சென்னையில் இரு வெவ்வேறு இடங்களில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 4 பேர் ரயில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சேகர் (40), சுப்பிரமணி(50), மற்றும் துரை (50). இவர்கள் மூவரும் பெயிண்டராக வேலை பார்த்து வந்தனர். கடந்த சில நாட்களாக மூவரும் பொன்னேரி தச்சூர் கூட்ரோடு பகுதியில் தங்கி பெயிண்டிங் வேலை பார்த்து வந்துள்ளனர். நேற்று வேலை முடிவுற்றதையடுத்து மூவரும் இரவு தங்கள் சொந்த ஊரான சேலத்திற்கு செல்ல புறப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து சேகர்,சுப்பிரமணி, துரை ஆகிய மூவரும் பொன்னேரி ரயில் நிலையத்திற்கு வந்து அங்கிருந்து சென்ட்ரல் செல்வதற்காக டிக்கெட் வாங்கியுள்ளனர். பின்னர் மூவரும் சென்ட்ரல் செல்லும் லோக்கல் ரயிலை பிடிப்பதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது அவ்வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் சேகர் மற்றும் சுப்பிரமணி மீது மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த துரை, உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சேகர், சுப்பிரமணி ஆகிய இருவரது உடல்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் குரோம்பேட்டை அருகே சம்பவம் நடைபெற்றுள்ளது. சென்னை குரோம்பேட்டை நேரு நகர் பகுதி சேர்ந்தவர் பிரணவ் (23 ). இவர் ராயபுரத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார் .நேற்று இரவு பணி முடிந்து பிரணவ் ரயிலில் குரோம்பேட்டை ரயில் நிலையம் வந்து இறங்கினார். அங்கிருந்து வெளியே செல்லுவதற்காக தண்டவாளத்தை கடந்துள்ளார்.
அப்போது தாம்பரத்தில் இருந்து வந்த மின்சார ரயில் மோதி பிரணவ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதே போல் நூங்கம்பாத்தில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்த அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (39) நேற்று இரவு பணி முடிந்து ரயிலில் குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் வந்து இறங்கினார். பின்னர் வெளியே செல்வதற்காக தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த மின்சார ரயில் மோதி சதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் ரயில்வே போலீஸார் பிரணவ்,சதீஷ் ஆகியோரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவ்விபத்து குறித்து தாம்பரம் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் நேற்று இரவு இரு வெவ்வேறு இடங்களில் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற நான்கு பேர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும். சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
குட்நியூஸ்... இந்திய கடற்படையில் 4,108 வேலைவாய்ப்புகள்: ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!
அதிர்ச்சி: ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை; மீட்பு பணி தீவிரம்!
சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்... மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு விடுமுறை!
வங்கிக் கணக்கை முடக்குவதாக பாஜக மிரட்டியது... பிரேமலதா பகீர் குற்றச்சாட்டு!