள் நடக்கறதோ, நடக்கட்டும். ஆனா, அந்தக் ‘கேஸ்’ உனக்கு சாதகமாத்தான் முடியும்னு உன்னால அடிச்சுச் சொல்ல முடியுமா? நீ ஒரு வக்கீல் வெக்கறது மாதிரி உன் தம்பியும் ஒரு வக்கீல் வெச்சுப்பான், இல்லியா?’’

‘‘ஆமா பெரியவா... ‘கேஸ்’ என் பக்கம்தான் சாதகமா முடியும்னு உறுதியா சொல்றதுக்கில்லை.’’

‘‘சரி... யோக்கியமா நடந்துக்கறே... தம்பிக்கும் எல்லாம் சமமா தரணும்னு நினைக்கறே... ஒன்னோட நல்ல மனசுக்கு ‘கேஸ்’ உன் பக்கமே சாதகமா முடியறதுன்னு வெச்சுக்கோ... அதுக்குப் பிறகு உன் தம்பி ‘அப்பீல்’னு மேல் கோர்ட்டுக்குப் போனான்னா...’’  இழுத்தவாறு கேட்ட மகா பெரியவா, கேரள அண்ணனது முகம் பார்த்தார்.

‘‘உண்மைதான்... ‘பிரஸ்டீஜு’க்காக ‘அப்பீலு’க்கும் போகத்தான் செய்வான்.’’

‘‘அப்படி ‘கேஸ்’ இழுத்துண்டே போச்சுன்னா சொத்தை நீயும் அனுபவிக்காம, உன்னோட தம்பியும் அனுபவிக்காம ‘ரிஸீவர்’னு ஒருத்தரை கோர்ட் ‘அப்பாயின்ட்மென்ட்’ பண்ணிடுமே... அப்படி வந்ததுன்னா அது ரொம்பக் கஷ்டமாச்சே...’’  தவமுனிவர் கேட்டார்.
‘மகா பெரியவா எந்தச் சட்டக் கல்லூரியில் சட்டம் படித்தார்... இந்த அளவுக்கு ஒவ்வொரு கேள்வியாகப் புட்டுப் புட்டு வைக்கிறாரே?’ என்று இதைப் படிக்கின்ற நமக்கு ஒரு சந்தேகம் வரலாம்.

காஞ்சி மகானின் ஞான திருஷ்டிக்கு முன்னால், எல்லாமே சாதாரணம்.

ஒரு மகான் ஆகப்பட்டவர், உரிய இடத்துக்குச் சென்றுதான் அதைப் பற்றிக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றில்லை.

முசிறிக்கு அருகே இருக்கிற மகேந்திரமங்கலத்தில் காவிரி ஆற்றில் துள்ளிக் குதித்தும், ஆற்று மணலில் விளையாடியும்தான் பீடாதிபதிக்கு உண்டான பால பாடங்களைக் கற்றார். அப்போது அவருக்கு குருவாக இருந்து பாடம் புகட்டிய ஆசிரியர்கள், ‘இந்தச் சிறுவன் (மகா பெரியவா) பாடங்களைக் கற்பதில் ஆர்வம் செலுத்தவில்லையே?’ என்று மடத்தின் அதிகாரிகளிடம் வருத்தப்பட்டுச் சொன்னார்கள்.

விஷயம் சிறுவனின் காதுகளுக்குப் போனது. ‘யார் சொன்னது, நான் பாடங்களைக் கவனிக்கவில்லை என்று? நீங்கள் அனைவரும் எனக்குக் கற்றுக் கொடுத்த பாடங்களை ஒவ்வொன்றாகச் சொல்கிறேன், கேளுங்கள்’ என்று எல்லாவற்றையும் கடகடவென்று ஒப்புவித்தாராம்.

புதிதாகப் பொறுப்புக்கு வந்திருக்கும் பீடாதிபதியின் ஞான திருஷ்டி கண்டு ஆசிரியர்கள் ஆச்சரியப்பட்டார்கள். இளையவரான பீடாதிபதியின் கால்களில் விழுந்து, தங்களது செயலுக்கு மன்னிப்புக் கோரினர்.

சென்னை விமான நிலையத்துக்குத் தாங்கள் வர வேண்டும் என்று பலரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க சென்னை விஜயத்தின்போது ஒருநாள் மீனம்பாக்கம் விமான நிலையத்துக்குள் நுழைந்தார் பெரியவா.

விமானத்தின் செயல்பாடு பற்றி ‘பைலட்’டே வியக்கும்படி பல கேள்விகள் கேட்டு, அதற்கு உண்டான விளக்கங்களையும் ஒரு குழந்தைக்குச் சொல்வது போல் அவருக்குச் சொன்னாராம் காஞ்சி முனிவர்!

இதுபோல் பல நிகழ்வுகளைச் சொல்லலாம்.

அப்பேர்பட்ட நடமாடும் தெய்வத்துக்கு ‘கோர்ட்’ நடைமுறைகளைப் பற்றியும், சட்டம் பற்றியும் எவராவது பாடம் எடுக்க வேண்டுமா என்ன?

‘ரிஸீவர்’ என்று ஆரம்பித்து மகா பெரியவா சொன்ன ஒவ்வொரு விஷயத்தையும் கேட்டு, இதன் தீர்ப்பாக இவர் என்ன சொல்லப் போகிறார் என்று அமைதியாக அவரது திருமுகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார் கேரளத்து அண்ணன்.

நீதிபதியின் தீர்ப்பை விட, முக்காலமும் உணர்ந்த முனிபுங்கவர் வழங்குகின்ற தீர்ப்பு முக்கியமானதாயிற்றே!

(ஆனந்தம் தொடரும்)

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க:

மகா பெரியவா
மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 13

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in