தனது பள்ளி தோழியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து நகையைக் கொள்ளையடித்த வாலிபர் மற்றும் பெண் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஷஷிகாந்த்(28). இவர் டெலிவெரி ஏஜென்டாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அஜ்மிரா சிரிஷா என்ற இளம்பெண்ணுடன் ஷஷிகாந்திற்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இவர்கள் இருவரும் சேர்ந்து வாழத் தொடங்கினர். இந்த நிலையில் தனது பள்ளி தோழி அக்குனுரி சுப்ரியா(27) என்பவரை ஷஷிகாந்த் சந்தித்து நீண்ட நாள் கழித்துப் பேசியுள்ளார். இதன் பின் இவர்கள் நட்பு தொடர்ந்துள்ளது. இதனால் ஷஷிகாந்துக்கும், அஜ்மிராவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
தங்களின் நிதிப்பிரச்சினையைத் தீர்க்க ஒரு மாதத்திற்கு முன்பு சுப்ரியாவின் வீட்டிற்கு ஷஷிகாந்த்தும், சிரிஷாவும் சென்றுள்ளனர். அப்போது சுப்ரியா வீட்டில் தங்கநகைகள் இருந்ததை அவர்கள் பார்த்தனர். இந்த நகைகளைக் கொள்ளையடிப்பதுடன் சுப்ரியாவை கொலை செய்ய வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்கின்றனர்.
இந்த நிலையில், மார்ச் 23-ம் தேதி சுப்ரியாவின் வீட்டிற்கு ஷஷிகாந்தும், சிரிஷாவும் சென்றனர். அப்போது சுப்ரியாவின் கணவர் வேலைக்காக வாரங்கல் சென்றது தெரிய வந்தது. சுப்ரியா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது தான் ஷஷிகாந்த், சிரிஷா அங்கு சென்றுள்ளார். அவர்களுக்கு தேநீர் தயாரிப்பதற்காக சமையல் அறைக்கு சுப்ரியா சென்றார். அவரை ஷஷிகாந்த்தும், சிரிஷாவும் பின் தொடர்ந்து சென்றனர். சுப்ரியாவின் கால்களை சிரிஷா பிடித்துக் கொள்ள, ஷஷிகாந்த் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். இதன்பின் வீட்டில் இருந்த தங்க நகைகளுடன் இருவரும் தப்பிச் சென்றனர்.
இக்கொலை தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அத்துடன் கொலையாளியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. ஆனாலும், எந்த துப்பும் கிடைக்காமல் போலீஸார் தவித்து வந்தனர்.
இந்நிலையில், ஹைதராபாத்தில் கொள்ளையடிக்கப்பட்ட நகையை விற்பதற்கு ஷஷிகாந்த், சிரிஷா நகைக்கடைக்கு சென்றுள்ளனர். கடைக்காரர் இவர்கள் மீது சந்தேகமடைந்தார். உடனடியாக அவர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். இதன் பேரில், போலீஸார் ஷஷிகாந்த், சிரிஷாவைப் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் தான் சுப்ரியாவை கொலை செய்து நகைகளைக் கொள்ளையடித்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் நேற்று மாலை கைது செய்தனர். அத்துடன் நகைகளைப் பறிமுதல் செய்து அவர்கள் இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகைக்காக இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஹைதராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது வழக்கு... கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்!
பரபரப்பு... பாஜக எம்எல்ஏவை கத்தியால் குத்திக் கொல்ல முயற்சி!
அதிர்ச்சி... அருணாச்சலப் பிரதேசத்தின் 30 இடங்களின் பெயரை மாற்றி அறிவித்தது சீனா!
கிளாமர் ஒன்றும் கீழ்த்தரம் இல்லை; கொண்டாட்டம் தான்... மனம் திறந்த தமன்னா!
நடத்தையில் சந்தேகம்... மனைவி, 2 குழந்தைகளைக் கொன்று 3 நாட்களாக சடலங்களுடன் வசித்த வாலிபர்!