மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 29

மகா பெரியவா
மகா பெரியவாஓவியம்: A.P.ஸ்ரீதர்

‘நீயும் சந்தோஷமாக இருந்து மற்றவர்களையும் சந்தோஷமாக வைத்திரு.’

மனிதனாகப் பிறந்த நம் அனைவருக்கும் மகான்களும் ஆன்மிக நூல்களும் அறிவுறுத்தும் மிகச் சிறந்த போதனை இது.
ஓட்டப்பந்தயத்தில் உடன் ஓடி வருகிற ஒவ்வொருவரையும் தாண்டித் தாண்டி ஓடினால்தான், வெற்றிக் கோப்பையை சுலபமாகத் தட்டிச் செல்ல முடியும். அங்கே எத்தனை வேகமாக வேண்டுமானாலும் ஓடலாம். எவரை வேண்டுமானாலும் கடந்து செல்லலாம். இலக்கு... வெற்றி மட்டுமே!

ஆனால், வாழ்க்கை என்கிற ஓட்டம் அப்படி இல்லை. நிதானம், பொறுமை, அன்பு, கனிவு, பணிவு இப்படிப் பலதும்
கலந்தது. இந்த ஓட்டத்தில் யார் யாரையெல்லாம் நாம் கடந்து செல்கிறோமோ, அவர்களின் துயர்களையும் துடைக்க வேண்டும். காயம் பட்டவர்களுக்கு மருந்திட வேண்டும். கவலைகொண்டவர்களிடம் கரிசனமாகப் பேச வேண்டும். கண்ணீர் சிந்துவோரின் கண்களை ஆதூரத்துடன் துடைக்க வேண்டும்.

இப்படிப்பட்டவர்களைக் காண்பது வெகு அரிது.

மனிதனின் வாழ்க்கைக்கு மிக அவசியமான இந்த விஷயம் பற்றி மகா பெரியவா நிறைய சொல்லி இருக்கிறார்.
மகான் சொல்வதைத் தற்போது பார்ப்போம்.

‘‘பக்தர்கள் பலரும் கூடுகிற இடங்களிலும், ஸ்ரீமடத்து முகாம்களிலும் அடிக்கடி பிரவசனம் பண்ணுவேன். அப்போதெல்லாம் சொல்லுவேன்... ‘ஊர்க் குழந்தையை ஊட்டி வளர்த்தால் தன் குழந்தை தானே வளரும்.’

இதற்கு என்ன அர்த்தம்? அதாவது உன் குழந்தையைப் பட்டினி போட்டுவிட்டாவது (அதற்காக பட்டினி போடு என்கிற பொருள் இல்லை) நீ வெளியே போய் ஊர்க் குழந்தையைக் கவனி. இதை நான் அடிக்கடி சொல்லி வந்திருக்கிறேன். இப்படி ஒரு பழமொழி இருப்பதும் வாஸ்தவம். பழமொழிதானே என்று அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. இல்லாத ஒன்று பழமொழியாக ஆகி விடுகிறதில்லை. எப்போதோ நம் முன்னோர்களால் அறிவுரைகளாகச் சொல்லப்பட்டதுதான் பழமொழி ஆகி இருக்கிறது.
தொண்டு நிலையில் மிகவும் உயர்ந்து அதிலேயே ஊறிப் போனவர்களின் பெருமைகளை நாம் என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டும்; அவர்களின் நற்குணங்களைப் போற்ற வேண்டும் என்பதற்காக இந்தப் பழமொழி ஏற்பட்டிருக்க வேண்டும்.
உடனே பழமொழியை அப்படியே பிடித்துக்கொண்டு அர்த்தம் பார்த்துவிடக் கூடாது. அவர்கள் மனதறிந்து தன் வீட்டுக் குழந்தை
யைக் கதறவிட்டு, ஊர்க் குழந்தைகளைச் சீராட்டினார்கள் என்று அர்த்தமில்லை.

பரோபகாரத்தில்... அதாவது மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று அவர்களுக்கு இருந்த தீவிர உணர்ச்சி வேகம், அவர்களை இதுபோல் இழுத்துக் கொண்டு போயிருக்கலாம்.

தன் குழந்தையைக் கவனிக்காமல் ஊர்க் குழந்தையைச் சீராட்டுவது பற்றி வேடிக்கையாக ஒருத்தர் சொன்னதைக் கேள்விப்பட்
டிருக்கிறேன்.

இந்தக் காலத்தில் ஸ்த்ரீகள் (பெண்கள்) பலரும் ‘சோஷியல் சர்வீஸ்’ என்று கிளம்பி இருக்கிறார்கள். இதைப் பற்றி அவர் கேலியாகச் சொன்னார்.

ஒரு பணக்கார வீட்டு அம்மாள் தன் காரில் பெட்ரோலை நிரப்பிக்கொண்டு அருகில் உள்ள ஒரு குடிசைப் பகுதிக்குச் சென்றாளாம். ஏதோ வெளிதேசத்தில் இருந்து வந்திருக்கிற பவுடர் பாலை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கரைத்து அங்கே உள்ள ஏழைக் குழந்தைக்குப் புகட்டி விட்டு வருவாளாம் (இன்றைக்கு போட்டோவும் எடுத்துக் கொள்வார்கள்).

அதே நேரத்தில் பணக்கார அம்மாள் வீட்டில் என்ன நடக்கும் தெரியுமா? எந்த ஏழைக் குழந்தைக்கு இவள் இங்கே பவுடர் பாலைப் புகட்டிக் கொண்டிருக்கிறாளோ, அந்தக் குழந்தையின் ஏழைத் தாய், பணக்கார அம்மாளின் குழந்தைக்கு ஒரு ஆயாவாக சொகுசு வீட்டில் பால் கரைத்துப் புகட்டிக் கொண்டிருப்பாளாம்.

அதாவது, ‘நானும் சோஷியல் சர்வீஸ் செய்து கொண்டிருக்கிறேன் பேர்வழி’ என்று தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டுவிடக் கூடாது.

தவிர, எப்போதும் நம் நோக்கத்துக்கு எந்த விதமான பங்கமும் வரக் கூடாது.

ஒருவன் தன் வேலை மற்றும் வீடு தொடர்பான பணிகளைக் கவனிக்காமல் இவற்றை மற்றவர்களிடம் விட்டுவிட்டுப் பொதுப் பணிக்கு ... அதாவது ‘சோஷியல் சர்வீஸு’க்குப் போகிறான் என்று வைத்துக் கொள்வோம்... என்ன ஆகும்? வீட்டில் இருக்கிற மற்றவர்களுக்கு இவன் பேரில் ஒரு அதிருப்தி உண்டாகும். ‘என்னடாது... வீட்டு வேலைகளை அப்படியே போட்டுட்டு ஊர் ஊரா போயிண்டு இருக்கான்... அவனோட வேலைகளையும் ஒழுங்கா செய்யறதில்லை’ என்று வீட்டில் இருப்பவர்கள் சலித்துக் கொள்வார்கள். இதன் காரணமாக சமூகத்தொண்டே எவருக்கும் பிடிக்காமல் போய் விடுகிறது.

மகா பெரியவா
மகா பெரியவாஓவியம்: A.P.ஸ்ரீதர்

அதே சமயம் இவன் குறிப்பறிந்து வீட்டுக் காரியத்தையும் கவனித்துக் கொண்டு, பொதுக் காரியத்தையும் செய்தான் என்றால் யோசித்துப் பாருங்கள்... யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லை. அது மட்டுமில்லை. வீட்டில் உள்ள மனுஷர்களும் இவனைத் தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள். இவன் வெளியே போய்ச் செய்கிற பொதுத் தொண்டுக்குத் தங்களால் ஆன உதவிகளையும் வீட்டில் உள்ளவர்களே சந்தோஷத்துடன் செய்வார்கள். இவனது கைங்கர்யம் பற்றி நாலு பேரிடம் உத்ஸாகத்துடன் பேசுவார்கள்.

தொண்டு உள்ளத்துக்கு எது லட்சணம் தெரியுமா?

அன்பும் அடக்கமும்தான்.

‘தொண்டர் தம் பெருமை’ என்று அதைப் பெரியதற்கெல்லாம் பெரியதாக மற்றவர்கள் கொண்டாடலாம் ஆனால், தொண்டு செய்கிறவனுக்குத் தான் பெரியவன் என்ற எண்ணம் சிறிதும் இருக்கக் கூடாது.

தான் ரொம்பவும் சின்னவன் என்ற எண்ணமே இருக்க வேண்டும். பேருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டுக் கொண்டு தொண்டு செய்கிறான் என்றால், அந்தத் தொண்டையே அழுக்குப் பண்ணினதாகத்தான் அர்த்தம்.

அடக்கம், அன்பு போன்ற நற்குணங்கள் இருக்கிறவன், எந்த ஒரு காலத்திலும் வீட்டிலே இருக்கிறவர்களை எதிர்த்துக் கொண்டும், அவர்களிடம் எரிந்து விழுந்து கொண்டும் வெளியே தொண்டு செய்யப் போக மாட்டான்.

தான் பிறர் பாரத்தைத் தாங்குகிறவனாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, தன் பாரத்தை இன்னொருவரிடம் தள்ளினால் அது தனக்கு அவமானம்.

தன் கை பிறருக்கு உதவுவதாக இருக்க வேண்டுமே தவிர, தானே இன்னொரு கையை உதவிக்கு எதிர்பார்த்தால் அது தனக்கு ரொம்பவும் இழுக்கு என்று எண்ணுவான்.

பொதுச்சேவைக்குப் போகின்றவர்கள், ‘என் காரியம் பூராவையும் நானே பார்த்துக் கொள்வேன். உதவிக்கு யாரையும் அழைக்க மாட்டேன். என் காரியங்களைப் பூர்த்தி பண்ணிவிட்டுத்தான் பொதுத் தொண்டுக்குப் போவேன்’ என்று தீர்மானம் பண்ணிக்கொண்டு விட்டால் எல்லாம் சரியாகி விடும்.

தொண்டு செய்யப் போகிறவர்களுக்கு ஒரு ‘டிரிக்’ சொல்லித் தருகிறேன். அன்போடு பதுவிசாக நடப்பதுதான் அந்த ‘டிரிக்’.
வெளி மனிதர்களிடம் மட்டுமில்லை. வீட்டு மனிதர்களிடமும் இப்படிப் பரிவாக, பணிவாக இருந்தான் என்றால், வீட்டில் இருக்கின்றவர்களே, ‘நாம்தான் வீட்டையே கட்டிக்கொண்டு அழுகிறோம். இவனாவது லோகத்துக்குப் பணி செய்து, நமக்கும் சேர்த்துப் புண்ணியம் சம்பாதித்துத் தரட்டும்’ என்று நினைத்து அவனிடம் வீட்டு வேலைகளைக் கூடிய மட்டும் காட்டாமல் தாங்களே செய்து விடுவார்கள்.’’

இப்படிப் பொதுக் காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு நிறைய ‘அட்வைஸ்’ செய்கிறார் மகா பெரியவா.

இந்த மகான் சொல்கிற வார்த்தைகளை மனதில் பதித்து, உபதேசங்களை ஒருவன் செவி மடுத்துக் கேட்டான் என்றால், அவன் வீட்டிலும் நற்பெயர் சம்பாதிக்கலாம்; வெளியுலகிலும் பாராட்டுப் பெறுவான்.

இது குறித்தான மகானின் உபதேசம் இன்னும் தொடர்கிறது.

(ஆனந்தம் தொடரும்)

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க:

மகா பெரியவா
மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 28

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in