முதல்வருடன் புகைப்படம்; முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஸ்கெட்ச்... ரூ.3 ஆயிரம் கோடி மோசடி செய்த கும்பல்!

டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் மனு
டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் மனு

இலங்கைக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்வதாக கூறி முன்னாள் ராணுவ வீரர்களிடம் ரூ. 3 ஆயிரம் கோடி மோசடி செய்யப்பட்ட குற்றச்சாட்டு பரபரப்பை கிளப்பியுள்ளது. முதல்வருடன் எடுத்து கொண்ட படத்தை வைத்து தங்களை ஏமாற்றியதாக பாதிக்கப்பட்டவர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகாரளித்துள்ளனர்.

ஈரோடு மேட்டூர் சாலையில் யுனிக் எக்ஸ்போர்ட் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் இயக்குநராக நவீன்‌குமார் என்பவர் பதவி வகித்து வந்தார். தமிழகம் முழுவதும் இந்நிறுவனத்தின் கிளைகள் செயல்பட்டு வந்துள்ளது.

மேலும் இந்த நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.9 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1.80 லட்சமும், ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.75 ஆயிரம் வீதம் ரூ.7.50 லட்சமும், ரூ.25 லட்சம் முதலீடு செய்தால் 5 வருடங்களில் 4 தவணையாக ரூ.83 லட்சமும் வழங்கப்படும் என அந்த நிறுவனம் கவர்ச்சி விளம்பரங்களை வெளியிட்டது.

பதாகை
பதாகை

அதுமட்டுமின்றி முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்காக மட்டுமே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டது. இதை நம்பி ஈரோடு, மதுரை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பணியில் உள்ள ராணுவ வீரர்கள் ரூ.1,200 கோடி முதலீடு செய்தாக கூறப்படுகிறது . மேலும் பொதுமக்கள் சிலரும் இந்நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.

முதலீடு செய்த முதல் 2 மாதங்களுக்கு மட்டும் பணத்தை திருப்பிக் கொடுத்த யுனிக் எக்ஸ்போர்ட் நிறுவனம் அதன் பிறகு முதலீட்டாளர்களுக்கு பணத்தை வழங்கவில்லை. பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் பணத்தை கேட்டு நிறுவனத்திற்கு சென்ற போது நிறுவனத்தை மூடி விட்டு இயக்குநர்கள் தலைமறைவானது தெரிய வந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் இது குறித்து ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான நவீன்குமாரை கடந்த 2023 ஆம் ஆண்டு கைது செய்தனர். ஆனால் இந்த மோசடியில் தொடர்புடைய இன்னும் பலர் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்கள் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி பாதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இன்று சென்னையில் உள்ள காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

முதல்வருடன் இருக்கும் புகைப்படம்
முதல்வருடன் இருக்கும் புகைப்படம்

பாதிக்கப்பட்டவர்கள் கையில் பதாகைகளை ஏந்தியபடி ஓன்று கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள்தங்களை ஏமாற்றிய வினோத் தேவராஜ் என்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் எடுத்த போட்டோவை பெரிய பேனராக அச்சிட்டு கொண்டு வந்தனர்..

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் ராணுவ வீரர் ரவி, “2 ஆண்டுகளாக நாங்கள் ஏமாந்த பணத்திற்காக அலைந்து கொண்டிருக்கிறோம். யுனிக் எக்ஸ்போர்ட் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவர் முத்துச் செல்வன். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவரை நம்பித்தான் பல முன்னாள் ராணுவ வீரர்கள் பணத்தை முதலீடு செய்தனர். இலங்கை, மொரீசியஸ், நாட்டிற்கு வெங்காயம் ஏற்றுமதி செய்கிறோம் என்று கூறி தங்களை நம்ப வைத்து சுமார் ரூ. 3 ஆயிரம் கோடிக்கு மேல் ஏமாற்றி விட்டனர். போலீஸார் இயக்குநர் நவீன் குமாரை மட்டும் கைது செய்த நிலையில், தற்போது அவரும் சிறையில் இருந்து வெளியே வந்து விட்டார். மோசடி செய்த பணம் பினாமி மூலம் வெளிநாட்டிற்கு சென்று விட்டது. முன்னாள் ராணுவ வீரர்களை மையமாக வைத்து இந்த மோசடி அரங்கேறியுள்ளது" என வேதனையோடு தெரிவித்தார்.

இவரை தொடர்ந்து பேசிய கோமதி, “ முன்னாள் ராணுவ வீரர்கள் முதலீடு செய்ததை காண்பித்து யுனிக் எக்ஸ்போர்ட்' நிறுவனத்தினர் பொதுமக்களையும் ஏமாற்றி உள்ளனர். நாங்கள் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள், அதிக பணம் கிடைக்கும் என்ற ஆசையில் தான் பணத்தை முதலீடு செய்தோம். ராணுவ வீரர்களே பணத்தை முதலீடு செய்துள்ளார்கள் என்ற நம்பிக்கையில் பணத்தை முதலீடு செய்து தற்போது ஏமாந்துள்ளோம்.பணத்தை முதலீடு செய்த 6 மாதம் பணம் சரியாக வந்தது. அதன் பிறகு ஏமாற்றி விட்டார்கள்” என கண்ணீர் மல்க கூறினார் .

டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்த பின்னர் பேசிய அவர்கள், “அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான வினோத் தேவராஜ் என்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் எடுத்த படத்தை வைத்து ஏமாற்றி விட்டார். கொடுத்த பணத்தை திருப்பி கேட்டால் துப்பாக்கியை காட்டி மிரட்டுகிறார். இந்த மோசடி வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் முறையாக வழக்கை விசாரிக்கவில்லை. அதனால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். யுனிக் எக்ஸ்போர்ட்' நிறுவனத்தின் இயக்குநர்களான முன்னாள் ராணுவ வீரர் முத்துச்செல்வன், பிராங்கிளின், பிரபு. நீலமேகம், பெருமாள் உள்ளிட்ட பலர் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களை காவல்துறை இதுவரை கைது செய்யவில்லை” என்று தெரிவித்தனர்

இதையும் வாசிக்கலாமே...

அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்... அகவிலைப்படி 25% அதிரடியாக உயர்வு!

இந்து கோயில் கட்டியதால் தான் துபாய் வெள்ளத்தில் மிதக்கிறது... பாகிஸ்தானியர் சர்ச்சை பேச்சு!

கள்ளத்துப்பாக்கி... ரத்தம் படிந்த கோடாரி... கோடநாடு வழக்கில் அதிமுக பிரமுகருக்கு சிக்கல்!

கும்பகோணத்தில் பரபரப்பு... 10 அடி பள்ளத்தில் சிக்கிய தேர் சக்கரம்... மீட்பு பணிகள் தீவிரம்!

ஷாக்... ஆணவப் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in