மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 13

மகா பெரியவா
மகா பெரியவா ஓவியம்: A.P.ஸ்ரீதர்

ந டமாடும் தெய்வம் மகா பெரியவா நமக்கு எத்தனையோ உபதேசங்களை, வாழ்வியல் தத்துவங்களை மிக எளிதான உதாரணத்துடனும், சொற்களாலும் சொல்லி இருக்கிறார்.

ஒருவரை நல்வழிப்படுத்துகின்ற உரிமையும் கடமையும் பெற்றோரை விட குருவுக்குத்தான் அதிகம் உண்டு. ஆத்மார்த்தமான குரு பக்தியை எவர் ஒருவர் கொண்டிருக்கிறாரோ, அவருக்கே இவை எல்லாம் வாய்க்கும் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

ஜகத்குருவாக விளங்கிய காஞ்சி மாமுனிவர் அருளிய நல்முத்துகளில் கூட்டுக் குடும்பம் பற்றிய கருத்துகளும் உண்டு.

‘‘எந்த ஒரு கூட்டுக் குடும்பத்தில் வசிக்கிறவரும் கடனே வாங்கக் கூடாது... கடன் வாங்கிக் குடும்பத்தை நடத்துகிற மாதிரி மற்றவர்கள் அதை அனுமதிக்கக் கூடாது’’ என்கிறார் மகா பெரியவா.

‘தனிக் குடித்தனம்’ பற்றி பெரியவா சொல்கிற கருத்துகள் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் சொல்லப்பட்டிருந்தாலும், அவை இன்றைக்கும் என்றைக்கும் பொருந்தக்கூடிய நல்முத்துகளாக இருக்கின்றன. அவற்றை இப்போது பார்க்கலாம்..

‘‘ஏழையோ பணக்காரனோ... எல்லார் குடும்பத்திலும் கல்யாணம் மாதிரியான சுப காரியங்கள் மற்றும் அசுப காரியங்கள் வருகின்றன. இத்தகைய காரியங்களைப் பூர்த்தி செய்வதற்காக யாரேனும் கடன் படுகிற மாதிரி நாம் விட்டுவிட்டால் அது நமக்குப் பெரிய தோஷம் (இதற்கு என்ன அர்த்தம் என்றால், ஒருவர் கடன் வாங்கி சுப காரியங்களையோ, அசுப காரியங்களையோ செய்யும்படி நாம் விட்டு விடக் கூடாது).

இத்தகைய கர்மாக்களை நிறைவேற்றுவதற்கு ஒருவர்  கஷ்டப்படுகிறார் என்றால், அவரைச் சுற்றி இருக்கின்ற சொந்த பந்தங்கள், மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும்?

அவரவரும் தன்னால் ஆனதை ஐந்தோ, பத்தோ ஏழைப்பட்ட உறவினர்களின் சுப காரியங்களுக்குக் கொடுத்து உதவ வேண்டும். இது அவர்களின் மிகப் பெரிய கடமை. முன்காலங்களில் இத்தகைய உதவியைப் பலரும்  சகஜமாகச் செய்து வந்தார்கள். யாரேனும் கேட்டோ, இல்லை எவரேனும் தகவல் சொல்லியோ இதை அவர்கள் செய்யவில்லை.

‘பரோபகாரம்’ என்று யாரோ மூன்றாம் மனிதர்களுக்கு உதவி செய்வது ஒரு பக்கம் இருக்கட்டும்... தவறில்லை. ஆனால், அதற்கு முன்னால் சொந்த பந்தங்களாக விளங்குகிற நம் ஏழைப்பட்ட உறவினர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இரண்டு தலைமுறைக்கு முன்னால் இதைப்பற்றி எல்லாம் இப்படி விஸ்தாரமாகச் சொல்ல வேண்டிய அவசியம்  இருக்கவில்லை.

அப்போது முதியோர்கள் பராமரிப்பு இல்லம், விதவைகள் விடுதி என்றெல்லாம் ஏற்படுத்த வேண்டிய அவசியமே இல்லாமல் இருந்ததற்கு என்ன காரணம்? எவரையும் தவிக்க விடாமல், அவரவர்களது சொந்த பந்தங்களே அனைவரையும் பராமரித்து வந்ததுதான் காரணம்.

அநேகமாக எல்லா வீடுகளிலும் ஒரு அத்தை, பாட்டி... மூன்று தலைமுறைகளைத் தாண்டியும் ஒரு மாமா, தாத்தா என்கிற மாதிரி வயதானவர்கள் இருந்தார்கள்.

தற்காலத்தில் ரொம்பவும் பெரிய பணக்காரர்கள்கூட வெறும் ‘ஷோ’வுக்காக‘பார்ட்டி’யும் ‘ஃபீஸ்ட்’டும் (விருந்து) கொடுக்கிறார் கள். அல்லது பேப்பரில் போடுகிற மாதிரி ‘டொனேஷன்’ கொடுக்கிறார்கள். ஆனால், சொந்த பந்தங்களை உடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது போய்விட்டது. தங்கள் குடும்பத்தில் இருக்கும் வசதி இல்லாதவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவு தந்து கவனித்துக் கொள்ள வேண்டும்  என்பது இப்போது அநேகமாகப் போயே போய்விட்டது.

அவிபக்த (கூட்டு) குடும்ப முறை மெல்ல மெல்ல மறை

யத் தொடங்கி இருக்கிறது. அண்ணன், தம்பி என்கிற பாசம் எங்கே என்று தேட  வேண்டியதாகி விட்டது.

முன்பெல்லாம் ‘ஜாயின்ட் ஃபேமிலி’யாக இருக்கும்

போது தாயார், தகப்பனார், சித்தப்பாமார்கள், பெரியப்பாமார்கள், அவர்களுடைய பத்தினிகள், பிள்ளைகள், மாட்டுப் பெண்கள், பேரக் குழந்தைகள் என்று ஒரு வீட்டிலேயே 20, 25 பேர் இருப்பார்கள். இவ்வளவு பேர் ஒரு வீட்டில் இருக்கிறபோது அநாதரவான தூரத்துச் சொந்தக்காரர்கள் நாலைந்து பேரையும் கூட வைத்துக்கொண்டு சாப்பாடு போடுவது ஒரு பாரமாகவே அவர்களுக்குத் தெரியவில்லை.

ஆனால், இப்போதோ அவனவனும் பெண்டாட்டி

யோடு கத்தரித்துக்கொண்டு தனிக் குடித்தனம் என்று போவதால்,  ஒருத்தரை வைத்துக் கொள்வது என்றால்

கூட அது பெரிய சுமையாகத் தெரிகிறது.

எத்தனையோ ஆயிரம், பதினாயிரம் வருடங்களாக இருந்து வந்த ஏற்பாடுகள் இந்த இரண்டு, மூன்று தலைமுறைகளில் வீணாகப்போய், ‘இங்கிலீஷ் ஃபேஷன்’ வந்ததில் உயர்ந்த தர்மங்கள் எல்லாம் நசித்துப் போய்விட்டன.’’

 இப்படி மிகுந்த மன வருத்தத்துடன் மகா பெரியவா சொல்கிறார்.

இன்றைக்குத் தனிக் குடும்பத்தில் வாழ்கின்றவர்கள் கூட சற்று யோசித்துப் பார்த்தால், காஞ்சி மகான் சொல்வதில் இருக்கிற உண்மையும், ஏக்கமும் புரியும்.

‘மகா பெரியவாளே கண் கண்ட தெய்வம்’ என்று அவருடைய அத்யந்த பக்தர்களாக விளங்கிய ஒரு கேரளக் குடும்பத்தில் அண்ணன், தம்பிக்கிடையே பங்கு பிரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால், இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்படும் சூழ்நிலை நிலவியது.

இந்த நிலையில் அண்ணன் ஆகப்பட்டவர், சஞ்சல மான மனதுடன் பெரியவாளின் ஆலோசனையையும், ஆசியையும் வேண்டி தன் மனைவியுடன் காஞ்சிபுரம் வந்தார்.

வந்தவர், தம்பதி சமேதராக நமஸ்காரம் செய்தார்.

மடத்துக்கு மிகவும் பரிச்சயமான குடும்பம். கணவனையும் மனைவியையும் ஒரு புன்னகையுடன் பார்த்து ஷேம லாபங்களை விசாரித்தார் மகான்.

ஒரு சுரத்து இல்லாமல், செயற்கையான புன்னகை யுடன் பேசிக்கொண்டிருந்தார் கேரளத்து அண்ணன்.

‘‘எங்க பரம்பரை முழுக்க பெரியவாளோட உத்தரவுக்கும் விரல் அசைவுக்கும் கட்டுப்பட்ட குடும்பம் பெரியவா. நீங்க என்ன சொன்னாலும், அதை தெய்வ வாக்கா எடுத்துண்டு நாங்கல்லாம் வாழ்ந்திண்டு இருக்கோம்...’’ என்று மெல்ல ஆரம்பித்தார் அண்ணன்.

முக்காலமும் உணர்ந்த கருணை தெய்வத்துக்கு அவர் என்ன சொல்லப் போகிறார் என்று தெரியாமல் இருக்குமா? என்றாலும் ‘அவரே சொல்லட்டும்’ என்பது போல் மாமுனிவர் எதுவும் பேசாமல் அந்த அண்ணனது முகத்தையே ஏறிட்டார்.

‘‘குடும்பத்துல இன்னும் பாகம் பிரிக்காம இருக்கு. பரம்பரை குடும்பச் சொத்து, நிலம், வீடுன்னு நிறைய இருக்கு. சொத்தைப் பிரிக்கறதுக்கு உண்டான அவசியம் இது

வரைக்கும் வரலை. அதனால எதைப் பத்தியும் நானும் யோசிக்

கலை. இவளும் (மனைவியைக் காட்டி) யோசிக்கலை. ஆனா, திடீர்னு...’’ என்று சகஜமாகப் பேச ஆரம்பித்தவருக்கு அடுத்து வார்த்தைகள் வாயில் இருந்து எழவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது.

தன்னை சமாதானப்படுத்திக்கொண்டு அவரே சொல்லட்டும் என்று மகா பெரியவா தன் திருவாய் திறக்காமல், ‘மேலே சொல்லு’ என்பது போல் தலையை  அசைத்தார்.

கேரள அண்ணன், ‘‘என்னோட தம்பிக்கு பிடிவாத குணம் உண்டு பெரியவா. ஏதானும் ஒரு விஷயத்தைப் பிடிச்சுண்டுட்டான்னா அதுலயே நிப்பான். இதை முரட்டுத்

தனம்னுகூட சொல்லலாம். எத்தனையோ சொல்லிப் பாத்தாச்சு. கேக்கலை. இப்ப அவன் எங்கூட இல்லை. ஏதோ கோவத்துல தனியா ஜாகை இருக்கான்...’’

இதற்கு மேலே தொடர முடியாமல் கேரள அண்ணனது  கண்களில் நீர் தாரை தாரையாக வழிந்தது. உடன் இருந்த அவரது மனைவியும் புடவை முந்தானை யால் வாயை மூடிக்கொண்டு தேம்ப ஆரம்பித்தார்.

அவர்களது துக்கம் முழுக்க வெளியேறி விடட்டும் என்று அமைதியாக இருந்தார் காஞ்சி மகான்.

(ஆனந்தம் தொடரும்)

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க:

மகா பெரியவா
மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 12

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in