அரசு மருத்துவமனையின் அலட்சியம்... தவறான சிகிச்சையால் உடலுறுப்புகள் செயலிழந்த தந்தை; தவிக்கும் குடும்பம்

மருத்துவர்களின் அலட்சியத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மனு
மருத்துவர்களின் அலட்சியத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மனு

திருவள்ளூர் அருகே அரசு மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக, தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு இடுப்புக்கு கீழ் உள்ள உடல் உறுப்புகள் செயல்படாமல் தவித்து வரும் தந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென மனநலம் குன்றிய மகன் உட்பட குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தன் குமார். இவரது மனைவி சாவித்ரி. இவர்களுக்கு மனநலம் குன்றிய நவீன் குமார் (14) மற்றும் புவனேஷ் (9) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். கூலி வேலை செய்து குடும்பத்தை கந்தன் குமார் காப்பாற்றி வந்ததோடு, மகன் நவீன்குமாருக்கும் சிகிச்சைகளை மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென, கந்தன் குமாருக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்துள்ளனர்.

திருவள்ளூர் அரசு மருத்துவமனை
திருவள்ளூர் அரசு மருத்துவமனை

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் கட்டி இருப்பதாகவும் அதனை அறுவை சிகிச்சை செய்து நீக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். மார்ச் 23ம் தேதி அவருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்வதாக கூறி முதுகு தண்டுவடத்தில் மயக்க ஊசி செலுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் முதுகில் செலுத்தப்பட்ட மயக்கம் ஊசியில் இருந்த நீடில், சுமார் 8 சென்டிமீட்டர் ஆழத்தில் முதுகுக்குள் உடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அவர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு முதுகு தண்டுவடத்தில் இருந்து 8 சென்டிமீட்டர் நீள நீடில் அகற்றப்பட்டது.

உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள கந்தன் குமார்
உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள கந்தன் குமார்

ஆனால் அதன் பின்னர் கந்தன் குமாரின் உடலில் இடுப்புக்கு கீழ் உள்ள எந்த உடலுறுப்பும் வேலை செய்யாமல் செயல் இழந்து விட்டது. இது குறித்து மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டபோது அவர்கள் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் குடும்பத்தின் ஒரே வருமான ஆதாரமாக இருந்த கந்தன் குமார் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால், மொத்த குடும்பமும் வாழ வழியின்றி தவித்து வருகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட கந்தன் குமாருக்கு உரிய சிகிச்சை அளித்து அவரைக் காப்பாற்ற வலியுறுத்தியும், தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் கந்தன் குமாரின் மனைவி சாவித்திரி உட்பட அவரது உறவினர்கள் இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்திருந்தனர்.

தந்தையை காப்பாற்றித்தரக் கோரி மனநலம் பாதிக்கப்பட்ட மகன் நவீன்குமாரும், புவனேஷும் கதறல்
தந்தையை காப்பாற்றித்தரக் கோரி மனநலம் பாதிக்கப்பட்ட மகன் நவீன்குமாரும், புவனேஷும் கதறல்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கந்தன் குமாரின் மனநலம் பாதிக்கப்பட்ட மகன் நவீன் குமார், ”எங்க அப்பாவை எப்படியாவது நடக்க வைங்க” என்று கண்ணீர் மல்க பேசியது, அங்கு இருந்த அனைவரையும் கலங்க வைத்தது.

இதையும் வாசிக்கலாமே...

கடந்த 6 மாதங்களில் 31 சதவீத மசாலாக்கள் நிராகரிப்பு; இந்தியாவின் மசாலாக்களை ஆராயும் அமெரிக்கா!

நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு 'அம்பேத்கர் சுடர் விருது'... விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!

பகீர்... ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணியைக் காப்பாற்றிய பெண் போலீஸ்: பதற வைக்கும் வீடியோ வைரல்!

உளவுத் துறை எச்சரிக்கை: நாடு முழுவதும் அமலாக்கத் துறை அலுவலகங்களுக்கும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு!

முதல் மதிப்பெண் எடுக்காமலேயே இருந்திருக்கலாம்... உருவ கேலிக்குள்ளான மாணவி வேதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in