கரூரில் கிணற்றில் குளிக்கச் சென்ற மாணவர்கள் மூன்று பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் ஆண்டாங்கோவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் மகன் அஸ்வின் (12), ஸ்ரீதர் மகன் விஷ்ணு (13), இளங்கோ மகன் மாரிமுத்து (11). நண்பர்களான இவர்கள் மூவரும் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் மூவரும் நேற்று காலை வீட்டை விட்டு விளையாட சென்றுள்ளனர். சக நண்பர்களுடன் விளையாடிய பின்னர் மாலையில் அருகில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். இவர்களுடன் விளையாடிய மாணவர்கள் சிலர் குளிக்கச் செல்லாமல் வீடு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில் இரவு 9 மணியாகியும் இவர்கள் வீடு திரும்பாததால், தங்களது மகன்களை காணாத பெற்றோர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். இதைத் தொடர்ந்து கரூர் நகர காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது அஸ்வின், விஷ்ணு, மாரிமுத்து ஆகிய மூவரும் அருகில் உள்ள ரவிச்சந்திரன் என்பவரது கிணற்றுக்கு குளிக்கச் சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து கிணற்றுப் பகுதியில் சென்று பார்த்தபோது மூன்று மாணவர்களின் உடைகள் மற்றும் காலணிகள் கிணற்றின் அருகே இருந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மற்றும் போலீஸார் கரூர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளனர். அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி தண்ணீருக்கு அடியில் கிடந்த மூன்று மாணவர்களின் சடலங்களையும் மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் வாசிக்கலாமே...
முடிதிருத்தும் கடையில் திடீரென நுழைந்த ராகுல் காந்தி; திக்குமுக்காடிப் போன ஊழியர்!
மும்பை பேனர் விழுந்த விபத்து.... பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு... இழப்பீடு அறிவிப்பு!
டெல்லியில் இருந்து சைக்கிளில் பயணம்... சேப்பாக்கத்தில் வெளியே கூடாரம்... தோனி ரசிகரின் வெறித்தனம்!
பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.80 லட்சம் பறிமுதல்!