
திருமணமான ஒருவர் தன்னை விஜிலென்ஸ் அதிகாரி என்று ரயிலில் உடன் பயணித்த இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி, பாட்டாகுறிச்சி கிராமத்தில் வசித்து வருபவர் காயத்ரி (27). கடந்த 2017-ம் ஆண்டு மதுரை தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அடிக்கடி ரயிலில் பயணம் செய்தபோது, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், சுந்தரநாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்த அருள்ராயன் (40) என்பவரும் உடன் பயணித்துள்ளார்.
அப்போது தன்னை விஜிலென்ஸ் அதிகாரி என காயத்ரியுடன் அருள்ராயன் அறிமுகம் செய்துகொண்டு பேசி வந்துள்ளார். இந்த பழக்கம் நட்பில் இருந்து காதலாக மாற, இருவரும் மதுரையில் வீட்டிற்குத் தெரியாமல் திருமணமும் செய்துள்ளனர். தனியாக வீடு எடுத்து 2 ஆண்டுகளாக குடித்தனமும் நடத்தியுள்ளனர்.
தன்னைக் கணவர் வீட்டிற்கு அழைத்துச்செல்ல காயத்ரி வலியுறுத்தியுள்ளார். தொடர் வேலை, விடுமுறை இல்லை என அருள்ராயன் பல்வேறு காரணங்களைக் கூறி அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் தட்டிக்கழித்து வந்துள்ளார். இதனிடையே, நாட்கள் செல்லச்செல்ல இருவருக்கும் இதுதொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒருகட்டத்தில் அருள்ராயன், தனது மனைவியின் சொந்த ஊரான பாட்டக்குறிச்சிக்கு சென்று குடித்தனம் நடத்தி வந்துள்ளார். இதனிடையே, கணவர் மாதத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வீட்டிற்கு வந்து செல்வதை உணர்ந்த காயத்ரி, தனது குடும்பத்தாரிடம் கணவர் குறித்து விசாரிக்கச் சொல்லியுள்ளார்.
அவர்களும் சுந்தரநாச்சியார்புரம் பகுதியில் சென்று விசாரித்தபோது, அவர் விஜிலென்ஸ் அதிகாரியே இல்லை என்பது தெரியவந்தது. உண்மையைக் கண்டறிந்த பெண் வீட்டார் அருள்ராயனிடம் கடுமையான வாக்குவாதம் செய்துள்ளனர்.
இதுகுறித்து புளியங்குடி காவல் நிலையம் மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரை ஏற்ற புளியங்குடி காவல் துறையினர், இருதரப்பையும் காவல் நிலையம் அழைத்து விசாரணை நடத்தினர். அங்கு அருள்ராயன் காயத்ரியை கொலை செய்வதாக மிரட்டியுள்ளார். இதனையடுத்து, காயத்ரி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தியபோது, அருள்ராயன் ஏற்கெனவே 2 திருமணம் ஆனவர், காயத்ரியை ஏமாற்றி மூன்றாவதாக திருமணம் செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.