அண்ணாமலையின் தூண்டுதலில் ஆபாச வீடியோக்களை அனுப்பி மிரட்டுகிறார்கள் - வீரலட்சுமியின் பகீர் புகார்!

வீரலட்சுமி
வீரலட்சுமி

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தூண்டுதலின் பெயரில் பாஜகவினர் ஆபாச வீடியோக்களை அனுப்பி கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி தமிழர் முன்னேற்ற படை கட்சியின் தலைவர் வீரலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று தமிழர் முன்னேற்றப் படை கட்சியின் தலைவர் வீரலட்சுமி புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மாநில மகளிர் அணி பொருளாளர் மாலினி ஜெயச்சந்திரன் ஆகியோரின் தூண்டுதலின் பெயரில் பாஜகவினர் தனக்கு மிரட்டல் விடுப்பதாகவும், ஆபாச வீடியோக்களை தொடர்ந்து அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

வீரலட்சுமி
வீரலட்சுமி

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாஜக மாநில மகளிர் அணி பொருளாளர் மாலினி ஜெயச்சந்திரன் பல்வேறு ஊர்களில் பல்லாயிரம் கோடி ரூபாயில் சொத்துக்களை வாங்கியுள்ளார். அவர் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதாக பொதுமக்கள் என்னை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் கடந்த ஆறு மாதங்களாக அவரது சொத்துக்களை தேடி அலைந்து சுமார் 1500 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதை கண்டறிந்துள்ளோம்.

இந்த சொத்துக்கள் குறித்து ஐந்து முறை வருமானவரித்துறை இயக்குனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துடன், இவர்கள் பெயரில் உள்ள சொத்து பத்திரங்களை ஒப்படைத்துள்ளேன். இன்னும் 3 ஆயிரம் கோடி அளவிற்கு இவர்களுக்கு சொத்துக்கள் இருக்கிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு சாதாரண எல்ஐசி ஏஜென்ட் ஆக இருந்த பெண்மணிக்கு தற்போது எப்படி இவ்வளவு சொத்து வந்தது” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “மாலினி ஜெயச்சந்திரன் பாஜகவில் கருப்பு பணத்தை வைத்திருப்பவர்களிடம் இருக்கும் பணத்தை வெள்ளையாக மாற்றி கொடுக்கும் வேலையை பார்த்து வருகிறார். இதை நான் நான் வெளிப்படுத்தி வந்ததன் அடிப்படையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தூண்டுதலின் பெயரில், பாஜகவினர் என்னை தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி வருகின்றனர். எனக்கு 15-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை தொடர்ந்து அனுப்பி மன உளைச்சலுக்கு உள்ளாக்கி கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

அண்ணாமலை பாஜக
அண்ணாமலை பாஜக

நான் தொடர்ந்து புகார் அளித்துள்ள நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இது குறித்து ஏன் கண்டு கொள்ளவில்லை. பாஜகவிற்கும் அந்தப் பெண்மணிக்கும் சம்பந்தமில்லை என்றால் ஏன் அவரை கட்சியிலிருந்து நீக்கவில்லை.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ஐபிஎஸ் மூளையை பயன்படுத்தி, ரவுடிகளாக இருந்து பல கோடி சொத்துகளை சேர்த்து வைத்துள்ளவர்களை கண்டறிந்து அமலாக்கத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவி விட்டு அவர்களை கட்சியில் சேர்க்கிறார். பாஜகவினர் என்னை எந்த அளவிற்கு மிரட்டினாலும் நான் அஞ்ச மாட்டேன் பயப்பட மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

விஜயின் அரசியல் கட்சி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “தற்போது விஜய் கட்சி தொடங்கியுள்ளார் என்றால் தனது பணத்தை பாதுகாக்க மட்டுமே” என்று வீரலட்சுமி தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in