ரஜினி குறித்து ஆவேசம்... எதிர்க்கும் தமிழர்கள்... நகரியில் ஹாட்ரிக் வெற்றியைப் பெறுவாரா ரோஜா?!

ஜெகன்மோகன் ரெட்டியுடன் ரோஜா...
ஜெகன்மோகன் ரெட்டியுடன் ரோஜா...

கடந்த இரு சட்டசபை தேர்தல்களிலும் ஆந்திர மாநிலம், நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடிய நடிகை ரோஜா இந்த முறை ஹாட்ரிக் அடிப்பாரா என்கிற எதிர்பார்ப்பு ஆந்திர அரசியலில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. இதுவரை நான்கு முறை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டுள்ள நடிகை ரோஜா, இரண்டு முறை தோல்விகளையும், இரண்டு வெற்றிகளையும் பார்த்திருக்கிறார்.

ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சராக இருக்கிறார் நடிகை ரோஜா. நகரி சட்டசபை தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளராக அந்த மாநிலத்தின் சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். ஆந்திராவின் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் மே 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 25 லோக்சபா தொகுதிகளுக்கும் அன்றைய தினமே தேர்தல் நடைபெறுகிறது.

ரோஜா - சந்திரபாபு நாயுடு
ரோஜா - சந்திரபாபு நாயுடு

நடிகை ரோஜா அரசியல் களத்தில் 1999ல் அடியெடுத்து வைத்தார். சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகியவர் பின்பு, 2011ல் ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சியில் இணைந்தார். கட்சியில் இணைந்த மூன்று ஆண்டுகளிலேயே அவருக்கு ஆந்திர மாநிலம், நகரி தொகுதியில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அவருக்கு முதல் வெற்றி வாய்ப்பு எளிதாகவே கிட்டியது. 73 ஆயிரத்து 924 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றார். அப்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எதிர்கட்சியாக இருந்தது. இதனால், எதிர்கட்சி எம்எல்ஏ-வாக ஆளும் கட்சியைக் கண்டித்து நகரியில் பல போராட்டங்களை முன்னெடுத்து மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்தார் ரோஜா.

ஆந்திர அமைச்சர் ரோஜா, திருப்பதி
ஆந்திர அமைச்சர் ரோஜா, திருப்பதி

அடுத்தடுத்து ரோஜாவின் கிராஃப் உயர்ந்ததால் அடுத்து வந்த 2019 சட்டமன்றத் தேர்தலிலும் மீண்டும் நகரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. இந்த முறை பலத்த எதிர்ப்புகளுக்கிடையே குறைந்த வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று, இரண்டரை வருடங்களுக்குப் பின்னர் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பதவி பெற்றார்.

ஜெகன் மோகன் ரெட்டியை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுப்பது, நகரி மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது என்று தொகுதியில் பரபரப்பாக வலம் வந்த ரோஜா, அமைச்சர் ஆன பின்னர் தொகுதி மக்களைக் கண்டுக்கொள்ளவில்லை என்கிறார்கள். நகரி தொகுதியில் நடிகை ரோஜாவுக்கு இம்முறை எதிர்ப்புகள் சொந்த கட்சியில் இருந்தே வலுக்கிறது என்கிறார்கள். பிரச்சாரத்திற்கும் சொந்த கட்சியினர் யாரும் ஒத்துழைக்காத நிலையில், தனது கணவருடன் பிரச்சாரம் செய்து வந்தார் ரோஜா.

நடிகை ரோஜா
நடிகை ரோஜா

ஜெகன் மோகன் ரெட்டி கட்சியில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வரும் ரோஜா மூன்றாவது முறையாக நகரியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜக கூட்டணி வேட்பாளராக காலி பானு பிரகாஷ் போட்டியிடுகிறார்.

நடிகை ரோஜா
நடிகை ரோஜா

தொகுதியில் கணவர் ஆர்.கே.செல்வமணியின் தலையீடும், ரோஜாவின் சகோதரர் தலையீடும் அதிகம் இருப்பதாக கட்சியினர் புலம்புகின்றனர். இதுவும் இம்முறை ரோஜாவுக்கு எதிராக திரும்பியிருக்கிறது. ஆந்திராவில் ஜனசேனா- தெலுங்கு தேசம்- பாஜக ஆகியோர் கூட்டணியும் இன்னொரு பக்கம் ஒய்எஸ்ஆர் கட்சி தனித்தும் போட்டியிடுகிறது. இதில் ரோஜா ஹாட்ரிக் வெற்றி பெறக் கூடாது என்பதற்காக தெலுங்கு தேசம் கூட்டணி முனைப்பு காட்டி வருகிறது. சந்திரபாபுவை கடுமையாக விமர்சித்து அரசியலில் வெற்றிப் படிகளில் ஏறத் துவங்கிய ரோஜா, சந்திரபாபுவுக்கு ஆதரவு தெரிவித்ததால் ரஜினியையும் கடுமையாக விமர்சித்தார். ரஜினி எதிர்ப்பை நகரி மக்கள் ரசிக்கவில்லை என்கிறார்கள். 60,000க்கும் மேற்பட்ட தமிழர்களின் வாக்குகள் நகரியில் இருக்கிறது. நடிகை ரோஜாவின் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதில் இந்த வாக்குகள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. சொந்த கட்சியினரின் எதிர்ப்பு, கணவர், சகோதரரின் தலையீடு, ரஜினி குறித்த பேச்சு, தொகுதி மக்களின் அதிருப்தி என இத்தனையையும் மீறி மூன்றாவது முறையாக நடிகை ரோஜா வெற்றிப் பெறுவாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக நிற்கிறது.

இதையும் வாசிக்கலாமே...

மகளிர் மல்யுத்தம்... பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் நிஷா தஹியா!

மதுரையில் அதிர்ச்சி... காவல் ஆய்வாளர் வீட்டு கதவை உடைத்து 250 பவுன் நகைகள் கொள்ளை!

இங்கிலாந்தில் மன்னரைத் தொடர்ந்து இளவரசியும் மருத்துவமனையில் அனுமதி... பதறும் மக்கள்!

ஆந்திராவில் பண மழை... விபத்தில் சிக்கிய வேனிலிருந்து கட்டுக் கட்டாக கொட்டிய கோடிகள்!

லாரி மீது மோதி பற்றி எரிந்த கார்... மணமகன் உட்பட 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in