திமுகவுடன் தொகுதி பங்கீட்டில் இழுபறி...செல்வப்பெருந்தகை டெல்லி பயணம்!

செல்வப் பெருந்தகை
செல்வப் பெருந்தகை

திமுகவுடன்  கூட்டணியை இறுதி செய்வதற்கான ஆலோசனைகளை தலைமையிடம் பெறுவதற்காக  தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை டெல்லி இன்று செல்கிறார்.

ராகுல் காந்தியுடன் செல்வப் பெருந்தகை
ராகுல் காந்தியுடன் செல்வப் பெருந்தகை

பாஜகவை எதிர்கொள்ள இந்திய அளவில் அமைக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் இடம் பெற்றுள்ளது. உத்தரப் பிரதேசம்,டெல்லி,குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அந்தந்த மாநிலத்தில் உள்ள மாநில கட்சிகளுடன் கூட்டணியை இறுதி செய்துள்ளது. ஆந்திரா, தெலங்கானா, கேரளா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தனியாகவே போட்டியிட முடிவு செய்துள்ளது.

இப்படி பல மாநிலங்களில் தொகுதிப் பங்கீடுகள் இறுதி செய்யப்பட்டு விட்டாலும்  தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு உற்ற தோழனாக இருக்கக்கூடிய திமுகவுடன் இன்னும் இறுதி செய்ய முடியவில்லை. இரட்டை இலக்கங்களின் தொகுதிகள் வேண்டும் என்பது காங்கிரஸின் நிலைப்பாடு. ஆனால் ஒற்றை இலக்கத்திற்குள் திமுக முடிக்கப் பார்க்கிறது என்று கூறப்படுகிறது.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

கடந்த 13-ம் தேதியே காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சென்னை வருவதாகவும் அன்றைய தினம்  திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறப்பட்டது. ஆனால் அப்போது அது நடக்கவில்லை. அதற்குக் காரணம் 15 தொகுதிகளை காங்கிரஸ் கேட்டதும், ஏழு தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என்று திமுக கூறியதும் தான். அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை நடப்பதற்கு முன்பு காங்கிரஸ் மாநில தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டார். தற்போது திமுகவுக்கு நெருக்கமானவராக அறியக்கூடிய செல்வப்பெருந்தகை காங்கிரஸ் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் காங்கிரஸ் கட்சிக்கு மிக அதிகபட்சமாக 9 தொகுதிகளை திமுக ஒதுக்க முன்வந்துள்ளது. காங்கிரஸ் மேலிடம் நெருக்கடி கொடுத்தால் அத்துடன் புதுச்சேரி என 10 தொகுதிகளுடன் தொகுதி உடன்பாட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு என்று தெரிகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ கூடுமானவை தமிழ்நாட்டில் பத்தும், அத்துடன் புதுச்சேரியைச் சேர்த்து 11 தொகுதிகளை எதிர்பார்க்கிறது.  

இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ்  தலைவர் செல்வப்பெருந்தகை டெல்லி இன்று செல்கிறார். அங்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி மற்றும் மேலிட பொறுப்பாளர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இந்த சந்திப்புகளில் தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கான தொகுதிகள், தொகுதிப் பங்கீடு கையெழுத்து உள்ளிட்டவை குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் எனக்கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in