தாவூத் இப்ராஹிம்
தாவூத் இப்ராஹிம்

தாவூத் இப்ராஹிம் எனது மாமா... ஆன்லைன் மோசடி வலையில் நூலிழையில் தப்பியவரின் அடடே அனுபவம்!

டிஜிட்டல் இந்தியாவில் மோசடிகளும் டிஜிட்டல் வடிவிலேயே வலைவிரிக்கின்றன. அப்படியொரு ஆன்லைன் மோசடியின் வலைவிரிப்பு குறித்தான சமூக ஊடக பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சவுரவ் தாஸ் என்ற எக்ஸ் தள பயனர் ஒருவர், சைபர் கிரிமினல்களுடனான தனது உரையாடல் குறித்தும், கடைசி நேரத்தில் அதிலிருந்து விடுபட்டது தொடர்பாகவும், எதிர்கொண்ட அனுபவங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். விழிப்புணர்வின் பெயரால் அவரது பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

சவுரவ் தாஸை முதலில் ஒரு ’ஐவிஆர்எஸ்’ அழைப்பு தொடர்பு கொள்கிறது. பதிவு செய்யப்பட்ட குரல் எதிர்முனையில் இயந்திரத்தனமாய் வழிநடத்துகிறது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ’ட்ராய்’ பெயரிலான இந்த தானியங்கி அழைப்பு, தொலைத்தொடர்பு துறை அதிகாரியான ஒருவருக்கு ஃபார்வேர்ட் செய்கிறது. அவர், ‘உங்களுடைய எண் மீது சட்டவிரோத விளம்பரம் மற்றும் துன்புறுத்தல் புகார் பதிவாகி உள்ளது’ என விவரிக்கிறார்.

கூடவே மும்பை போலீஸார் வசம் அழைப்பு மாற்றப்படுவதாக தெரிவிக்கிறார். அதன்படி அந்தேரி காவல் நிலையத்தின் பெயரில் ஒரு அதிகாரி விசாரணையை தொடர்கிறார். வீடியோ அழைப்பில் போலீஸ் சீருடையில் காட்சியளிக்கும் போலீஸ் அதிகாரியின் தோரணையும், விசாரிப்பும் நம்பும்படியாகவே உள்ளன. அவரது சிறப்பான ஆங்கில உச்சரிப்பும் அந்த நம்பிக்கையை கூட்டுகிறது. அவரிடமிருந்து தலைமைக் காவலர் என்று அறிமுகமாகும் இன்னொரு போலீஸ் காரர் உரையாடலை தொடர்கிறார். ஆனால் அவரது பேச்சில் மராத்தியர்களுக்கே உரிய சாயல் இல்லாததை அடுத்து சவுரவ் தாஸ் முதல் சந்தேகம் கொள்கிறார்.

அவர்கள் அனைவரின் பேச்சும் சுற்றிவளைத்து, மோசடி வழக்கு ஒன்றில் சவுரஸ் தாஸ் சிக்கியிருப்பதாகவும், அதிலிருந்து அவர் விடுபடுவதற்காக பெருந்தொகை கோரவும் திட்டமிட்டு இருப்பதை சவுரவ் தாஸ் மோப்பமிடுகிறார். இந்த மோசடி வலை அழைப்புகளை சோதிக்க, தன் பங்குக்கு விளையாட்டு காட்டவும் முன்வருகிறார்.

அதன்படி, மும்பை நிழலுலக பயங்கரவாதியும், தற்போது பாகிஸ்தானில் பதுங்கி இருப்பவருமான தாவூத் இப்ராஹிம் பெயரை பயன்படுத்த முடிவு செய்கிறார். அதன்படி ‘தாவூத் இப்ராஹிம்’ தனது மாமா என்று சவுரவ் தாஸ் பேச்சுவாக்கில் தெரிவிக்கிறார். அதனை ஒருமுறைக்கு பலமுறையாக உறுதிசெய்துகொள்ளும் மறுமுனை, அதன் பின்னர் சுரத்திழந்து அழைப்பைத் துண்டிக்கிறார்கள்.

பிற்பாடு அவர்களிடமிருந்து அழைப்பு ஏதும் வரவில்லை. இப்படி சைபர் கிரிமினல்கள் வசம் தான் சிக்கி மீண்ட அனுபவங்களை சுவாரசியம் குறையாது எக்ஸ் தளத்தில் சவுரவ் தாஸ் பதிவிட்டிருக்கிறார். மேலும் மர்ம நபர்களுடனான உரையாடலில் இடம்பெற்ற அலைபேசி எண்கள், வீடியோ அழைப்பின் ஸ்க்ரீன்ஷாட் விவரங்கள் ஆகியவற்றை, அவர் எக்ஸ் தளம் வாயிலாகவே மும்பை போலீஸார் பார்வைக்கு தெரிவித்தார்.

ஆன்லைன் மோசடி
ஆன்லைன் மோசடி

அப்போதுதான் இதுபோன்ற மோசடி கும்பலின் வலையில் சிக்கியது சவுரவ் தாஸ் மட்டுமல்ல என்பது வெளிப்படுகிறது. ஆன்லைன் மோசடி பேர்வழிகளின் வலையில் மேலும் பல பயனர்கள் சிக்கி மீண்டது குறித்தும், அவை குறித்தான அனுபவங்களையும், ஆதாரங்களையும் அதே உரையாடலின் இழையில் பதிவிட்டு வருகின்றனர்.

ஆன்லைன் பரிவர்த்தனைகளில் இந்தியா வியப்புக்குரிய சாதனைகளை அடைந்து வருகிறது. அனுகூலங்களுக்கு இணையாக அவற்றில் பாதகங்களும் உண்டு என்பது இந்த பதிவுகளின் வாயிலாக வெளிப்பட்டிருக்கிறது. அதிலும் நுனிநாக்கு ஆங்கிலமும், அதற்கேற்ப விஷய ஞானமுமாக, மோசடிப் பேர்வழிகள் எடுத்திருக்கும் நவீன அவதாரமும் பொதுமக்கள் விழிப்புணர்வுக்கானவை.

இதையும் வாசிக்கலாமே...

டி20 உலகக்கோப்பைக்கான பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் அறிவிப்பு... கொண்டாடும் ரசிகர்கள்!

துரத்தும் தோல்விகள்... பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்று 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்.... மஞ்சள் எச்சரிக்கையால் மக்கள் அதிர்ச்சி!

சவுதி மன்னருக்கு திடீர் உடல்நலக்குறைவு... இப்போது எப்படியிருக்கிறார்?

திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளை மீது ஆசிட் வீசிய இளம்பெண்... அதிர்ச்சி வீடியோ!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in