ஏடிஎம் கண்காணிப்பு கேமரா முன்னிலையில் கர்ப்பிணி மனைவியை சுட்டுக்கொன்ற சந்தேகக் கணவன்; வீட்டில் உயிர் தப்பிய தம்பி

ஏடிஎம் கேபினில் கணவனால் சுட்டுக்கொல்லப்பட்ட ஆலியா
ஏடிஎம் கேபினில் கணவனால் சுட்டுக்கொல்லப்பட்ட ஆலியா

கர்ப்பிணி மனைவியை ஏடிஎம் அறையில் வைத்து சுட்டுக்கொன்ற கணவன், வீட்டில் தனது தம்பி மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பியோடி உள்ளார்.

உத்தரபிரதேசத்தில் இன்று காலை நடந்த கொலை மற்றும் கொலை முயற்சி சம்பவங்கள் மாநிலத்தை உலுக்கி உள்ளன. சஹரன்பூரில் மனைவி ஆலியா உடன் வசித்து வந்தவர் ஜீஷான். இவர் இன்று காலை 9 மணியளவில் மண்டி பகுதியில் இருக்கும் தனியார் வங்கி ஏடிஎம் அறைக்கு சென்றவர், அங்கே ஏடிஎம்-ல் பணம் எடுத்துக்கொண்டிருந்த மனைவி ஆலியா மீது பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே ஆலியா இறந்தார்.

அதே வேகத்தில் வீட்டுக்குச் சென்ற ஜீஷான், அங்கிருந்த தனது தம்பி மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினார். துப்பாக்கியால் சுட்டதில் தம்பி இறந்து விட்டதாக நம்பிய ஜீஷான் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார். ஆனால் ஜீஷானின் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த அவருடைய தம்பி, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்க நிலையில், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அபாய கட்டத்தை தாண்டியுள்ளார்.

போலீஸ் விசாரணையில் ஜீஷான் குடும்பத்தில் நிகழ்ந்த குழப்பம் மற்றும் தகராறுகளே இன்றைய தினத்தின் இரட்டை துப்பாக்கிச் சூடுக்கு காரணமானதாக தெரிய வந்துள்ளது. மனைவி ஆலியா அண்மையில்தான் தனது கர்ப்பத்தை உறுதி செய்திருந்தார். இதற்கு மகிழ்ச்சி அடையாத ஜீஷான், மனைவி மீது சந்தேகம் கொண்டார். மனைவி வயிற்றில் வளரும் குழந்தை தன்னுடையதல்ல என்றும் தனது தம்பியுடையது என்றும் அவர் சந்தேகம் அடைந்திருக்கிறார். இந்த சந்தேகம் பெரும் கொந்தளிப்பாக வெடித்ததில், தனது மனைவி மற்றும் தம்பியை கொல்ல ஜீஷான் முடிவு செய்திருக்கிறார்.

அதன்படி துப்பாக்கியுடன் மனைவி ஆலியாவை தேடியவர், அவர் ஏடிஎம்-ல் இருப்பதாக தெரிவித்ததும், அங்கே விரைந்து சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். தொடர்ந்து அதே வேகத்தில் வீட்டுக்குச் சென்று தனது தம்பி மீதும் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடினார். ஏடிஎம்-ல் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர்.

ஜீஷான் தனது கர்ப்பிணி மனைவியை மிக அருகில் நின்று துப்பாக்கியால் சுட்ட காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜீஷான் துப்பாக்கிச் சூடு நடத்தியதன் பின்னணியில், அவரது சந்தேக எண்ணமே காரணம் என்பதை போலீஸார் உறுதி செய்துள்ளனர். ஆனால், ஆலியா கர்ப்பவதியா என்பதை பிரேத பரிசோதனை முடிவில்தான் உறுதிசெய்ய இயலும் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...  

பிரதமர் மோடி வருகை... தமிழக காங்கிரஸ் தலைவருக்கு வீட்டுக் காவல்!

கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்த ஏ.ஆர்.ரஹ்மான்... சந்தனக்கூடு திருவிழாவில் பரபரப்பு!

திமுகவுடன் தொகுதி பங்கீட்டில் இழுபறி...செல்வப்பெருந்தகை டெல்லி பயணம்!

தமிழ்நாடு விவசாயிகளுக்கு குட்நியூஸ்... தானிய ஈட்டுக்கடன் உச்சவரம்பு ரூ.25 லட்சமாக உயர்வு!

தேசிய லோக் தளம் கட்சித் தலைவர் கொலையில் திடீர் திருப்பம்...பாஜக முன்னாள் எம்எல்ஏவுக்குத் தொடர்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in