16 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 2 வயது குழந்தை... 20 மணி நேரம் போராடி பத்திரமாக மீட்பு!

16 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வது சாத்விக்
16 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வது சாத்விக்

கர்நாடகாவில் 16 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் சிக்கிய இரண்டு வயது குழந்தை 20 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாவட்டத்தில் தற்போது தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது. இதனால் பல்வேறு இடங்களிலும் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, சந்திரப்பா என்பவர் நிலத்தில் ஆழ்துளை கிணறு ஒன்று தோண்டப்பட்டுள்ளது. சுமார் 16 அடி ஆழத்திற்கு தோண்டிய போது, கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த வாகனம் பழுதடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த குழியை மூடாமல் விட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலை 6:30 மணியளவில் அந்த வழியே சென்ற ஒருவர் ஆழ்துளை கிணற்றிலிருந்து குழந்தை ஒன்று அழுகும் சத்தம் கேட்டு சந்தேகம் அடைந்து உள்ளே எட்டிப் பார்த்துள்ளார். அப்போது குழந்தை ஒன்று உள்ளே இருப்பதை அறிந்தவுடன் அவர் உடனடியாக அருகாமையில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்தனர். அப்போது தான், ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சந்திரப்பாவின் 2 வயது பேரன் சாத்விக் என்பது தெரியவந்தது.

16 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தையை 20 அடி ஆழ கிணறு தோண்டி மீட்புப்படையினர் மீட்டனர்
16 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தையை 20 அடி ஆழ கிணறு தோண்டி மீட்புப்படையினர் மீட்டனர்

குழந்தை 16 அடி ஆழத்தில் சிக்கி இருப்பது தெரியவந்த நிலையில், தலைக்குப்புற விழுந்து இருந்ததும் தெரியவந்தது. உடனடியாக குழந்தைக்கு ஆக்ஸிஜன் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதோடு, அருகில் 20 அடி ஆழத்திற்கு மற்றொரு கிணறு தோண்டி குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. சுமார் 20 மணி நேரமாக மீட்புப் படையினர் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று மதியம் 1.30 மணி அளவில் சிறுவன் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in