மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 28

மகா பெரியவா
மகா பெரியவாஓவியம்: A.P.ஸ்ரீதர்

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்துக்கு அருகில் உள்ள ஒரு தெரு. அந்தத் தெருவில் ஸ்ரீமடத்துக்கு என்று வாங்கப்பட்ட ஒரு வீட்டில் மகா பெரியவா உத்தரவுப்படி அவர் சொன்ன இடத்தில் தோண்டப்பட்டது.

எந்த இடத்தைத் தோண்டுமாறு மகான் உத்தரவிட்டாரோ, அந்த இடத்தைத் தன் பணியாளர்கள் உதவியுடன் தோண்டும் பணியில் ஈடுபட்டார் ஸ்தபதி.

சுமார் ஏழடி ஆழம் தோண்டப்பட்டவுடன் ஒரு சிவலிங்கத்தின் தலைப்பாகம் தென்பட்டது. அந்த லிங்கத்தைப் பெயர்த்து எடுக்க முயன்றனர் பணியாளர்கள். முடியவில்லை.

ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் இருந்து யானையை வரவழைத்து, லிங்கத்தின் மேற்பாகத்தில் ஒரு கயிற்றைக் கட்டி இழுத்தும் பார்த்தார்கள். ஊஹூம்... அசையவில்லை.

விஷயம் மகா பெரியவாளுக்குப் போனது. இதோ, மகா பெரியவாளே அந்த வீட்டுக்கு வந்துவிட்டார்.

பள்ளத்துக்குள் தென்பட்ட லிங்கத் திருமேனியின் சிரசில், மேலிருந்தவாறே கங்கா ஜலத்தால் அபிஷேகம் செய்தார் காஞ்சி மகான். உடன் வந்த தன் சிப்பந்தியை பள்ளத்துக்குள் இறங்கச் சொல்லிவிட்டு, லிங்காஷ்டகம் சொல்லி வில்வத்தை சார்த்தச் சொன்னார். மேலிருந்தவாறு கற்பூர ஆரத்தியைக் காட்டினார் பெரியவா.

கூடி இருக்கிற அனைவரும் காண்பதற்கு அரிய இந்தக் காட்சியைக் கண்டு தரிசித்தனர். அந்த இடமே பரமேஸ்வரனின் தேவலோகமாகக் காட்சியளித்தது. ‘சம்போ மகாதேவா’ என்று முழங்கி கன்னத்தில் போட்டுக்கொண்டு பரவசப்பட்டுப் போனார்கள் பக்தர்கள்.

ஸ்தபதியை ஜாடை காண்பித்துத் தன் அருகே வருமாறு சொன்னார் காஞ்சி முனிவர்.

‘‘பெரியவா...’’ என்று வாய் பொத்தி, பவ்யமாக அருகே வந்து நின்றார் ஸ்தபதி.

‘‘இப்ப அசைச்சுப் பாருங்கோ...’’ என்று பெரியவா திருவாய் மலர்ந்த மறுகணம், பள்ளத்துக்குள் இருந்த ஒரு சிலர் மீண்டும் லிங்கத் திருமேனியை அசைத்துப் பார்த்தார்கள்.

என்ன ஆச்சரியம்!

கல்லால் ஆன அந்த சிவலிங்கத் திருமேனி, ஒரு தக்கை போல் அசைந்து கொடுத்தது.

பணியாளர்களுக்கு வியப்பான வியப்பு ... ‘இந்த சாமீ (பெரியவா) வந்த பிறகு எப்படி இந்த அதிசயம் நடக்கிறது’ என்று!

பள்ளத்துக்குள் இருந்த நாலைந்து பேர் மட்டும் உற்சாகத்துடன் அந்த சிவலிங்கத் திருமேனியை ஒரு குழந்தையைத் தூக்கி வருவதுபோல் மேலே கொண்டு வந்து வைத்தார்கள்.

ஒரு கணம் கண்களை மூடி சிவலிங்கத் திருமேனியை வணங்கினார் மகான்.

வீடு எதற்காகத் தோண்டப்படுகிறது, மகா பெரியவா எதற்காக இந்தப் பழைய வீட்டுக்குள் வந்திருக்கிறார் என்பது தெரியாமல் கூடி நின்ற ஒட்டுமொத்தக் கூட்டமும், அங்கிருந்து எடுக்கப்பட்ட அற்புதமான பழைய சிவலிங்கத் திருமேனியைப் பார்த்தது. பிரமித்தது.

‘‘நமசிவாய... நமசிவாய...சம்போ மகாதேவா.. ஹரஹர மகாதேவா..’’ என்கிற நாமங்களை உணர்ச்சிப் பெருக்குடன் கூறியபடியே பக்தர்கள் வணங்கினர். இவை அனைத்தும் சாத்தியமாவதற்கு உதவிய மகா பெரியவாளையும் பார்த்து, ‘‘சர்வேஸ்வரா... ஆபத்பாந்தவா... அநாதரட்சகா...’’ என்று கன்னத்தில் போட்டுக் கொண்டு அவருக்கு நமஸ்காரம் செய்தார்கள்.

யானை வந்தும் அசைந்து கொடுக்காத சிவலிங்கத் திருமேனி, மகா பெரியவாளின் வரவுக்குக் கட்டுப்பட்டு அசைந்து கொடுத்திருக்கிறது!

பலரும் தன்னைத் தூக்கிக் கொஞ்சுவதற்குப் போட்டி போடுகிறார்கள் என்கிற நிலையில் ஒரு கைக்குழந்தையின் முகத்தில் பயம் தென்படும்... எவரிடமும் போகக் கூடாது என்று முரண்டு பிடிக்கும். அந்தக் கூட்டத்தில் கண்களை உருட்டி உருட்டித் தன் தாயை மட்டும் தேடும் அல்லவா? அப்போது தாயின் முகத்தை குழந்தை அடையாளம் கண்டு கொண்டவுடன், கூடி இருக்கிற அனைவரையும் உதறித் தள்ளி விட்டு, தாயை நோக்கித் தாவும் அல்லவா...

மகா பெரியவா
மகா பெரியவாஓவியம்: A.P.ஸ்ரீதர்

அதுபோல் யாருக்கும் வளைந்து கொடுக்காத அந்த சர்வேஸ்வரனின் லிங்கத் திருமேனி, எதற்கும் மசியவில்லை. கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை. ஆனால், மகானைப் பார்த்ததும் மலர்ச்சியாக மேலே புறப்பட்டு வந்து விட்டாரே!

‘‘வேலையை இதோட பூர்த்தி பண்ணிக்கலாமா பெரியவா?’’ என்று கேட்ட ஸ்தபதியைப் பார்த்து மகா பெரியவா சொன்னார்: ‘‘வேலை பூர்த்தி ஆகலை. இன்னும் இருக்கு. மேலும் தோண்டுங்கோ.’’

ஸ்தபதிக்குக் குழப்பம். ‘சிவலிங்கம் கிடைத்தாயிற்றே! இன்னும் எதற்குத் தோண்டச் சொல்கிறார். சரி, அவர் சொன்னால், ஒரு அர்த்தம் இருக்கும்’ என்று தீர்மானித்து, தன் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

மகானும் புறப்படவில்லை. துர்நாற்றமும் அழுக்கும் கலந்து காணப்படும் அந்த வீட்டின் ஒரு மூலையில் அந்தப் பரப்பிரம்மம் தரையில் அமர முற்பட்டது. ஓடிவந்த மடத்துச் சிப்பந்தி ஒருவர் வஸ்திரத்தைக் கீழே விரித்தார். பெரியவா அமர்ந்தார்.

ஸ்தபதியின் மேற்பார்வையில் தோண்டும் பணி மும்முரமாக நடந்தது. என்னதான் இங்கே நடக்கிறது என்று வேடிக்கைப் பார்ப்பதற்காகக் கூடிய கூட்டம் இப்போது பக்தி சிரத்தையுடன் நடப்பனவற்றை பார்க்கத் துவங்கியது.

ஒரு பதினைந்து நிமிடம் போயிருக்கும்.

குழிக்குள் மேலும் ஒரு இரண்டடி தோண்டி முடித்த பணியாளர்கள், மேலே அண்ணாந்து பார்த்து ஸ்தபதியை அழைக்கும் விதமாகக் குரல் கொடுத்தார்கள்.

ஓடிவந்த ஸ்தபதி குழிக்குள் எட்டிப் பார்த்து, ‘‘என்ன?’’ என்றார்.

‘‘இங்கே ஒரு இடத்துல நங்குன்னு ஒரு சத்தம் கேட்டுது. பயந்து போயி ஆயுதத்தை அப்பால போட்டுட்டோம். என்ன பண்றது?’’ உள்ளிருந்து ஒருவர் கேட்டார்.

‘‘மெள்ள மண்ணைக் கையால தள்ளிப் பாருங்க...’’ என்ற ஸ்தபதியும் அங்கேயே குத்துக்கால் போட்டு உட்கார்ந்து உள்ளே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஈரப் பிசுபிசுப்புடன் காணப்படுகிற மணலை அப்புறப்படுத்திய பணியாளர்கள் அசந்து போனார்கள்.

இன்னொரு விக்கிரகம்.

அனந்தசயனத்தில் இருக்கிற ரங்கநாதர் விக்கிரகம்.

கண்களில் பிரகாசம் மின்ன எழுந்த ஸ்தபதி, மகா பெரியவாளிடம் போனார்.‘‘பெரியவா.... உள்ளே ஒரு ரங்கநாதர் விக்கிரகம் கிடைச்சிருக்கு.’’

பெரியவா புன்னகைத்தார். அவருக்குத் தெரியாததா?

ஹரியும், ஹரனும் ஒரே இடத்தில் இருந்து கிடைத்

திருக்கிறார்கள். எத்தனை காலம் இதற்குள் புதைந்து கிடந்தார்களோ?!

அங்கே கூடி இருந்தவர்கள் அத்தனை பேருக்கும்

ஆச்சரியம். இந்த வீட்டுக்குள் சிவனும், பெருமாளும்

புதைந்து கிடக்கிறார்கள் என்பது மகா பெரியவாளுக்

குத்தான் தெரியும்!

எந்தச் சலனமும் இல்லாமல் அமர்ந்திருக்கிற மகா பெரியவாளைப் பார்த்து வணங்கினார்கள்.

பக்திப் பெருக்கில் விழிகளில் இருந்து பெருகும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை ஸ்தபதிக்கு. கன்னங்களில் உருண்டு விழுந்து கொண்டே இருந்தது.

முக்காலமும் உணர்ந்த மாமுனிவர் அமர்ந்திருக்கிற இடத்துக்கு வந்தார். சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்.

‘‘பெரியவா... பெரியவா...’’ என்று தேம்ப ஆரம்பித்

தவருக்கு மேற்கொண்டு பேச முடியவில்லை.

அபய ஹஸ்தத்தால் அவரை ஆறுதல்படுத்தினார் மகான்.

பிறகு, ‘‘என்னை மன்னிச்சேன்னு ஒரு வார்த்தை சொல்

லுங்கோ பெரியவா... நான் பெரிய பாவி ஆயிட்டேன். இந்த

இடத்தைத் தோண்டறது கஷ்டம்... ‘டாய்லட்’ இருந்த இடம்னு

முதல்ல ஓடி வந்து உங்ககிட்ட சொன்னேன். ‘பரவால்லை, சகிச்சுண்டு தோண்டு’னு எனக்கு உத்தரவு குடுத்தேள்... ஆனா, இத்தனை அசிங்கத்தையும் தாங்கிண்டு இந்த சிவனும் பெருமாளும் எத்தனை வருஷங்களா உள்ளே புதைஞ்சு இருந்தாளோன்னு நினைக்கும்போது உடம்பு

பதறுது பெரியவா... இத்தனை வருஷமா இந்த தெய்வங்

களுக்கு நாம எதுவும் செய்யாம போயிட்டோமே பெரியவா...

அதை எல்லாம் தாண்டி மகானான தாங்களும் இத்தனையையும் சகிச்சுண்டு வந்து ‘தேமே’ன்னு ஒரு மூலைல உக்காந்துருக்கேளே...

உங்களை விடவும், அந்தத் தெய்வங்களை விடவும் நாங்கள் எல்லாம் எம்மாத்திரம் பெரியவா... எங்களை மன்னிச்சிடுங்கோ... மன்னிச்சிடுங்கோ’’என்று தரையில் புரண்டு குரல் தேம்ப தழுதழுத்தார் ஸ்தபதி.

அவரைப் பார்த்து ஆசிர்வதிக்கும் விதமாகத் தன் வலக் கரத்தை உயர்த்தி அபயம் காட்டி புன்னகைத்தார் மாமுனிவர். பிறகு சொன்னார்: ‘‘இந்த இடத்துலதான் ஒரு காலத்துல சிவா விஷ்ணு கோயில் இருந்தது. இந்த சிவனும் ரங்கநாதரும் இங்கேதான் கோயில் கொண்டிருந்தா. நடுப்பற கொஞ்ச காலம் ஏனோ, நமக்கு தரிசனம் தரலை. இப்ப திரும்பக் கிடைச்சிருக்கா. அனந்தபத்மநாபன், ஈஸ்வரன் ரெண்டு பேரும் கிடைச்சிருக்கா. அதனால இந்த சிவனுக்கு ‘அனந்தபத்மநாபேஸ்வரர்’னு திருநாமம் வைப்போம். மெள்ள ஒரு கோயிலையும் இங்கே கட்டுவோம். எதிர்காலத்துல எல்லாரும் வந்து தரிசனம் பண்ணுங்கோ’’ என்று அருளிய மகா பெரியவா அங்கிருந்து எழுந்து மடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

பின்னாட்களில் அங்கேயே ஒரு சிவா விஷ்ணு ஆலயம் எழும்பியது. இன்றைக்கும் அந்த ஆலயத்தை ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு அருகில் இருக்கும் லிங்கப்பன் தெருவில் தரிசிக்கலாம்.

மகா பெரியவா கண்டுபிடித்துச் சொன்ன எத்தனையோ ஆலயங்களுள் இதுவும் ஒன்று!

(ஆனந்தம் தொடரும்)

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க:

மகா பெரியவா
மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 27

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in