மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படை... மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

கச்சத்தீவு அருகில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் நிகழ்வாக உள்ளது. இதைத் தடுக்க ஏன் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்திலிருந்து வங்கக் கடல், அரபிக் கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர். இருப்பினும் இலங்கை அருகே மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள், அடிக்கடி கைது செய்யப்படுவதும், அவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாக மாறிவிட்டது.

மாதத்திற்கு குறைந்தபட்சம் 20 முதல் 30 மீனவர்களை படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்து அழைத்துச் செல்வதும், பின்னர் மீனவர்கள் மட்டும் விடுவிப்பதும் வாடிக்கை ஆகிவிட்டது. இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்படும் படகுகள், திரும்ப வழங்கப்படாமல் ஆண்டுக் கணக்கில் அங்கேயே கிடந்து சேதமடைவதால், மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு வருகிறது.

நடுக்கடலில் தமிழக மீனவர்கள்
நடுக்கடலில் தமிழக மீனவர்கள்

இந்த நிலையில், கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த 6 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கடந்த ஜனவரி 22ம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, மீனவர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மவுரியா, கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீறி இலங்கை அரசு செயல்படுகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க தூதரக அளவில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என வலியுறுத்தினார்.

நடுக்கடலில் தமிழக மீனவர்கள்
நடுக்கடலில் தமிழக மீனவர்கள்

மேலும், இன்றும் 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த பிரச்சினை குறித்து தீர்வு காண மத்திய - மாநில அரசுகள் இணைந்த கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ”கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுதி இருக்கிறார். கைது செய்யப்படும் மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு நாளைக்கு 250 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன், “இந்த விவகாரம் தொடர்பாக தூதரக அளவில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். வழக்கு தொடர்பாக விளக்கமளிக்க அவகாசம் வேண்டும்” என வலியுறுத்தினார்.

இதையடுத்து, “மீனவர்கள் கைது நடவடிக்கை என்பது தொடர் நிகழ்வாக இருக்கிறது” என ஆதங்கம் தெரிவித்த நீதிபதிகள், “இதை தடுக்க ஏன் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை ஏன் இந்த நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்கிறது?” என்று கேள்வி எழுப்பினர்.

பின்னர், இந்த வழக்கு தொடர்பாக விளக்கமளிக்க மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 11-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம்... பிரதமர் பெயரில் போலி கடிதம் தயாரித்த இளம்பெண்!

'லால் சலாம்' படத்தை வெளியிட தடை!?

கட்சியைக் கைப்பற்ற சாட்டை துரைமுருகன் திட்டம்... என்ஐஏ சோதனையில் வெளியான அதிர்ச்சி!

நடிகர் விஜயால் இத்தனை கோடி நஷ்டமா?: தீயாய் பரவும் தகவல்!

நடிகை ஜெயலட்சுமிக்கு கொலைமிரட்டல்... போலீஸில் பரபரப்பு புகார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in