தேநீர் நேரம் - 9 : டி.ஆர்.மகாலிங்கம் மீது கல்லெறிய மறுத்த சீர்காழி!

அகத்தியர் படத்தில் டி.ஆர்.மகாலிங்கத்துடன் சீர்காழி கோவிந்தராஜன்...
அகத்தியர் படத்தில் டி.ஆர்.மகாலிங்கத்துடன் சீர்காழி கோவிந்தராஜன்...

துவக்க காலத் தமிழ் சினிமாவில் நாயகனாகக் கோலோச்சுவதற்கு முதற்பெரும் தகுதி என்னவாக இருந்தது தெரியுமா? சொந்தக் குரலில் நன்றாகப் பாடத்தெரிந்திருக்க வேண்டும். நன்றாகப் பாடவேண்டுமென்றால் முறைப்படி இசையில் நல்ல பயிற்சி இருப்பதும் அவசியம். அப்படித்தான் பி.யூ.சின்னப்பா என்ற பெரும் பாட்டுக்காரர் சினிமாவுக்கு நாயகனாக வந்தார். அப்படித்தான் எம்.கே.தியாகராஜ பாகவதர் வந்தார். அதிலும் பாகவதருக்கு சற்றே கூடுதல் கவர்ச்சி இருந்தது. இளமை பொங்கும் கட்டிளம் காளைபோல தோற்றத்திலும் மிளிர்ந்த அவர்தான் தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்பட்டார்.

எம்.கே.தியாகராஜ பாகவதர்
எம்.கே.தியாகராஜ பாகவதர்

இவர்களுக்கு முன்பே, சினிமா பேசத்தொடங்காத காலத்திலேயே கர்னாடக செவ்விசை உலகிலும் தொழில்முறை மேடை நாடகவுலகிலும் கோலோச்சிய இன்னொரு பாட்டுக் கலைஞர் செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா. இவர் வெங்கலக் குரலுக்குச் சொந்தக்காரரான கொடுமுடி கோகிலம் என்ற கே.பி.சுந்தராம்பாளைக் காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டவர்.

கிட்டப்பா
கிட்டப்பா

நாடகத்திலும் சினிமாவின் துவக்க காலத்திலும் பாடும் திறன் பெற்றவர்தான் நாயகனாக வலம்வர முடியும் என்ற நிலைமை டி.ஆர்.மகாலிங்கம் காலம் வரையில் நீடித்தது. ஆமாம், டி.ஆர்.மகாலிங்கம்தான் சொந்தக் குரலில் பாடி நடிக்கிற கதாநாயகப் பாரம்பரியத்தின் கடைசி வாரிசு. அவருக்கு கிட்டாபாவின் எதிரொலி என்ற சிறப்பும் உண்டு. கிட்டப்பாவைப் போன்ற சாரீரம் அவருடையது என்பதே ரசிகர்கள் அவரிடம் மயங்கிடக் காரணமாக இருந்தது.

இலங்கையில் நடைபெற்ற ஒலிப்பதிவு ஒன்றில் கிட்டப்பா மற்றும் குழுவினர்...
இலங்கையில் நடைபெற்ற ஒலிப்பதிவு ஒன்றில் கிட்டப்பா மற்றும் குழுவினர்...

சிறுவயதிலேயே நாடக மேடைக்கும், அதன் தொடர்ச்சியாக சினிமாவுக்கும் வந்துவிட்டார் மகாலிங்கம். ஆமாம்... 12 வயதில் நாடகங்களில் பாடி நடிக்கத் தொடங்கிவிட்ட அவர், தனது 13- வது வயதிலேயே ஏவிஎம்மின் ‘நந்தகுமார்’ (1938) திரைப்படத்தின் வாயிலாக சினிமாவுக்கும் வந்துவிட்டார். ‘நந்தகுமார்’ வெற்றிப்படமாக அமையவில்லை என்றாலும் அதில் கிருஷ்ணர் வேடமேற்ற மகாலிங்கத்திற்கு நல்ல பெயர் கிடைத்தது. மகரக் கட்டு உடையாத ஒரு சிறுவனின் குரலாக அவரின் குரல் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. அதைத் தொடர்ந்து ‘பக்தப் பிரகலாதா’, ‘சதிமுரளி’, ‘பரசுராமர்’, ‘பூலோக ரம்பை’ படங்கள் அவருக்கு வரிசை கட்டின.

பி.யூ.சின்னப்பாவுடன் டி.ஆர்.மகாலிங்கம்
பி.யூ.சின்னப்பாவுடன் டி.ஆர்.மகாலிங்கம்

வாலிபனான டி.ஆர்.மகாலிங்கத்துக்கு ஏவிஎம் ‘ஸ்ரீவள்ளி’ படத்தில் வாய்ப்பளித்தது. "காயாத கானகத்தே நின்றுலாவும் நற்காரிகையே..." - என்று அச்சு அசல் கிட்டப்பாவை அப்படியே தன் குரலில் பிரதிபலித்தார் மகாலிங்கம். ரசிகர்கள் கேட்டுக் கிரங்கிப்போனார்கள். படத்தில் அவருக்கு ஜோடி ருக்மணி. பிரபல நடிகை லட்சுமியின் தாயார். ருக்மணியே மகாலிங்கத்துடன் இணைந்து பாடியிருந்தார். பாடல்களைக் கேட்டபோது தயாரிப்பாளர் மெய்யப்ப செட்டியாருக்கு அச்சம் ஏற்பட்டுவிட்டது.

ஸ்ரீவள்ளி படத்தில்...
ஸ்ரீவள்ளி படத்தில்...

ருக்மணியின் குரல் மகாலிங்கத்தின் குரலின் கம்பீரத்தோடு ஒட்டவே இல்லை. இப்படியே படத்தை வெளியிட்டால் நிச்சயமாகப் படம் படுதோல்வியடையும் என்று கருதினார் அவர். எனவே, பி.ஏ.பெரியநாயகியைப் பாடவைத்து, ருக்மணியின் வாயசைப்புக்கு ஏற்ப அதனை ஒலிப்பதிவு செய்திட முடிவெடுத்தார். ருக்மணியோ அடம்பிடித்தார். தன் குரலை மாற்றுவதற்கு ஒப்புக்கொள்ள மறுத்தார். தன் குரலை மாற்ற வேண்டுமென்றால் தொடர்ந்து ஏவிஎம் தயாரிக்கும் 3 படங்களில் நடித்துத்தர வேண்டும் என்று தன்னுடன் அந்த நிறுவனம் செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் எனும் நிபந்தனையைப் போட்டார் ருக்மணி.

ஒலிப்பதிவு ஒன்றில்...
ஒலிப்பதிவு ஒன்றில்...

படத்தின் வெற்றிக்கு ருக்மணியின் குரலை மாற்றுவது ஒன்றுதான் வழி என்று தீர்க்கமாக நம்பிய செட்டியார், அந்த ஒப்பந்தத்தை ரத்துசெய்தார். பெரியநாயகியின் குரலில் பாடல்கள் பதிவாயின. டி.ஆர்.மகாலிங்கத்தின் குரலோடு பொருந்தியது அந்தப் புதிய குரல். எனவே, படமும் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை ஈட்டியது. பாடல்கள் குறித்துக் கேட்கவே வேண்டாம். தமிழகத்தின் பட்டிதொட்டிகளிலெல்லாம் ’ஸ்ரீவள்ளி’ படப்பாடல்களே நீக்கமற ஒலித்தன.

அதனைத் தொடர்ந்து ஏவிஎம் ‘நாம் இருவர்’ படத்தை எடுத்தது. டி.ஆர்.மகாலிங்கம்தான் அந்தப் படத்திலும் நாயகன். அதுவும் மகத்தான வெற்றி. அடுத்து டி.ஆர்.மகாலிங்கத்தை வைத்து ‘வேதாள உலகம்’ எடுத்தது ஏவிஎம். பெரும் வெற்றி இல்லை என்றாலும் நட்டமில்லை.

‘ஸ்ரீவள்ளி’, ‘நாம் இருவர்’ படங்களுக்குப் பிறகு தமிழ்த் திரையுலகில் முதன்முதலில் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கும் மெகா ஸ்டாராக உயர்ந்தார் டி.ஆர்.மகாலிங்கம். அப்போது அவருக்கு வயது 23. நடிக்கத் தொடங்கி 10 ஆண்டுகளில் இப்படியானதொரு அபரிமித வளர்ச்சி கண்டார் டி.ஆர்.மகாலிங்கம். அவரின் குரல் மற்ற எந்தப் பாடகரின் குரலைப் போலவும் இல்லாமல் தனித்துவமானதாகத் திகழ்ந்தது. அவரைப்போல பிற பாடகர்களால் எளிதில் அந்த உச்சஸ்தாயியைத் தொட இயலவில்லை. அத்துடன் அவரது பாடுந்திறனில் அனாயசமாக வெளிப்பட்ட குழைவுகளும், இசைநுட்ப சங்கதிகளும் இசை ரசிகர்களை மட்டுமல்லாமல் இசை அறிஞர்களையும் ஆய்வாளர்களையும் பிரமிக்க வைத்தது.

நிகழ்ச்சி ஒன்றில் சீர்காழி கோவிந்தராஜன்...
நிகழ்ச்சி ஒன்றில் சீர்காழி கோவிந்தராஜன்...

அவரைப்போல பாடவேண்டும் என்று இசை ஆர்வம் கொண்டோர் ஆங்காங்கே உருவாகத் தொடங்கினார்கள். அப்போது மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் ‘ஆதித்தன் கனவு’ படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. கதையில் நாயகன் ஆதித்தனாக டி.ஆர்.மகாலிங்கம் நடித்தார். துணை நடிகர்கள் பலரும் அங்கே மாத ஊதியத்தில் இருந்தார்கள். ஒரு காட்சியில் துணை நடிகர்கள் சுற்றி நின்றுகொண்டு ஆதித்தன் மீது கல்லெறிய வேண்டும். பலரும் கல்லெறிய ஒரேயொரு துணை நடிகருக்கு மட்டும் ஆதித்தனாக நடிக்கிற டி.ஆர்.மகாலிங்கத்தின் மீது கல்லெறிய மனம் வரவில்லை.

காரணம், அவர் மகாலிங்கத்தின் தீவிர ரசிகர். அதுமட்டுமல்ல, மகாலிங்கத்தை ஆதர்சமாகக் கொண்டு அவரைப்போல பாடகராக வேண்டும் என்று தானும் இசை பயின்றுவந்தார் அந்தத் துணை நடிகர். மகாலிங்கமே சும்மா தன்மீது கல்லெறியுமாறு இயல்பாகக் கூறியும், இயக்குநர் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரம் கடுமையாகக் கோபித்துக்கொண்டும் அவரால் கல்லெறிய இயலவில்லை. அந்தத் துணை நடிகரின் பெயர் கோவிந்தராஜன். அவர்தான் பின்னாளில் பிரபலமான பின்னணிப் பாடகரான சீர்காழி கோவிந்தராஜன்.

டி.ஆர்.மகாலிங்கம்
டி.ஆர்.மகாலிங்கம்

காலங்கள் கடந்தது. அதே டி.ஆர்.மகாலிங்கத்துடன் ‘அகத்தியர்’ படத்தில் சீர்காழியார் அகத்தியராக - நாயகனாக நடித்தார். இருவரும் சேர்ந்து பாடல்கூடப் பாடினார்கள். படத்தின் டைட்டிலில் தன் பெயருக்குக் கீழே தன் குருநாதர் மகாலிங்கத்தின் பெயர் வரக்கூடாது என்று உறுதிபடக் கூறிவிட்டார் கோவிந்தராஜன். மகாலிங்கமே இதை மறுத்தார். நீதானே படத்தின் நாயகன். உன் பெயர் முதலில் வருவதுதான் முறை என்றார் மகாலிங்கம். ஆனால், அன்று கல்லெறிய எவ்வளவு தயக்கம் காட்டினாரோ அதே அளவு இப்போதும் உறுதி காட்டி, இருவர் பெயரும் ஒரே வரிசையில் போடலாம் என்று யோசனை சொன்னபோதுதான் சம்மதித்தார் கோவிந்தராஜன். கலைத்துறையினர் தம் முன்னோடிகளை மனதார மதித்த பொற்காலம் அது, அல்லோ!

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க:

அகத்தியர் படத்தில் டி.ஆர்.மகாலிங்கத்துடன் சீர்காழி கோவிந்தராஜன்...
தேநீர் நேரம் 8: கடுப்பில் ஹார்மோனியத்தை எம்ஜிஆர் வீட்டுக்கு அனுப்பிய எம்எஸ்வி!

வீடியோ வடிவில் காண:

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in