ஆன்லைன் மோசடி
ஆன்லைன் மோசடி

‘உங்களது உழைப்பில் சேர்த்த பணத்தை ஏமாற எண் 9-ஐ அழுத்தவும்’ டிஜிட்டல் இந்தியாவை கலக்கும் பகீர் மோசடிகள்

மோசடிகள் பலவிதம். அவற்றில் ஒன்றாக அலைபேசி இணைப்பின் மூலம் தொடர்பு கொண்டு வங்கி இருப்பை வழித்தெடுக்கும் மோசடிகள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. அவற்றிலிருந்து ஏமாறாது இருக்க அதீத விழிப்புணர்வு அவசியமாகிறது.

திருவாளர் பெருமாள் இந்தியாவில் பெரும்பான்மையான மிடில் கிளாஸ் மக்களின் பிரதிநிதிகளில் ஒருவர். அண்மையில் பணியிலிருந்து விஆர்எஸ் பெற்ற பெருமாள், இத்தனை ஆண்டுகளாக உழைத்து சேமித்த தொகையை கொண்டு, சொந்தமாக ஒரு வீடு கட்டத் தயாரானார். அதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தபோது, பெருமாள் அலைபேசியில் அண்மையில் அந்த அழைப்பு வந்தது.

அது ஐவிஆர்எஸ் அடிப்படையிலான அழைப்பு. மறுமுனையில் ’ஃபெட்எக்ஸ்’ பார்சல் நிறுவனத்தில் இருந்து அழைக்கிறோம் என்ற ரோபோ குரல் வழி நடத்தியது. வங்கிகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் என பெரும் நிறுவனங்களுக்கு மட்டுமே இத்தகைய வசதி உண்டென்பதால், பெருமாளும் சிரத்தையுடன் செவிமெடுத்தார். மறுமுனை வழிகாட்டியபடியே குறிப்பிட்ட எண்களை அடுத்தடுத்து அழுத்தி, பார்சல் நிறுவனத்தின் நிர்வாகி என்ற அறிமுகத்தில் வந்தவரிடம் பெருமாள் பேசத்தலைப்பட்டார்.

ஆன்லைன் மோசடி
ஆன்லைன் மோசடி

’உங்களுக்கான வெளிநாட்டு பார்சல் ஒன்று கஸ்டம்ஸில் சிக்கி இருக்கிறது. அதில் ஏதோ சட்டவிரோத பொருள் இருப்பதாக கண்டறிந்திருக்கிறார்கள்’ என்று பார்சல் நிறுவனத்தின் நிர்வாகி குண்டு வீசினார். வெளிநாட்டு பார்சல் என்றதுமே என்ன, யார் என்று விசாரிக்காது சபலத்துடன் பேச்சைத் தொடர்ந்த பெருமாள், அதில் சட்டவிரோதப் பொருள் இருப்பதாக தெரிய வந்ததும் பதற்றமடைந்தார். அதே பதற்றத்தில் அவர் அலைக்கழிந்தபோது அடுத்தடுத்து வேறு விஷயங்களும் நடந்தேறின.

ஃபெட்எக்ஸ் கொரியர் நிறுவனத்திடமிருந்து அடுத்து கஸ்டம்ஸ் விசாரணை அதிகாரி, காவல்துறை உயரதிகாரி என பல விசாரணை அமைப்புகளின் பெயரில் பலரும் கிடுக்குப்பிடி கேள்விகளால் பெருமாளை துளைத்தெடுத்தனர். பெருமாள் குறித்த விவரங்கள் அனைத்தும் அவர்கள் வசமிருந்தன. அதனால் அந்த விசாரணை தொடர்பாக பெருமாளுக்கு சற்றும் சந்தேகம் எழவே இல்லை.

’இறுதியாக உங்கள் கணக்கில் எப்படி இத்தனை லட்சம் தொகை வந்தது? சட்ட விரோத கடத்தல் முறையில் சம்பாதித்ததா..?’ என்றெல்லாம் அதிகாரிகள் விசாரிக்க பெருமாள் வாயடைத்துப் போனார். அவரது வங்கி இருப்பு குறித்தான தொகையை துல்லியமாக அவர்கள் அறிந்து வைத்திருக்கவும், பெருமாளுக்கு அறவே ஐயம் எழவில்லை.

கடைசியாக ‘உங்கள் வங்கியில் இருக்கும் இத்தனை லட்சத்தையும் உடனடியாக வருமான வரித்துறையின் இந்த கணக்குக்கு மாற்றுங்கள். அதனை சரிபார்த்துவிட்டு 4 மணி நேரத்தில் தொகையை திருப்பி செலுத்தி விடுவார்கள். அதற்குள் அந்த தொகை எப்படி சம்பாதித்தது என்பது தொடர்பான விசாரணைக்கு முறைப்படி பதில் சொல்ல வேண்டும்’ என்றும் பலமான உத்தரவு கிடைக்க, வெலவெலத்துப் போயிருந்த பெருமாள் அதன்படியே செய்தார்.

ஆன்லைன் மோசடி
ஆன்லைன் மோசடி

அடுத்த ஒரு மணி நேரத்துக்கு நீண்ட விசாரணையில் அவர்கள் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் ஆவணங்கள் அடிப்படையில் பெருமாள் பதில் தெரிவித்திருந்தார். அதே போன்று அந்த அதிகாரிகள் தெரிவித்த வங்கி கணக்குக்கும் தனது வாழ்நாள் உழைப்பிலான சேமிப்புத்தொகையை மாற்றினார். விசாரணை முடிவில் அவர் மீதான களங்கம் களையப்பட்டதாக அதிகாரிகள் சான்று வழங்கினார்கள். ஒரு சில மணி நேரத்தில் அவரது தொகை மீண்டும் வங்கிக்கணக்குக்கு வரவு வைக்கப்படும் என்றும் அறிவித்தார்கள்.

ஆனால் அந்த தொகை போனது போனதுதான். அதன் பிறகு அவர்கள் அழைத்த எண்கள் அனைத்துமே மொத்தமாக முடங்கிப் போயிருந்தன. தான் நன்றாக ஏமாற்றப்பட்டதை தாமதமாகவே பெருமாள் உணர்ந்தார். சைபர் கிரைம் போலீஸ், வங்கிக் கிளை என சகல திசையிலும் புகார்களை அளித்துவிட்டு கன்னத்தில் கைவைத்து காத்திருக்கிறார். இங்கே ஏமாந்தவரின் பெயர் தவிர்த்து, நடந்த சம்பவம் அனைத்தும் உண்மை.

பெரு நகரங்களில் இது போன்ற பெருமாள்கள் நாள் தோறும் அதிகரித்து வருகின்றனர். குறிப்பாக மத்திய வயதினர் மற்றும் மூத்த குடிமக்கள் அதிலும் வங்கி இருப்பில் கணிசமான லகரங்களை சேமிப்பாக வைத்திருப்பவர்களே மோசடிக்கு இலக்காகிறார்கள். ஃபெட்எக்ஸ் கொரியர் நிறுவனத்தின் பெயரில் நித்தம் நடைபெறும் மோசடிகளில் இதுவும் ஒன்று. இது தொடர்பாக அந்த கொரியர் நிறுவனமும் பொதுவெளியில் பலவகையிலான அறிவுறுத்தல்களை வழங்கிவிட்டது. ஆனால் ஆன்லைனில் முளைக்கும் மோசடிக் கும்பல், ஆசை மற்றும் பயம் உள்ளிட்ட உணர்ச்சிகளை அடுத்தடுத்து தூண்டிவிட்டு காரியத்தை கனகச்சிதமாக முடித்துக்கொள்கின்றனர்.

ஆன்லைன் மோசடி
ஆன்லைன் மோசடி

ஏமாளி நபரை தேர்வு செய்ததும் அவரது தரவுகள் அனைத்தையும் சேகரிக்கிறார்கள். பின்னர் திட்டமிட்ட மோசடி க்ரைம் நாடகம் மூலமாக அந்த தொகையை சுருட்டிக் கொள்கிறார்கள். இவ்வாறு ஃபெட்எக்ஸ் பெயரிலான மோசடி மட்டுமன்றி, வாட்ஸ் அப் அழைப்புகள், இணைப்புகள் ஆகியவற்றை அனுப்பியும் அலைபேசி வாயிலாகவே பெரும் ஆன்லைன் கொள்ளையை சாதுரியமாக நிகழ்த்தி விடுகின்றனர்.

இந்த வகையிலான மோசடியை தவிர்க்க விரும்புவோர் முதலில் பேராசை அறவே கூடாது. அடுத்ததாக வீண் அச்சமும் கூடாது. ’அருகிலுள்ள காவல் நிலையத்தில் விசாரிக்கவும்; அவர்களிடம் பதிலளித்துக் கொள்கிறேன்’ என்று அழைப்பை துண்டித்து விடலாம். இம்மாதிரி அழைப்புகள் வரும்போது இணைப்பில் தொடர்வதே சிக்கல்களை அதிகரிக்கச் செய்யும்.

அதே போன்று எஸ்எம்எஸ், வாட்ஸ் ஆப், இமெயில் என எந்த ரூபத்தில் அநாமதேய இணைப்புகள் வந்தாலும் அவற்றை தவிர்ப்பது நல்லது. இவற்றையெல்லாம் மீறி ஏமாற நேரிட்டாலும், உடனடியாக மத்திய அரசின் 1930 என்ற எண் அல்லது தேசிய சைபர் க்ரைம் புகாரளிப்புக்கான தளத்தை நாடியும் புகாரை பதிவு செய்யலாம். எவ்வளவு விரைவாக புகாரளிக்கிறோமோ அவ்வளவு விரைவாக நிவாரணம் பெறுவது சாத்தியப்படும்.

இதையும் வாசிக்கலாமே...

அயோத்தி ராமர் கோயிலுக்கு வரும் 200 பாகிஸ்தான் யாத்ரீகர்கள்... வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்!

நயன்தாரா, சமந்தாவுக்கு போட்டியாக களமிறங்கும் சினேகன் மனைவி; கலாய்க்கும் ரசிகர்கள்!

“நியாயமா ஆண்டவரே...”  கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு புகார்!

“பயந்து ஓடாதீங்க...” ரேபரேலி விவகாரத்தில் ராகுலை சீண்டிய பிரதமர் மோடி!

செல்போன் லைட்டில் அறுவை சிகிச்சை... தாயும் சேயும் உயிரிழந்த சோகம்!

x
காமதேனு
kamadenu.hindutamil.in