எனக்கும் மனைவிக்கும் கேன்சர்; கொஞ்சம் காலம் சேர்ந்து வாழ ஜாமீன் கொடுங்க... நீதிமன்றத்தில் முறையிட்ட நரேஷ் கோயல்!

ஜெட் ஏர்வேஸ் நிறுவன தலைவர் நரேஷ் கோயல்
ஜெட் ஏர்வேஸ் நிறுவன தலைவர் நரேஷ் கோயல்

தனது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணத்திற்கான நாட்களை எண்ணி வருவதால், அவரின் கடைசி காலத்தில் உடனிருக்க ஜாமீன் வழங்க வேண்டும் என ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனர் நரேஷ் கோயல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனர் நரேஷ் கோயல் கனரா வங்கியில் பெற்ற 538.62 கோடி பணத்தை முறைகேடாக செலவிட்டதாக கூறி கடந்த 2023 செப்டம்பரில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவரது மனைவி அனிதா கோயலும் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இருப்பினும் அவரது வயது மற்றும் உடல் நிலையை கருத்தில் கொண்டு அன்றைய தினமே அவருக்கு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. நரேஷ் கோயல் தொடர்ந்து சிறையில் இருந்தார்.

மும்பை உயர்நீதிமன்றம்
மும்பை உயர்நீதிமன்றம்

சமீபத்தில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது அவருக்கும் புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. எனவே தன்னை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என அவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதன் அடிப்படையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அமலாக்கத்துறை பாதுகாப்புடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு தன்னை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி மகாராஷ்டிரா உயர் நீதிமன்றத்தில் நரேஷ் கோயல் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரை ஜாமீனில் விட அமலாக்கத்துறை கடுமையாக எதிர்த்ததால் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை

இந்த நிலையில் தற்போது புதிய மனு ஒன்றை உயர் நீதிமன்றத்தில் நரேஷ் கோயலின் சார்பில் அவரது வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே உள்ளிட்டோர் தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு நீதிபதி என்.ஜே.ஜமாதார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ”நரேஷ் கோயிலின் மனைவி அனிதா கோயல் புற்றுநோய் காரணமாக தனது நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். வீட்டில் சிகிச்சையில் உள்ள அவருக்கு அருகில் இருக்க அனுமதிக்கும் வகையில் நரேஷ் கோயலை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் இதற்கு நீதிமன்றம் அனுமதியளிக்க வேண்டும்” என அவர்கள் வாதிட்டனர்.

நரேஷ் கோயல், அனிதா கோயல்
நரேஷ் கோயல், அனிதா கோயல்

இதற்கு அமலாக்கத்துறை சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ”தற்போது நரேஷ் கோயல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் அளவுக்கு இல்லை. தேவை ஏற்பட்டால் அவருக்கு கூடுதல் மருத்துவ உதவிகள் செய்யத் தயாராக இருக்கிறோம். அவர் ஜாமீனும் கேட்கிறார். உடல்நிலையும் சீராக இல்லை என்கிறார். எனவே அவரை ஜாமீனில் விடுதலை செய்யப்படக்கூடாது.” என வாதிட்டது அமலாக்கத்துறை.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ”மே 6-ம் தேதி நரேஷ் கோயல் மருத்துவமனையில் இருந்து சிறைக்கு திரும்பும் போது அவரது ஜாமீன் மனு குறித்து முடிவெடுக்கப்படும்” எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தார்.

இதையும் வாசிக்கலாமே...

அயோத்தி ராமர் கோயிலுக்கு வரும் 200 பாகிஸ்தான் யாத்ரீகர்கள்... வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்!

நயன்தாரா, சமந்தாவுக்கு போட்டியாக களமிறங்கும் சினேகன் மனைவி; கலாய்க்கும் ரசிகர்கள்!

“நியாயமா ஆண்டவரே...”  கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு புகார்!

“பயந்து ஓடாதீங்க...” ரேபரேலி விவகாரத்தில் ராகுலை சீண்டிய பிரதமர் மோடி!

செல்போன் லைட்டில் அறுவை சிகிச்சை... தாயும் சேயும் உயிரிழந்த சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in